பெருங்காயம் தெரியும்.. அதென்ன கூட்டுப் பெருங்காயம்? மேலும் படியுங்கள்...

பெருங்காயம் தெரியும்.. அதென்ன கூட்டுப் பெருங்காயம்? மேலும் படியுங்கள்...
X

கூட்டுப் பெருங்காயம். (மாதிரி படம்).

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கூட்டுப் பெருங்காயம் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் முக்கிமானதில் ஒன்றான பெருங்காயம் பற்றி கேள்விப்பட்டு இருக்கோம். அதே சமயத்தில் கூட்டுப் பெருங்காயம் என்ற வார்த்தையையும் கேள்விப்பட்டு இருக்கிறோம். பெருங்காயம் என்றால் என்ன? கூட்டுப் பெருங்காயம் என்றால் என்ன என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் இதோ:

கூட்டுப் பெருங்காயம் என்பது பல்வேறு உணவுப் பொருட்களின் கூட்டு என்பதே! தனிப் பெருங்காயம் குறைவான அளவில் கிடைப்பதினால் உருவாக்கப்பட்ட மாற்று ஏற்பாடுதான் கூட்டுப் பெருங்காயம்.


கூட்டுப்பெருங்காயம் என்பது பெருங்காயம், கம் அரேபிக் என்று சொல்லக்கூடிய ஒரு வகை பிசின், உணவுத் தர ஸ்டார்ச், உணவுத் தர தானிய வகை மாவு 30 முதல் 70 சதவீதம் என்றளவில் பயன்படுத்தப் படுகின்றது. அதிகளவில் பயன்படுத்தப்படும் மாவு மைதா மற்றும் உணவு எண்ணெய் ஆகியவை அடங்கியது.

கம் அரேபிக் என்பதற்கு செனகல் பசை, இந்தியன் பசை என்ற பெயர்களும் உண்டு. இது அகேசியா, செனகலியா போன்ற சில மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. (இது சூடான், செனகல், சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் விளைகின்றது).

கம் அரேபிக் உணவுத் தொழிலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு “நிலைநிறுத்தி” (Stabiliser - INS 414). கம் அரேபிக் என்பதை காஃபி, கிரேப் வைன்ஸ், சுகர் ஸிரப், திரவ முட்டை உணவு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் உணவுச் சேர்மமாகப் பயன்படுத்த FSSAI-ஆல் அனுமதிக்கப்பட்டு உள்ளது.


கூட்டுப் பெருங்காயத்துடனும் பைன் மரம் உள்ளிட்ட வேறு எந்த தாவரத்தின் பிசினையும் சேர்க்கக்கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது. கூட்டுப் பெருங்காயத்தில் 5 சதவீதத்திற்கும் குறையாமல் “Alcoholic Extract” இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கூட்டுப் பெருங்காயத்தில் செயற்கை நிறமிகள் மற்றும் மினரல் பிக்மெண்ட்ஸ் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. நூறு கிராம் கூட்டுப் பெருங்காயத்தில், 60-75 சதவீதம் கார்போஹைட்ரேட் (சேர்க்கப்படும் மாவின் அளவைப் பொறுத்து), 4 சதவீதம் புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 7 சதவீதம் மினரல்ஸ் மற்றும் 4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.

குடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு கம் அரேபிக் உதவுகின்றது. மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கும், உடல்பருமனைத் தடுப்பதற்கும் மற்றும் கெட்ட கொழுப்பினை (LDL Cholesterol) குறைக்கவும் கூட்டுப் பெருங்காயத்தில் உள்ள கம் அரேபிக் உதவுகின்றது.


கம் அரேபிக்கை (கவனிக்க: கம் அரேபிக். கூட்டுப்பெருங்காயம் அல்ல) ஒரு நாளைக்கு 30 கிராம் அளவிற்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உகந்தது. கூட்டுப் பெருங்காயத்தினை ஒரு கிலோவிற்கு மேற்பட்டு பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது.

தற்பொழுது சந்தையில் கூட்டுப்பெருங்காயம் தான் அதிகளவில் கிடைக்கின்றது. சில நிறுவனங்கள் ஃபெருளா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கப் பெறும் பெருங்காயம் இல்லாமல், கம் அரேபிக்கை மட்டுமே கொண்டு, கூட்டுப் பெருங்காயத்தினைத் தயாரிக்கின்றார்கள்.

ஆனால், பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே கம் அரேபிக் என்பதை உணவுச் சேர்மமாக அனுமதிக்கப்பட்டதுடன், கூட்டுப் பெருங்காயத்தையும் FSSAI அனுமதித்துள்ளது. எனவே, அச்சமின்றி கூட்டுப் பெருங்காயத்தினை எடுத்துக் கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!