தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீர் உடல் நல குறைவு
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். எளிமையான வாழ்க்கைக்கு சொந்தமான இவர் தனது உடல் மீது அதிக அக்கறை கொண்டவர். தினமும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மாரத்தான் ஓட்ட போட்டிகளிலும் அதிக அளவில் பங்கேற்று வருகிறார்.
வழக்கம்போல இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் தனது வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனயில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே சர்க்கரை நோய் பிரச்சினை உள்ள நிலையில், உடலில் சர்க்கரை அளவு குறைந்த காரணத்தால், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் இதயத்தில் எந்த அடைப்புகளும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.08.2023) அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டது.
உடனடியாக கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இருதய இரத்த நாள பரிசோதனை (ஆஞ்சியோ) செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அமைச்சருக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu