வேகமாக பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' - உஷாரா இருங்க!

வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ - உஷாரா இருங்க!

வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக, சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால், ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பில் இருந்து, எளிதாக தப்பிக்கலாம்.

"மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி பாதிப்பு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில், மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவுகிறது. ஆண்டுதோறும் பருவமழைக்காலம் முடிவுக்கு வரும்போது, கண் வெண்படல அழற்சி பாதிப்பு அதிகரிக்கும். இந்த ஆண்டு, சென்னை மாநகரில் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பதால், 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.


'மெட்ராஸ் ஐ' தொற்று பரவும் முறை

கண் வெண்படல அழற்சி அல்லது 'மெட்ராஸ் ஐ' என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகிற ஒரு தொற்று நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக, கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஏறக்குறைய 90 சதவீத கண் வெண்படல அழற்சி, 'அடினோ' வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

'மெட்ராஸ் ஐ' பாதிப்பில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் ஆகியவை. ஆனால், கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதனால் மங்கலான பார்வை ஏற்படலாம்.


சிகிச்சை முறை

கண் வெண்படல அழற்சி என்பது, சாதாரண கண் தொற்று பாதிப்பாக இருந்தாலும், அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அதிக பாதிப்பை தரும் தீவிர பிரச்னையாக மாறக்கூடும். மருந்து கடையிலிருந்து 'ஆன்டிபயாட்டிக்' மருந்துகளை 'மெட்ராஸ் ஐ' பிரச்னைக்காக வாங்கி பயன்படுத்தக்கூடாது.

சுயமாக மருந்துகளை பயன்படுத்துவதையும், ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதியான பிறகு, கண் டாக்டரால் பரிந்துரைக்கப்படும் 'ஆன்டிபயாட்டிக்' மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


'மெட்ராஸ் ஐ' வராமல் தவிர்க்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் வெண்படல அழற்சி என்பது, மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். எனவே டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாகப் பரவும். ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியம்.

கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு பயன்படுத்திய நேப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும். தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு, அவர்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.

பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை, பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற அடைபட்ட அமைவிடச் சூழல்களில், கண் வெண்படல அழற்சி வேகமாக பரவக்கூடியது என்பதால், கண்களிலிருந்து அழற்சியின் காரணமாக வெளியேறும் தண்ணீர் போன்ற திரவச்சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடும் வரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது.

கண் நோய் பாதித்தவர்கள், கருப்பு நிற கண்களை அணிந்துகொள்வது, நல்லது.

Read MoreRead Less
Next Story