தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ஆட்சியர் தகவல்
X
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக, ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை. பரதநாட்டியம். வயலின். மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு, 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தவில் நாதசுரம் ஆகிய கலைகளுக்கு, எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இசைப் பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் பயலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்துதரப்படும்.

மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும். தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணி புரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. திருகோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர, இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை தந்து, வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே, கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், டி.டி. மேலூர், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி-2 என்ற முகவரியிலும், தொலைபேசிஎண் 9487739296 தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!