கோடை காலம் வந்தாச்சு, கொளுத்தும் வெயிலை எப்படி சமாளிக்கப் போறீங்க?

கோடை காலத்தில், உங்களது காலை உணவு இதுவாக இருந்தால் அது அமிர்தம்தான்.
கோடை காலத்தில் உள்ள அதிகமான பழங்கள் உடலுக்கு நீரேற்றம் அளிப்பவையாக உள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறவும் நீர் இழப்பை தடுக்கவும் உதவும் சில உணவுகளை இப்போது பார்ப்போம்.
தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான். கோடை காலத்தில் இதுபோன்ற மாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் உண்டாகின்றன. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் உடல் வலுவிழக்கும். இந்தத் தட்பவெப்பநிலை மாற்றம் உடலில் வாயு, பித்தம், கப அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் உடலின் சமநிலை மாறி நோய்கள், உபாதைகள் ஏற்படுகின்றன.
வெப்பநிலை அதிகரிக்கும்போது செரிமான சக்தி குறையும். இதனால் பல நேரங்களில் மந்தமாக இருக்கும். பித்தத்தை சமச்சீராக வைத்திருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
ஓரளவு உணவு, அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் நீரிழப்பு ஏற்படாமல் பராமரிக்கலாம். நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்த வேண்டும். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது. உடனடியாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகளான தர்பூசணி, திராட்சை பழங்களின் சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்தலாம்.
இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சினையைச் சமாளிக்கலாம். காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான்.
பொதுவாக கோடை காலத்தில், காரம் சார்ந்த மசாலா உணவுகள், எண்ணெய் பலகாரம், தாகத்தை ஏற்படுத்தும் உப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அசைவ உணவுகளை வெகுவாக குறைத்துக்கொள்வது, மிகவும் நல்லது. குறிப்பாக கோழி இறைச்சி, மீன், நண்டு போன்றவை உடல் சூட்டை அதிகப்படுத்தும். பாஸ்ட் புட் வகைகளை தவிர்ப்பதும் மிக முக்கியம். எண்ணெய் நிறைந்த உணவு வகைகளால், ஜீரண உறுப்புகளுக்கு பாதிப்பு அதிகரிக்கும்.
கோடை காலத்தை சமாளிக்க, உணவு உட்கொள்ளும் முறைகளில் மட்டுமின்றி, பழக்க வழக்கங்களிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. இறுக்கமான, ஜீன்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணியலாம். வெயில் சுட்டெரிக்கும் நேரங்களில், பயணங்களை தவிர்க்கலாம். கும்பல், நெரிசலைத் தவிர்த்து காற்றோட்டமான இடங்களில், இருக்க வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால், கோடை தரும் தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu