சமையலுக்கு உப்பு வாங்கும்போது இதை தவறாமல் கவனியுங்கள்..
சமையலுக்கு உப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அளவுக்கு உப்பு சமையலோடு இரண்டற கலந்துவிட்ட விஷயம் ஆகும். அப்படி இருக்கையில், சமையலுக்கு கண்டிப்பாக அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், சமையலுக்கு உப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அளித்துள்ள விளக்த்தை பார்ப்போம்:
உணவிற்காக உப்பு பாக்கெட் வாங்கும்போது அந்த உப்பு பாக்கெட்டில் அயோடின் கலந்த உப்பு என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதையும், அந்த உப்பு பாக்கெட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, தரக்கட்டுப்பாடு நிர்ணய எண், அயோடின் கலந்துள்ளதா?, உணவுக்கு உகந்ததா, சிரிக்கும் சூரியன் படம் இடம் பெற்றுள்ளதா என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.
ஒருசில உப்பு தயாரிப்பாளர்கள் உணவிற்கு பயன்படுத்த தகுதியில்லாத, அயோடின் கலக்கப்படாத உப்பினை இயற்கை உப்பு என்ற பெயரிலும், பதப்படுத்தும் உப்பு என்ற பெயரிலும் ஏமாற்று வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த உப்பை உணவுக்கு பயன்படுத்த கூடாது. அது பதப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த உப்பினால் நமக்கு தேவையான அத்திவாசிய செறிவூட்டப்பட்ட அயோடின் கிடைக்காது.
நாம் உப்பு வாங்கும் போது உப்பு பாக்கெட்டின் மேல் பகுதியில் இயற்கை உப்பு எனக் குறிப்பிட்டு இருந்தாலோ, பதப்படுத்தும் உபயோகம் எனக் குறிப்பிட்டு இருந்தாலோ அந்த உப்பில் அயோடின் இல்லை எனில் அதனை உணவிற்காக வாங்க வேண்டாம்.
திறந்தவெளியில் வைத்து பாக்கெட் செய்யப்படும் சாதா உப்பு மற்றும் பிற உபயோகத்திற்காக தயாரிக்கப்படும் உப்பில் உணவுப் பாதுகாப்பு தரங்கள் எதுவும் கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் உப்புடன் மண் கட்டிகள், தலைமுடி துண்டுகள், பொட்டலமிடும் நபர் பயன்படுத்தும் வெற்றிலை பாக்கு, புகையிலை மிச்சமீதிகள் என சுகாதாரமற்ற முறையில் பாக்கெட் செய்யப்பட்டு அனுப்பும் நிலை உள்ளது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, உணவிற்காக உப்பு பாக்கெட் வாங்கும்போது தரமான அயோடின் கலந்த உப்பா? என்பதை கண்டறிந்து வாங்கி ஆரோக்கியமான வாழ்வினைபெறவும், அயோடின் சத்து பற்றாக்குறை குறைபாடுகளான முன் கழுத்துகழலை, அறிவுத்திறன் குறைபாடு, ஊணமுற்ற குழந்தை பிறத்தல், கருசிதைவு போன்ற நோய் குறைபாடுகள் இல்லாமல் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் உணவு பாதுகாப்புத் துறையின் தொடர்பு எண்ணை 9444042322 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.