பாலில் இவ்வளவு சத்துகளா? தெரிந்து கொள்ளுங்கள்
பால். (மாதிரி படம்).
தினமும் நாம் தவிர்க்க முடியாத உணவுப் பொருளில் பிரதானமாக இருப்பது பால். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாலை விரும்பி சாப்பிடுவது உண்டு. அப்படிபட்ட பாலில் உள்ள சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:
நூறு கிராம் பாலில் 61 கலோரியும், மொத்த கொழுப்பு 3.3 கி, இதில் மோனோ-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 812 மிகி, பாலி-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 195 மிகி, ஒமேகா-3 75 மிகி (தினசரி தேவையில் 5%), நிறைவுற்ற கொழுப்பு 1.9 கி, மொத்த கார்போஹைட்ரேட் 4.8 கி, புரதம் 3.2 கிராம் என்ற அளவிலும் உள்ளது.
நூறு கிராம் பாலில் கால்சியம் 113 மிகி (தினசரி தேவையில் 9%), மெக்னீசியம் 10 மிகி (தினசரி தேவையில் 3%), பாஸ்பரஸ் 84 மிகி (தினசரி தேவையில் 7%), பொட்டாசியம் 132 மிகி (தினசரி தேவையில் 3%), ஸிங்க் 0.4 மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் செலினியம் 3.7 மைகி (தினசரி தேவையில் 7%) என்ற அளவில் உள்ளது.
நூறு கிராம் பாலில் வைட்டமின்-பி2 0.2 மிகி (தினசரி தேவையில் 13%), வைட்டமின்-பி5 0.4 மிகி (தினசரி தேவையில் 7%), வைட்டமின்-ஏ 46 மைகி (தினசரி தேவையில் 5%), வைட்டமின்-டி 1.3 மைகி (தினசரி தேவையில் 7%) மற்றும் வைட்டமின்-பி12 0.5 மைகி (தினசரி தேவையில் 19%) என்றளவில் உள்ளது.
பாலில் உள்ள புரதசத்து என்பது அனைத்து முக்கிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதால், இது ஒரு நிறைவான புரதசத்துமிக்க உணவு என்று அழைக்கப்படுகிறது. பாலில் உள்ள புரதச்சத்தினால் நமது உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வளர்ச்சி அடையும்.
பால் குடிப்பதால் வயதாவதினால் ஏற்படும் தசை இழப்பினை ஈடுசெய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தசை சிதைவினை சரிப்படுத்த பால் உதவுகின்றது. பாலில் உள்ள வைட்டமின்-டி, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவற்றால் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்ற எலும்பு சார்ந்த நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
பால் குடிப்பது உடல் பருமனை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவில் படுப்பதற்கு முன் ஒரு டம்ளர் இளஞ்சூடான பால் குடித்து வந்தால், நமது மனநிலை சீரடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்புச்சத்து குறைந்த பாலினை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோயிலிருந்து பாதுகாக்கப்படும் என்றும், நீரிழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என ஆய்வுகள் தெரிவுக்கின்றன.
பாலில் உள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நமது உடலில் நீரிழிப்பு ஏற்படும் போது அதை சரிசெய்கின்றது.
கர்ப்பிணித் தாய்மார்கள் தினந்தோறும் போதுமான அளவு பால் அருந்தி வந்தால், குழந்தையின் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும். ஊட்டச்சத்து மிக்க பாலினை தினந்தோறும் அருந்தி வந்தால், நமது முடியின் நலன் மேம்படும் மற்றும் நமது தோல் நலன் மேம்பட்டு மிளிரும் என அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu