/* */

மிளகாய் பொடியிலும் கலப்படம்! எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்து கொள்வோமா?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் மற்றும் மிளகாய் பொடியில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

மிளகாய் பொடியிலும் கலப்படம்! எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்து கொள்வோமா?
X

மிளகாய் பொடி. (மாதிரி படம்).

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய், மிளகாய் பொடி உள்ளிட்டவைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும், பலன்களும், பாதிப்புகளும் உள்ளன. அதேநேரத்தில் மிளகாய் மற்றும் மிளகாய் பொடியிலும் கலப்படம் உள்ளது என்பது நமக்கு அதிர்ச்சிகரமான தகவல். இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விழிப்புணர்வு பதிவு இதோ:

மிளகாய் வற்றலில் செயற்கை நிறமி இருக்க கூடாது. மினரல் ஆயில் பூச்சு இருக்கக்கூடாது. உடம்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேறு எந்தப் பொருட்களும் இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது. உடைந்து போன மிளகாய் மற்றும் விதைகள் 5 சதவீதத்திற்கும் மிகாமலும், ஈரப்பதம் 11 சதவீதத்திற்கும் மிகாமலும், வெளிப்புற பொருட்கள் ஒரு சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.


மிளகாய் பொடியில் இரண்டு சதவீதம் வரை தாவர எண்ணெயைக் கலந்து கொள்ளலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது. மிளகாய் பொடியில் நார்ச்சத்து 30 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. நூறு கிராம் மிளகாயில் 40 Kcal எரிசக்தியும், மொத்த கார்போஹைட்ரேட் ஒன்பது கிராம், புரதம் இரண்டு கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் மிளகாயில் வைட்டமின்-சி 144 மில்லி கிராம் உள்ளது (தினசரி தேவையில் 173 சதவீதம் உள்ளது.) அதுபோல், இரும்புச்சத்து ஒரு மில்லி கிராம் (தினசரி தேவையில் 8 சதவீதம்), மெக்னீசியம் 23 மில்லிகிராம் (தினசரி தேவையில் 6 சதவீதம்), பொட்டாசியம் 322 மில்லிகிராம் (தினசரி தேவையில் 7 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.


அதிகமாக மிளகாய் அல்லது வறமிளகாய் அல்லது மிளகாய் பொடி ஆகியற்றை எடுத்துக் கொண்டால், நமது வயிற்றில் புண் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. (தினசரி 6-8 கிராம் என்ற அளவிற்குள் மட்டும் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது.) மிளகாயை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை ஏற்படும். அதிகபட்ச மிளகாய் எடுத்துக் கொள்வதினால் நமக்கு பித்தப்பை அல்லது இறைப்பையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நாம் அனைவரும் பச்சை மிளகாயை அடர் பச்சையாக எதிர்பார்ப்பதால், மேலக்கைட் கிரீன் (Malachite Green) என்று சொல்லக்கூடிய ஒரு செயற்கை பச்சை நிறமியைக் கொண்டு சில வணிகர்கள் மிளகாய்க்கு நிறம் பூசுகின்றனர். அதனை கண்டுபிடிக்க எளிய சோதனையும் உள்ளது. சிறிதளவுப் பஞ்சினை தண்ணீர் அல்லது எண்ணெயில் தொட்டு, மிளகாய் உட்பட பச்சை நிறத்திலான காய்கறிகளை துடைத்துப் பார்த்தால், அவற்றின் மேலே மேலக்கைட் கிரீன் பூச்சு இருந்தால், பஞ்சு பச்சை நிறமாக மாறிவிடும்.

மிளகாய் பொடியைப் பொறுத்தவரை, அதில் செங்கல் தூள், மண், மரத்தூள், லெட் உப்புக்கள், ரோடமைன்-பி என்று சொல்லக்கூடிய ஒரு நிறமி, எண்ணெயில் கரையும் நிலக்கரி தார் ஆகியவை கலப்பட பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. மிளகாய் பொடியில் செயற்கை வண்ணங்கள் உள்ளதை வீட்டிலேயே ஆய்வு செய்து கண்டுபிடித்து விடலாம்.


அதாவது, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் காய்ச்சாத தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகாய் பொடியை அதில் போட்டால், செயற்கை நிறமி கலந்த மிளகாய்த்தூளில் இருக்கும் சிவப்பு நிறமானது தண்ணீரோடு கலந்து, தண்ணீர் சிவப்பாகும். தூய்மையான மிளகாய் பொடி அவ்வாறு நிறம் மாறாது. மிளகாய் தூளில் மண் அல்லது மரத்தூள்கள் கலப்படத்தைக் கண்டறிய, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு மிளகாய் பொடியைத் தூவி, கலக்கிவிட்டு, சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். மிளகாய் பொடியில் மரத்தூள்கள் இருந்தால், அவை மிதக்கும். மண் துகள்கள் இருந்தால், கண்ணாடி டம்பளரின் அடியில் தேங்கும்.

தற்பொழுது உணவு வகைகளிலும் அதிகபட்ச வண்ணங்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உணவுப் பொருளை அதன் இயற்கையான நிறத்தில் கிடைப்பதை மட்டும் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். உணவில் வண்ணத்தை எதிர்பார்க்காமல், தரத்தை மட்டும் பார்த்து, உணவு பொருளை வாங்கி ருசித்து, நீடித்த நல்வாழ்வு பெறுவோம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 17 March 2023 3:32 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?