உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சிவப்பு அரிசி சாதம் சாப்பிடுங்க...

சிவப்பரிசியில் கொட்டிக் கிடக்கிறது ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் (கோப்பு படம்)
அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்த அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது. தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும்.
சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது. இந்த சமயங்களில் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த சிவப்பரிசியை இனிமேல் ‘மிஸ்’ பண்ணாதீங்க!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu