தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெப்பம்: பாதுகாத்துக் கொள்வது எப்படி?
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? என சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
HIGHLIGHTS

பைல் படம்
தமிழகத்தில் கோடைக்காலம் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய நிலையில், தற்போது சிறிது சிறிதாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை நமது உடலின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது உடலில் வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதால் ஆகியவற்றின் மூலம் நமது உடல் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி உடலை சராசரி வெப்பநிலையில் பாதுகாக்கிறது.
இந்த நிலையில், கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோடைவெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்:
கோடை வெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர் சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கோடை வெப்பத்தால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக மருத்துவரையோ அல்லது ஆம்புலன்சையோ அழைக்க வேண்டும்.
மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும், நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மருத்துவருக்கோ அல்லது ஆம்புலன்சுக்கோ காத்திருக்கும் போது பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும்.
உடைகளை தளர்த்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும். காற்றோட்ட வசதி தொடர்ந்து கிடைக்க செய்ய வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாரசிட்டமால் மாத்திரைகளை கொடுக்ககூடாது.
நோய்களைத் தடுக்கும் முறைகள்:
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி பருக வேண்டும், தலையில் துண்டு அணிந்து கொள்ளலாம், தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்துக் கொள்ளுவது நல்லது, களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு நல்லது, சூடான பானங்களை தவிர்க்கவும், உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, இளநீர், உப்பு கரைசல் ஆகியவற்றை தண்ணீர் தாகம் எடுக்கும் போது பயன்படுத்தலாம்.
குளிர்ந்த நீரில் குளிக்கலாம். சூடான சூரிய ஒளி வீட்டில் படும்போது ஜன்னல்களை திரைசிலையால் மூடலாம், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீட்டின் உள்ளே வரும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம். மயக்கம், தலைவலி, அதிக உடல்சோர்வு, அதிக தாகம், கால் மணிகட்டு மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவிக்கு பொது தொலைபேசி எண்ணை (104) தொடர்புக் கொள்ளலாம்.
இந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி வருகின்ற வெப்ப காலத்தில் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக கோடை காலத்தை கடந்து செல்ல வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.