அடடே! சமையலுக்கு பயன்படுத்தும் மல்லியில் இத்தனை மருத்துவக் குணங்களா?
மல்லி. (மாதிரி படம்).
நமது அன்றாட சமையலில் சேர்க்கப்படும் முக்கிய பொருள்களில் ஒன்றானது மல்லி. இந்த கொத்தமல்லி தாவரம், அதன் இலை, உலர்த்தப்பட்ட பழம் மற்றும் அதன் வேர் ஆகிய அனைத்தும் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மல்லியை மனிதர்கள் பயன்படுத்தினார்கள் என்று தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அப்படி பட்ட மல்லியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அதன் மருத்துவக் குணங்கள் எவை? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
மல்லி பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. உலர்த்தப்பட்ட பழத்திற்கு, முழு மல்லி, குண்டு மல்லி, உருட்டு மல்லி, வறமல்லி, தனியா என்று பல பெயர்கள் உண்டு. அதன் இலை தான், கொத்தமல்லித் தழை. இதன் சட்னியை யாரும் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், குண்டுமல்லி சட்னியை குறைவான மக்களே சாப்பிட்டு இருப்பார்கள். மிருதுவான இட்லிக்கு, குண்டுமல்லி சட்னியைத் தொட்டுச் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
முழு மல்லியில் பூஞ்சை, உயிருள்ள அல்லது உயிரற்ற பூச்சிகள், பூச்சிகளின் துகள்கள், எலிகளின் எச்சங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. மல்லியில்லாத பொருட்கள் 1ஒதவீதத்திற்கும் மிகாமலும், இரண்டாக உடைந்த மல்லி 10 சதவீதத்திற்கும் மிகாமலும், உடைந்த மல்லி 2 சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.
மல்லிப் பொடியாக இருந்தால் வண்ணமோ, ஸ்டார்ச்சோ எதுவும் மல்லிப் பொடியில் சேர்க்கக்கூடாது. மேலும், மல்லிப் பொடியில், ப்ளீச் அல்லது ப்ரிஸெர்வேட்டிவ் ஆகியவற்றை சேர்க்கக்கூடாது. மல்லிப் பொடி உள்ளிட்ட எந்த மசாலாப் பொடிகளை பொட்டலமிடாப்படாமல், சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நூறு கிராம் கொத்தமல்லித் தழையில் கார்போஹைட்ரேட் 4 கிராமும், புரதம் 2 கிராமும், வைட்டமின்-ஏ 337 மைகி (தினசரி தேவையில் 42 சதவீதம்), வைட்டமின்-கே 310 மைகி (தினசரி தேவையில் 295 சதவீதம்) மற்றும் மாங்கனீஸ் 0.4 மிகி (தினசரி தேவையில் 20 சதவீதம்) உள்ளன.
ரத்தத்தில் சக்கரை அல்லது கெட்டக் கொழுப்பினை குறைக்கவும், நரம்பு சார்ந்த சில நோய்களைத் தடுக்கவும், செரிமானத்திற்கு உதவியாகவும், சொறி போன்ற சில தோல் நோய்களுக்கு மருந்தாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மல்லி பயன்படுகின்றது.
முழு மல்லியை காற்றுப்புகாத உணவுத் தரக் கொள்கலனில், ஈரப்பதம் இல்லாத இடத்தில் 2-3 ஆண்டுகள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். முழு மல்லியை எந்த காரணத்தை கொண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu