உங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க...!

முட்டை சாப்பிடலாம் வாங்க!
குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு முட்டை. இம்மாதம் 14ம் தேதி, அதாவது நேற்று முன்தினம் உலக முட்டை தினம். 1996 முதல், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம்.
குறைந்த விலையில், அதிக ஊட்டச்சத்துடன் கிடைப்பது முட்டைதான். வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு. குறிப்பாக, வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ முதலியவை, கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.
ஒரு முட்டையில் புரதச்சத்து ஆறு கிராம் உள்ளது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண்புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும். உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ள முழுமையான உணவு என்றால் அது முட்டைதான். எனவே, தினசரி உணவில் அதனை தாராளமாகச் சேர்க்கலாம்.
முட்டை என்றாலே புரதம்தான். பொதுவாக ஒருவரின் உடல் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. ஆனால் குழந்தைகளுக்குத் தேவையான புரதம் தாய்ப்பாலிலேயே உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம், கட்டாயம் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. மற்றபடி திரவ உணவுகளுடன் குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து, அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. ஆனால் குழந்தைகள், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலும், உடலில் மந்ததன்மை ஏற்படாது.
மனித உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சினை. ஆனால், முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புகள். அதனால் எவ்விதமான கோளாறுகளும், முட்டையால் ஏற்படாது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும், இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
சர்க்கரைநோயாளிகள், முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்து இது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரத்துக்கு 3 முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். வயது ஆகிவிட்டதே என்று தவிர்க்க வேண்டிய தேவையில்லை.
ஒரு வயதுக்கு மேல்தான், குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தற்போது முட்டை 'அலர்ஜி' வருகிறது. மற்றபடி குழந்தைகளுக்கான முழுமையான உணவு முட்டைதான். ஆனால், அதனை கொடுப்பதற்காக ஒரு வழிமுறை உள்ளது.
துவக்கநிலையிலேயே, முட்டையை வேகவைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கொஞ்சம் ஜீரணமாவதில் கஷ்டம். சில குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும். அதனால் தினமும் குழந்தைகள், ஒரு முட்டை தாராளமாக சாப்பிடலாம். அதனை தினமும் ஓரே மாதிரி அளவில் குழந்தைகளுக்கு கொடுக்காமல், உணவினை கொஞ்சம் மாற்றி விதவிதமாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.
முட்டையை முழுமையாக வேக வைக்காமல் அதனை இட்லி சட்டியில் வைத்து கொஞ்சம் ஆப்பாயில் போல வேகவைத்து கொடுத்தால் ஜீரணம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இளம் வயதினர் பலர், பச்சையாக முட்டையை குடிக்கின்றனர். பச்சை முட்டையை அப்படியே சாப்பிடும்போது, புரதம் அவர்கள் உடலில் சேராது. பச்சை முட்டை புரதத்தை கொடுப்பதில்லை. பொதுவாகவே முட்டையினை வேக வைத்தால் மட்டுமே, உடலில் புரதம் சேரும். பச்சை முட்டையாக குடித்தால் சேராது.
புரதச்சத்தில் 'கம்ப்ளீட்' புரதம், 'இன்கம்ப்ளீட்' புரதம் என்ற இரண்டு வகைகள் உள்ளது. அந்தவகையில், முட்டை ஒரு 'கம்ப்ளீட்' புரதமாக உள்ளது.
எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை தரலாம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாரத்துக்கு மூன்று முட்டை சாப்பிடலாம், சர்க்கரை நோயாளிகள் மட்டும், மஞ்சள் கருவை நீக்கிய முட்டைகளை அவித்து சாப்பிடலாம். பச்சை முட்டை குடிப்பதால் பயன் இல்லை. அதில் புரதம் இருக்காது. வியர்வை சிந்தி உழைக்கும் கடுமையான உடல் உழைப்பாளிகள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும், இரண்டு மஞ்சள் கருவை சாப்பிடலாம். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களும் கூட, தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம் என்கின்றனர் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்ந்த வல்லுனர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu