நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற 5 வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா 11 நாட்களில் 3.50 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தகவல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 5 வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவில் 11 நாள் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. 11 வது நிறைவு நாள் நிகழ்ச்சியில்- 24 மணிநேரம் புத்தக வாசிப்புக்காக ஆரஞ் உலக சாதனையாளர் விருது ஆரஞ் நிறுவனத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 92 அரசு பள்ளி மாணவர்களால் 12 மணிநேரத்தில் தயாரிக்கப்பட்ட பொருநை இளந் தடம் என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியீட்டார். புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பொருநை நாகரீகம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்பிறகு தான் பொருநை என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. கடந்த 17.03.2022 அன்று பொருநை புத்தகத் திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வரும் காணி இன மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படத்தினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படத்தினை வெளியீட்டார்கள். இந்த புத்தகத் திருவிழா நிகழ்ச்சி 11 நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் பொருநை புத்தகத் திருவிழாவில் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டது. இப்புத்தக திருவிழாவில் நாட்டுப்புறக் கலைகளை உலகறியச் செய்யும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டது,
இலக்கியம், மருத்துவம், இயற்கை வேளாண்மை ஆகியவற்றில் தலைச்சிறந்த பேச்சாளர்கள் நாள்தோறும் சிறப்புரையாற்றினார்கள். இப்புத்த திருவிழாவினை காணவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்திட பிரத்யேகமான
உணவகங்கள் இடம்பெற்றது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் தொடர் புத்தக வாசிப்பு சாதனை நிகழ்வு இடம் பெற்றது.எழுத்தாளர்களை ஊக்குவித்து, கௌரவ படுத்தும் வகையில் நாள்தோறும் அவர்களின் படைப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. தினந்தோறும் உலகளாவியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அப்படங்களைப் பற்றி திரைப்பட இயக்குநர்களின் கருத்துரையும் இடம்பெற்றது. தினந்தோறும் புத்தகக் கண்காட்சியில் கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் சிறப்புரைகள் ஆகிய நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை தூண்டும் வகையில் தினந்தோறும் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 126 புத்தக கடைகள் அமைக்கப்பட்டது. இந்த புத்தகத் திருவிழா நிகழ்ச்சி 11 நாட்களில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகிவுள்ளது. 3.50 இலட்சம் பார்வையாளர்கள் பார்த்து பயன்பெற்றுள்ளனர்.
இந்த புத்தகத்திருவிழா துவங்குவதற்கு உறுதுனையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும்,இந்த புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், பத்திரிக்கை துறையினருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) எம்.சுகன்யா அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் இரா.சந்திரசேகர் , நாறும்பூநாதன் அவர்கள், தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத்தலைவர் ரமேஷ்ராஜா , பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் , பபாசி பொருளாளர் ஏ.குமரன், வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை க.செல்வன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்,தன்னார்வலர்கள், மாணவ-மாணவியர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu