ஒரே பாரதம் திட்டத்தின் கீழ் தமிழக மாணவர்கள் 45 பேர் பீகாருக்கு சுற்றுப்பயணம்
திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
இந்திய அளவில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று அங்குள்ள மரபுகள், வளர்ச்சி, மக்கள்- மக்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்பம். கல்வி, உள்துறை, கலாச்சாரம், சுற்றுலாஆகியவற்றை அறிந்து கொள்கிறார்கள். இது பல்வேறு மாநிலத்தைசேர்ந்த மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதுடன் குறிப்பாக இளைஞர்களிடம் உறவை வலுப்படுத்துவதாக அமையும்.
இந்த முன் முயற்சியானது, முக்கியமாக கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சில வளாகத்திற்கு வெளியே உள்ள இளைஞர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் இளைஞர்களின் வெளிப்பாடு சுற்றுப்பயணங்களை நடத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மாணவ மாணவிகளின் இந்த சுற்றுப்பயணங்கள் ஐ.பி, ஏ.ஐ.சி.டி.இ, ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் ரயில்வே அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் யுவ சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் திருச்சி என் ஐ டி கல்லூரி பீகாரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் பாட்னாவிற்கு யுவ சங்கம் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து உள்ளது.
இது குறித்து திருச்சி என். ஐ .டி. இயக்குனர் அகிலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு செல்வார்கள்.அது போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு மே மாதம் 8 முதல் மே 18 வரை சுற்றுலா செல்கின்றனர்.
இதற்காக தமிழகத்திலிருந்து ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர். இதில் 45 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 23 பெண்கள் 22 ஆண்கள் அடங்குவார்கள். இதில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் என இருபாலரும் சமநிலையில் இருக்குமாறு மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் இதில் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் மாணவிகள் மட்டுமல்லாது சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றார்கள்.
இதில் 18 பேர் திருச்சி என். ஐ. டி. கல்லூரியில் இருந்து முதல் முறையாக வெளி மாநிலத்திற்கு செல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.இதேபோல், பீஹாரில் இருந்து 50 பேர் கொண்ட யுவ சங்கக் குழு மே 7 முதல் மே 14 வரை தமிழகம் வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu