பாடல்களால் சுதந்திர வேட்கையை ஊட்டிய முண்டாசுக் கவி பாரதி;படிங்க....
Bharathiyar Name in Tamil
Bharathiyar Name in Tamil
சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி. "
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் . தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
" தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
மகாகவி பாரதியார் நினைவு இல்லம் சென்னை (கோப்பு படம்)
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசகதி வையத்தேவி;
தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டியைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமஹா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள்.
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,
பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி,
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,
சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.
மகாகவி பாரதியார் நினைவு இல்லாம் புதுச்சேரி (கோப்பு படம்)
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்
1907 இல் சுப்பிரமணிய பாரதியாரால் தொகுக்கப்பட்ட தமிழ் வார இதழ்.பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில்உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (டிசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத "யங் இண்டியாஎன்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிச் சென்னை மாகாணத்தின் காவல்துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது. தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.
தேசியக் கவி
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைத்துப் பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுகளைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக்கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu