வரலாற்றில் முதல் முறையாக அரசு ஐடிஐ.,களில் 93.30% மாணவர் சேர்க்கை
ஐடிஐ சேர்வதற்கு காலஅவகாசம் (கோப்பு படம்)
2023-ம் ஆண்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 23.09.2023 அன்றைய நிலையில், 93.30% சதவீதத்தை எட்டியுள்ளது. 40 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 25.09.2023 முதல் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர், கம்மியர் மோட்டார் வண்டி, வயர்மேன், வெல்டர் போன்ற 57 பொறியியல் தொழிற்பிரிவுகளிலும் ஃபுட் ப்ரொடக்ஷன், ஆடை வடிவமைத்தல் தொழிற்நுட்பம், போன்ற 22 பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் உலகத்தரத்திலான தொழில்நுட்ப பயிற்சியினை நமது மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் M/s. டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2877 கோடி செலவில் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்கள் திறந்து வைக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னீஷியன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் ஆட்டோமேஷன், மெக்கானிக் மின்சார வாகனங்கள், அட்வான்ஸ்டு சி.என்.சி மெஷினிங், பேசிக் டிசைனர் விர்ச்சுவல் வெரிஃபையர் போன்ற நவீன தொழிற்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா பயிற்சியினை வழங்குவதுடன் அவர்களுக்கு சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சைக்கிள், மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை, விடுதி வசதி போன்றவையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் இணைந்த மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்புடன் பயிற்சியின் போதே முன்னணி தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொழிற்தேர்வில் 93.07% தேர்ச்சி பெற்றுள்ளனர் .
தொழிற் பயிற்சி நிலையங்களில் செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன் மாணவர்களை முன்னணி தொழில் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்காக அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பணியமர்வு பிரிவு உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு 80% மாணவர்கள் வளாக நேர்காணால்கள் மூலம் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நிறுவனங்களில் மாணவர்களுக்கு நேரடி செய்முறை பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu