திருக்குறள் பொருட்பாலில் உள்ள எளிய குறள்கள்..
Thirukkural in Tamil Easy
Thirukkural in Tamil Easy-திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த இலக்கியம். இந்த இலக்கியம் பதினென்கீழ்க்கனக்கு எனப்படும், பதினெட்டு நூல்களில் ஒன்று. திருக்குறள் என்பது இவ்விலக்கியத்தின் இயற்ப்பெயர் அல்ல. இவ்விலக்கியத்தில் உள்ள பாடல்கள் குறள் வெண்பா மரபில் உள்ளதால், திருக்குறள் என்ற பெயர் பெற்றது
திருக்குறள் மூன்றுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அறம், பொருள் மற்றும் காமம் (இன்பம்) என்று முப்பாலாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் பல அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள்கள் உள்ளன. ஒவ்வொரு குரளும் இரண்டு அடிகளைக் கொண்டது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் உள்ளன.
திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல். இந்நூலில் வாழ்வின் எல்லா அங்கத்தையும் கூறியுள்ளது. இதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறியை மிக சுருக்கமாகவும், எக்காலத்திற்கும் ஏற்கக்கூடிய வகையிலும் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவில் பொருட்பாலில் உள்ள எளிய குறள்களை அளித்துள்ளோம்
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
'எண்' என்று சொல்லப்படுவதும், 'எழுத்து' என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் 'கண்' என்பார்கள்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
'அழிவில்லாத சிறந்த செல்வம்' என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா
கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவது போல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்
அறிவுடைமை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்
குற்றங்கூறாமை
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்
பெரியாரை துணைக்கோடல்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான்
தெரிந்து செயல் வகை
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; 'துணிந்த பின்னர் எண்ணுவோம்' என்று எதையும் நினைப்பது குற்றமாகும்
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
தன்னை விட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்
தெரிந்து தெளிதல்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்
தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்
சுற்றந் தழால்
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்
ஆள்வினையுடைமை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்
இடுக்கண் அழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்
துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்
நட்பு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு
நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும்
பேதைமை
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும்
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
'பேதைமை' என்பதன் தன்மை யாது?' என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்
மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
உடலில் உள்ள மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்
பெருமை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்
பண்புடைமை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்
குடிசெயல்வகை
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
'ஒருவனுடைய நல்லாண்மை' என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை
உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
'யாம் வறியோம்' என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்
கயமை
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu