வெந்தயத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா? இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே...

வெந்தயத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா? இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே...
X

வெந்தயம். (மாதிரி படம்).

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

நமது உடலின் வெப்பநிலையை சீர்படுத்தவல்லதாக திகழும் வெந்தயத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கி இருப்பதால் நமது முன்னோர்கள் அதை அதிகளவு பயன்படுத்தி வந்துள்ளனர். வெந்தயத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கிய மூலிகைப் பொருளாளன வெந்தயத்தில் எண்ணிலடங்கா சத்துக்களும், மருத்துவக் குணங்கள் உள்ளன. நூறு கிராம் வெந்தயத்தில் 323 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 6.4 கி, மொத்த கார்போஹைட்ரேட் 58 கி, அதில், நார்ச்சத்து 25 கி, புரதம் 23 கிராம் என்ற அளவிலும் உள்ளது.


நூறு கிராம் வெந்தயத்தில் கால்சியம் 176 மிகி (தினசரி தேவையில் 18%), இரும்புச்சத்து 34 மிகி (தினசரி தேவையில் 262%), மெக்னீசியம் 191 மிகி (தினசரி தேவையில் 54%), மாங்கனீஸ் 1.3 மிகி (தினசரி தேவையில் 59%), பாஸ்பரஸ் 296 மிகி (தினசரி தேவையில் 42%), பொட்டாசியம் 770 மிகி (தினசரி தேவையில் 16%), ஸிங்க் 2.5 மிகி (தினசரி தேவையில் 26%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் வெந்தயத்தில் வைட்டமின் - பி1 0.3 மிகி (தினசரி தேவையில் 28%), வைட்டமின்-பி2 0.36 மிகி (தினசரி தேவையில் 31%), வைட்டமின்-பி6 0.6 மிகி (தினசரி தேவையில் 46%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 57 மைகி (தினசரி தேவையில் 14%) என்றளவில் உள்ளது. வெந்தயத்தினை உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி வைத்தால், மூன்றாண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம். திறந்தவெளியில் வைத்திருந்தால், மிகக் குறுகிய காலமே அதனைப் பயன்படுத்த இயலும்.

மருத்துவக் குணங்கள்:

வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். வெந்தயம் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகின்றது. வெந்தயம் கலந்த நீரை குடிப்பதால் நமது வாழ்நாள் அதிகமாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் நமது உடல் எடையை சீராக வைத்து, மேலாண்மை செய்வதற்கும் பயன்படுகிறது. வெந்தயம், ஏப்பம் போன்ற செரிமான மண்டலம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்கிறது.


வெந்தயம் கலந்த நீரை குடிப்பதால், முடி நன்றாக வளர்வதுடன், முடியின் அடர்த்தி அதிகமாகிறது. மேலும் பொடுகு போன்ற பிரச்சினைகளை தடுக்கின்றது. வெந்தயம் கலந்த தண்ணீர், நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. வெந்தயம் நமது செரிமான மண்டலத்தின் அசைவுகளை (Bowel Movements) மேம்படுத்த உதவுகின்றது.

வெந்தயம் பசியின்மை, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்று வலி, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறது. வெந்தயம் மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வெந்தயம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


டெஸ்ட்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனை அதிகப்படுத்தி, பாலியல் பிரச்சினைக்குத் தீர்வாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகப்படுத்தி, கருவுறுதலுக்கும் வெந்தயம் உதவுகின்றது. வெந்தயம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திறனை சீர்படுத்துகின்றது.

வெந்தயம் சிறந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி குணம் கொண்டதாகும். வெந்தயம் சளி, இருமல், ஆஸ்துமா, நிமோனியா மற்றும் காசநோய் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் ‘Irritable Bowel Syndrome' என்று சொல்லக்கூடிய செரிமான மண்டலம் சார்ந்த நோயின் அறிகுறிகளை குறைக்கின்றது.


வெந்தயம் காய்ச்சலையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, வெந்தயம், எலுமிச்சம்பழம் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியும் கூட. பல பாக்டீரியர்களை அழிக்கும் திறன் வெந்தயத்திற்கு உண்டு.

வெந்தயத்தில் கலப்படம்:

வெந்தயத்தில் கலப்படம் என்று பார்த்தோமேயானால், கல் அல்லது மண் துகள்கள் தான் அதிகமாக கலக்கப்படுகின்றது. இவை தவிர பருப்பு வகைகளை உடைத்து, வெந்தயம் போல் கலப்படம் செய்கின்றனர். வெந்தயத்தில் உள்ள கலப்படங்களைப் பகுப்பாய்வின் மூலமே கண்டறிய முடியும் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!