நிபா வைரஸ் அறிகுறி: விழிப்புணர்வு குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை

நிபா வைரஸ் அறிகுறி: விழிப்புணர்வு குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை
X
நிபா வைரஸ் அறிகுறி பற்றியும், விழிப்புணர்வு குறித்தும் டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் "நிபா" வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருவர் மாண்ட செய்தி தமிழ்நாட்டில் நாம் அனைவரும் இதுகுறித்த விழிப்புணர்வையும் பெற உந்துகிறது.

இதுகுறித்து சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா கூறி இருப்பதாவது:-




நிபா வைரஸ்

நிபா எனும் இந்த நோய் வைரஸ் மூலம் உண்டாகிறது.மலேசிய நாட்டின் "சுங்கய் நிபா" எனும் கிராமத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பரவிய இந்த நோய் தொற்றானது 265 பேருக்குப் பரவி 108 மரணங்களை உண்டாக்கி மிரட்டியது.

பரவுவது எப்படி?

பழம் திண்ணி வவ்வால்கள் தான் இந்த நோய் தொற்றை உருவாக்கும் வைரஸின் முதல் நிலை நோய் பரப்பிகள் நிபா வைரஸால் தொற்றுக்குள்ளான பழம் திண்ணி வவ்வால் இனம் சுவைத்த பனை மரக் கள்ளை மனிதர்கள் பருகும் போதும் இத்தகைய வவ்வால்களின் எச்சங்கள் மற்றும் சிறுநீர் கழிவுகளுடன் நேரடி தொடர்பில் மனிதர்களோ பன்றிகள் போன்ற கால்நடைகளோ வரும் பொழுது தொற்றுப்பரவல் நிகழ்கிறது.

மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மையும் இந்த நோய்க்கு உண்டு. மருத்துவமனைகளுக்குள் நிப்பா தொற்றுக்குள்ளான நோயாளியிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு பரவிய தகவல்களும் அறியக் கிடைத்துள்ளன.

தொற்றுக்குள்ளான மனிதர்களின் உடல் திரவங்களான சிறுநீர்/ எச்சில்/ உதிரம் போன்றவற்றில் நிப்பா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொற்றுக்குள்ளானோருக்கு அறிகுறிகளற்ற தொற்று நிலை முதல் தீவிர சுவாசப்பாதை தொற்று / மூளையைத் தாக்கும் தீவிர தொற்று நிலையை அடையக்கூடும்.

வைரஸ் கிருமி உடலில் நுழைந்த இரண்டு வாரம் முதல் மூன்றுவாரங்களுக்குள் தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றலாம்.

அறிகுறிகள்

காய்ச்சல்

தலைவலி

உடல் வலி

வாந்தி குமட்டல்

தொண்டை வலி

இன்னும் தீவிரமானால் தலை சுற்றல் சோர்வு அசதி பிதற்றல் புத்தி பேதலித்த நிலை இத்துடன் மூளையைத்தாக்கி மூர்ச்சை நிலையை உண்டாக்க வல்லது . சில நேரங்களில் வலிப்பு ஏற்படக்கூடும்.


நரம்பு சார்ந்த பிரச்சினை

இவையன்றி சுவாசப்பாதையைத் தாக்கி கோவிட் நோயைப் போல நியுமோனியா மற்றும் தீவிர நுரையீரல் தொற்றை உருவாக்கவல்லது. மூளையைத் தாக்கும் நிலைக்குச் சென்று மீண்டோரிடையே 20%பேருக்கு தொடர்ந்து வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த நோய் தொற்றுக்குள்ளானோரில் 40-75% என்ற மரண விகிதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. கோவிட்டைப் போலவே உடல் திரவங்களில் வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் அறியலாம்.

எவ்வாறு தடுப்பது?

இன்னும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை. பன்றிகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் தொழுவங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

பன்றிகள் தொற்றுக்குள்ளானது தெரிந்தால் ( நாய் போல குரைத்து இருமுவது பன்றிகளிடையே தோன்றும் முக்கிய அறிகுறி) அந்த தொழுவத்தை தனிமைப்படுத்திட வேண்டும். மற்ற கால்நடைகளுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விலங்குகளிடையே தோன்றும் நோய்கள் குறித்தும் தொடர் கண்காணிப்பில் நாம் ஈடுபட வேண்டும்.

விலங்குகளிடையே அசாதாரண தன்மை அல்லது மரணங்கள் விளைந்தால் உடனே அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

தொற்றுக்குள்ளான விலங்குகளை கையாள்பவர்கள் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து அக்காரியங்களை செய்ய வேண்டும். தொற்றுக்குள்ளான மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர்களை கவனித்துக்கொள்ளும் உறவினர்கள் கட்டாயம் முகக்கவசம் / கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை வழலை கொண்டு கழுவ வேண்டும். வவ்வால் தின்று மீதமுள்ள பழங்களை தவிர்த்து விடுவது சிறந்தது.

நிபா தொற்றின் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவர்களை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த கால வரலாறு

இதற்கு முன்பு கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 23 பேருக்கு நிப்பா தொற்று ஏற்பட்டதில் 17 பேர் இறந்தனர்

2021 ஆம் ஆண்டு ஒரு சிறுவன் நிப்பா தொற்றுக்கு உள்ளாகி கோழிக்கோடு மாவட்டத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

நமது அண்டை நாடான பங்களாதேஷில் ஆண்டுக்கொருமுறை நிப்பா வைரஸ் பரவல் நடந்து வருகிறது. எல்லை மாநிலமான மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கம் இருப்பதை காண முடிகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கான காரணம்.

இந்த வைரஸின் இயற்கையான புகலிடமான பழந்திண்ணி வவ்வால்கள் அங்கு குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றன.

இந்த நோய் குறித்து அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிப்பா தொற்றுப் பரவல் நடந்து வருவதால் அம்மாவட்டத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பது நலம்.


பரவும் தன்மை குறைவு

இந்த நோய் அச்சமூட்டும் வகையில் இறப்பை ஏற்படுத்தும் சதவிகிதத்தைக் கொண்டிருந்தாலும் தொற்று அடைந்த ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறது

தொற்று கண்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதை "ஆர்- நாட் வேல்யூ" என்று குறிப்பிடுவோம். நிப்பா வைரஸின் சராசரி ஆர்-நாட் வேல்யூ - ஒன்றுக்கும் கீழே 0.48 என்ற அளவிலேயே உள்ளது.இதனாலேயே இதுவரை ஏற்பட்ட பரவல் நிகழ்வுகளில் அதிகமான மக்களுக்கு பரவவில்லை.

தொற்று நோய் பரவலில் முக்கியமான விதி ஒன்று உள்ளது.அதிகமான அளவு மரண விகிதத்தை ஏற்படுத்தும் தொற்று நோய்கள் பரவும் விகிதம் குறைவாக இருக்கும்.

முற்று பெறும்

கேரள மாநில மக்கள் நல்வாழ்வுத்துறையும் மத்திய சுகாதாரத் துறையும் கண்காணிப்பை வலுப்படுத்தி தொற்று கண்டவர்களிடம் (INDEX CASES ) தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி விடுவதால் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் வரும்.

தற்போதைய நிபா நோய்ப்பரவல் நிலையில் கடைசி நோய் தொற்றாளர் கண்டறியப்பட்டு 42 நாட்கள் (Double Incubation period) எந்த புதிய நோயாளரும் கண்டறியப்படவில்லை எனில்கொள்ளை நோய் பரவல் முற்று பெற்றதாக அறிவிக்கப்படும்.அதுவரை அச்சமின்றி எச்சரிக்கையுடன் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!