பெருங்காயத்திலும் கலப்படமா? கண்டறியும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்..
பெருங்காயம். (மாதிரிப் படம்).
சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயத்திலும் கலப்படம் உள்ளது என்ற அதிர்ச்சியை நாம் அடிக்கடி கேட்க முடிகிறது. அப்படிப்பட்ட பெருங்காயத்துடன் மாவு, கம் அரேபிக் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டுப் பெருங்காயத்தில் (Compounded Asafoetida) கலப்படம் எப்படி நடைபெறுகிறது. அதனுடன் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் என்ன? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
சில பேராசைக்காரர்கள் வரம்புமீறிய லாபத்திற்கு ஆசைப்பட்டு, கூட்டுப் பெருங்காயத்தையே, “பெருங்காயமாக” விற்றோ அல்லது சுத்தப் பெருங்காயத்துடன் வேறு சில பொருட்களைக் கலந்தோ நுகர்வோரை ஏமாற்றுகின்றனர். எந்தப் பொருளையும் வாங்குவதற்கு முன்னர், கவனமுடன் இருக்க வேண்டும்.
சுத்தமான பெருங்காயத்தில் (கவனிக்க: கூட்டுப்பெருங்காயம் அல்ல) நடைபெறும் கலப்படம் மற்றும் அதனை வீட்டில் கண்டறியக்கூடிய வழிமுறைகள் குறித்து சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். அதாவது, சுத்தமான பெருங்காயத்தில் கலக்கப்படும் கலப்படப் பொருட்கள் என்னவென்றால், சோப்ஸ்டோன், மண், ஸ்டார்ச், ஃபெருளா என்ற வகையைச் சார்ந்த தாவரங்களின் பசை தவிர இதர தாவரங்களின் பசை.
நீங்கள் சுத்தமான பெருங்காயம் தான் கடையில் இருந்து வாங்கிவந்துள்ளீர்கள் என்று கருதினால், அதன் உண்மைத் தன்மையை, சில சோதனைகள் மூலம் வீட்டிலேயேக் கண்டறிய முடியும். அதாவது, முதலில் மெழுகுவர்த்தி (அல்லது ஏதோவொரு நெருப்பு வடிவம்) ஒன்று ஏற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர், ஒரு தேக்கரண்டியில் சுத்தமான பெருங்காயத்தை எடுத்துக் கொண்டு, அதனை நெருப்பின் மீது காண்பியுங்கள். தேக்கரண்டியில் உள்ள பெருங்காயமானது, ‘கற்பூரம்’ போல் எரிந்தால், அது சுத்தமான பெருங்காயம். அவ்வாறு எரியவில்லை எனில், பெருங்காயத்துடன் மற்ற வகை பசை உள்ளிட்டவற்றின் கலப்படம் உள்ளது என்று பொருள்.
ஒரு கண்ணாடி டம்பளரில், முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பெருங்காயத்தினைக் கலந்து, நன்கு குலுக்கிய பின்னர், சில நிமிடங்கள் அசைக்காமல் வைத்திருக்கவும். சிறிது நேரத்தில் டம்பளரில் உள்ள தண்ணீர் பால் போன்று வெண்ணிறத்தில் மாறி, அடியில் படிமம் ஏதுமில்லை என்றால், அது தூய்மையான பெருங்காயம் என்று பொருள். டம்பளரின் அடிப்பகுதியில் திடப்பொருட்கள் ஏதும் படிந்திருந்தால், பெருங்காயத்தில், சோப்ஸ்டோன் அல்லது மண் கலந்திருக்கலாம் என்று பொருள்.
மேலும், ஒரு கண்ணாடி டம்பளரில், முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பெருங்காயத்தினைக் கலந்து கொள்ளவும். பின்னர், 2 சொட்டு டிங்கசர் அயோடின் சேர்க்கவும். ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயம் எனில், தண்ணீரின் நிறம் நீல நிறமாக மாறும்.
பெருங்காயத்தில் ஃபெருளா வகை தாவரங்கள் தவிர மற்ற வகை தாவரங்களின் பசையின் கலப்படத்தினை உணவு பகுப்பாய்வின் மூலமே கண்டறிய இயலும் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu