சிக்கரியில் உள்ள சில மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோமா?

சிக்கரியில் உள்ள சில மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோமா?

சிக்கரி. (மாதிரி படம்).

காபிக்கு நிகராக பயன்படுத்தப்படும் சிக்கரியில் உள்ள சில மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

காபிக்கு மாற்றாகப் பயன்படுத்த தொடங்கப்பட்ட சிக்கரியின் சுவை அனைவருக்கும் பிடித்துப் போக, பின்னர், சிக்கரியை காபியுடன் கலந்து பயன்படுத்தவும் தொடங்கினர். காபிக்கு நிகராக இருக்கின்ற சிறப்பு வாய்ந்த “சிக்கரி” என்பது Chicorium Intybus Lin என்ற தாவரத்தின் சுத்தம் செய்து உலர்த்தப்பட்ட கிழங்கினை வறுத்து, அரைக்கப்பட்ட பொடி ஆகும்.

சிக்கரியில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

நூறு கிராம் சிக்கரியில் 23 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 0.3 கி, மொத்த கார்போஹைட்ரேட் 4.7 கி, இதில் நாரச்சத்து 4 கி என்ற அளவிலும், புரதம் 1.7 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் சிக்கரியில் கால்சியம் 100 மிகி (தினசரி தேவையில் 10%), மெக்னீசியம் 30 மிகி (தினசரி தேவையில் 8%), பாஸ்பரஸ் 47 மிகி (தினசரி தேவையில் 7%), பொட்டாசியம் 420 மிகி (தினசரி தேவையில் 9%), ஸிங்க் 0.4 மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் மாங்கனீஸ் 0.43 மிகி (தினசரி தேவையில் 20%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் சிக்கரியில் வைட்டமின்-ஏ (பீட்டா கரோட்டின்) 3430 மைகி (தினசரி தேவையில் 32%), வைட்டமின்-பி5 1.15 மிகி (தினசரி தேவையில் 23%), வைட்டமின்-சி 24 மிகி (தினசரி தேவையில் 29%), வைட்டமின்-இ 2.26 மிகி (தினசரி தேவையில் 15%), வைட்டமின்-பி9 110 மைகி (தினசரி தேவையில் 28%) மற்றும் வைட்டமின்-கே 297.6 மைகி (தினசரி தேவையில் 283%) என்றளவில் உள்ளது.

சிக்கரி தாவரத்தின் அனைத்து பாகங்களும் உணவாகப் பயன்படுத்தக்கூடியதே. சிக்கரியின் கிழங்கினை, வெள்ளை முள்ளங்கி போல் சமைத்துப் பயன்படுத்தலாம். சிக்கரியின் கிழங்கு, பீர் தயாரிப்பில் “காஃபி ஃப்ளேவருக்காக” சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

சிக்கரியின் இலைகள், கீரையாகவும், சாலட் இலையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. புதிய சிக்கரியில் 13-23% என்ற அளவில் “இனுலின்” என்ற சக்கரை வகை உள்ளது. இது உணவுத் தொழிற்சாலைகளில் ‘இனிப்பூட்டியாகவும்’, உணவின் ஊட்டச்சத்து அளவினை மேம்படுத்த உதவும் வகையில் ‘உணவு நார்ச்சத்தாகவும்’ பயன்படுத்தப்படுகின்றது.

சிக்கரியில் உள்ள இனுலின், குடலில் உள்ள நல்ல பாக்டீரியர்களுக்கு உணவாக மாறி, உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. சிக்கரியை மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும் பயன்படுத்தலாம். ஆஸ்டியோபோரோஸிஸ்’ என்று சொல்லக்கூடிய எலும்பு சம்பந்தமான நோயை குறைக்கிறது. இதற்கான காரணம், குடலில் தாது உப்புக்களை உக்கிரகத்தில்லை சிக்கரி அதிகரிக்கின்றது.

ஈரல் சம்பந்தமான நோய்களுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மாவு சத்தத்தை சர்க்கரைகளாக பிரிப்பதில் சிக்கரியில் உள்ள இனுலின் உதவுகின்றது. மேலும் தசைகளில் இன்சுலின் ஹார்மோனுக்கான உணர்வுத் திறனை சிக்கரி அதிகப்படுத்துகின்றது. இதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க சிக்கரி பயன்படுகிறது.

குதிரைக்கு ஓட்ஸிற்குப் பதிலாக சிக்கரி கிழங்கை உணவாகப் பயன்படுத்தலாம். சிக்கரியை அதிகமாக எடுத்துக்கொண்டால், வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்பலாம். சிக்கரியில் காஃபைன் இல்லாததினால், அது சாரந்த பக்கவிளைவுகள் ஏதுமில்லை.

சிக்கரியை குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தால், 6-12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சிக்கரியில் குறிப்பிடும்படியான கலப்படம் காணப்பெறவில்லை. சிக்கரி உணவுப்பொருளா என்ற வினாவிற்கான விடை, ஆமாம் என்பதுதான். காபியில் உள்ள காஃபைன் அளவைக் குறைக்க, சிக்கரி கலந்து சாப்பிடலாம். காபியோ அல்லது சிக்கரியோ அல்லது இரண்டும் கலந்தோ எதுவாகினும் அளவாக அருந்துவோம் என, மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story