பள்ளிகள் திறப்பு அன்றே வழங்க தயார் நிலையில் 2.68 கோடி பாட புத்தகங்கள்

பள்ளிகள் திறப்பு அன்றே வழங்க தயார் நிலையில் 2.68  கோடி பாட புத்தகங்கள்
பள்ளிகள் திறப்பு அன்றே வழங்க தயார் நிலையில் 2.68 கோடி பாட புத்தகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறந்த அன்று மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறந்தவுடன் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான முழு புத்தகங்கள் வழங்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது .

புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் முடித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 2 .68 கோடி விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள

குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் பாடநூல் கழகம் ஈடுபட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மழையில் புத்தகங்களை நனையாமல் பாதுகாக்கவும், அவற்றை பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. இது தவிர தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 1.32 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. இந்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story