காபிக்கு நிகராக சிக்கிரி, பயன்படுத்தப்படும் பழக்கம் வந்தது எப்படி?
சிக்கிரி. (மாதிரி படம்).
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1802 ஆம் ஆண்டு ஏற்பட்ட காஃபி தட்டுப்பாட்டைப் போக்க, மலிவாகக் கிடைக்கப்பெற்ற ‘சிக்கரியை’ காபிக்கு மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின்னர், நிலைமை சீரடைந்த பின்னரும், சிக்கரியின் சுவையினால், சிக்கரியை காபியுடன் கலந்து பயன்படுத்தவும் தொடங்கினர்.
காபியுடன் சிக்கரியை கலந்து சாப்பிடுவது 1750-இல் ஹாலந்தில் ஆரம்பித்தாலும், ஃப்ரான்ஸ் தான் சிக்கரியைத் தனியாக காபி போல் பானமாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பிரபலபடுத்தியது. காலனியாதிக்கத்தின் போது, இந்திய மலைப் பிரதேசங்களில் விளைவிக்கப்பட்ட காபி பெருமளவில் ஏற்றுமதிக்குச் சென்றாலும், குறிப்பிட்ட அளவு காபி, ஃப்ரஞ்ச் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கும் சென்றது.
அங்கேதான், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யவும், விலை மற்றும் சிறந்த சுவையான காபி காய்ச்சலுக்குமிடையே (Brew) சமநிலையை உருவாக்கவும், காபியுடன் சிக்கரி கலந்து, மிக்ஸ் காபி (சட்டப்பூர்வ கலப்படம்..!) இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
காபிக்கு நிகராக இருக்கின்ற சிறப்பு வாய்ந்த “சிக்கரி” குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:
சிக்கரி என்பது Chicorium Intybus Lin என்ற தாவரத்தின் சுத்தம் செய்து உலர்த்தப்பட்ட கிழங்கினை வறுத்து, அரைக்கப்பட்ட பொடி ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. சிக்கரியில் சாப்பிடக்கூடிய கொழுப்பு, உணவு எண்ணெய் அல்லது குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளிட்ட சக்கரைகளை 2 சதவீதத்திற்கும் மிகாமல் கலந்துகொள்ளலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது.
சிக்கரியில் அசுத்தங்கள், இதர வெளிபொருட்கள் இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. சிக்கரியில் செயற்கை வண்ணங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் ஆகியவற்றை சேர்க்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. சிக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ‘சிக்கரி நீர் சாறு 55 சதவீத்திற்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.
சிக்கரி பொட்டலத்தில் ஊட்டச்சத்து விபரங்கள் குறிப்பிடத் தேவையில்லை என்று FSSAI விலக்களித்துள்ளது. சிக்கரியில் தாமிரம் 30 PPM வரை இருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது. சிக்கரியில் ஆர்சனிக் 4 PPM வரை இருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது.
நூறு கிராம் சிக்கரியில் 23 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 0.3 கி, மொத்த கார்போஹைட்ரேட் 4.7 கி, இதில் நாரச்சத்து 4 கி என்ற அளவிலும், புரதம் 1.7 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் சிக்கரியில் கால்சியம் 100 மிகி (தினசரி தேவையில் 10%), மெக்னீசியம் 30 மிகி (தினசரி தேவையில் 8%), பாஸ்பரஸ் 47 மிகி (தினசரி தேவையில் 7%), பொட்டாசியம் 420 மிகி (தினசரி தேவையில் 9%), ஸிங்க் 0.4 மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் மாங்கனீஸ் 0.43 மிகி (தினசரி தேவையில் 20%) என்ற அளவில் உள்ளது.
நூறு கிராம் சிக்கரியில் வைட்டமின்-ஏ (பீட்டா கரோட்டின்) 3430 மைகி (தினசரி தேவையில் 32%), வைட்டமின்-பி5 1.15 மிகி (தினசரி தேவையில் 23%), வைட்டமின்-சி 24 மிகி (தினசரி தேவையில் 29%), வைட்டமின்-இ 2.26 மிகி (தினசரி தேவையில் 15%), வைட்டமின்-பி9 110 மைகி (தினசரி தேவையில் 28%) மற்றும் வைட்டமின்-கே 297.6 மைகி (தினசரி தேவையில் 283%) என்றளவில் உள்ளது.
சிக்கரி தாவரத்தின் அனைத்து பாகங்களும் உணவாகப் பயன்படுத்தக்கூடியதே. சிக்கரியின் கிழங்கினை, வெள்ளை முள்ளங்கி போல் சமைத்துப் பயன்படுத்தலாம். சிக்கரியின் கிழங்கு, பீர் தயாரிப்பில் “காஃபி ஃப்ளேவருக்காக” சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
சிக்கரியின் இலைகள், கீரையாகவும், சாலட் இலையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. புதிய சிக்கரியில் 13-23% என்ற அளவில் “இனுலின்” என்ற சக்கரை வகை உள்ளது. இது உணவுத் தொழிற்சாலைகளில் ‘இனிப்பூட்டியாகவும்’, உணவின் ஊட்டச்சத்து அளவினை மேம்படுத்த உதவும் வகையில் ‘உணவு நார்ச்சத்தாகவும்’ பயன்படுத்தப்படுகின்றது. இனுலின் மருந்து சிக்கரியில் இருந்து தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றது. சிக்கரி மாற்றுமுறை மருத்துவத்தில் மருந்தாகப் பட்டியலிடப்பட்டு உள்ளது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu