'மோட்டார்' சத்தத்துல துாங்க முடியலையா? குறட்டையை விரட்டலாம் வாங்க...!

துாக்கத்தை கெடுக்கும் குறட்டையை, ‘ஆசனங்களால்’ துரத்துவோம்.
மோட்டார் பம்பு செட்டை போல, பழுதடைந்த மின்விசிறியை போல, ஆட்டோ போல, ஸ்கூட்டர் போல, சிலர் துாங்கத் துவங்கிய சில நிமிடங்களில், குறட்டை சத்தம் ஆரம்பமாகி விடும். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க 'டிஜிட்டல் சவுண்ட்' அதிகரித்து, அருகில் படுத்துக்கொண்டிருப்பவர்கள், திடுக்கிட்டு விழித்து துாக்கம் கலைந்து எழுந்து பார்த்தால், அருகில் இருப்பவர் 'ஆயாசமாக' குறட்டை விட்டுக்கொண்டு துாங்கிக்கொண்டு இருப்பார்.
'என் கணவரின் குறட்டை சத்தத்தால், என்னால் நிம்மதியாக துாங்க முடியவில்லை' என, வெளிநாட்டில் சிலரது மனைவிகள், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, விவாகரத்து பெற்றதாக கூறப்படும் தகவல்கள், உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், குறட்டைகளின் வீரியம், துாக்கத்தை விரட்டி விடும்.
குறட்டை விடும் பழக்கத்தை, யாரும் விரும்பி செய்வதில்லை. பலரது உடல் நிலை, தூக்கத்தில் 'டிஸ்ஸார்டர்' உள்ளிட்ட பலவிதமான காரணங்களால் குறட்டை விடும் பழக்கம் ஏற்படுகிறது. இது பல நேரங்களில் நமது நெருக்கமானவர்களையும் நம்மை வெறுக்க செய்யும் அளவுக்கு தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.
சுவாசப்பாதையில் உள்ள திசுக்கள், காற்று உள்ளே வந்து செல்லும்போது அதற்கு நடுவில் அடைத்து கொண்டு நிற்கும்போது ஏற்படும் சத்தமே இந்த குறட்டை. சில நேரங்களில் இது தீவிரமாக கவனிக்க வேண்டிய தூக்கம் சார்ந்த 'டிஸ்ஸார்டர்'களாக கூட இருக்கலாம். இதனால் இதய நலன், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு என எல்லாமே பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, இது குறித்து டாக்டரிடம் பேசுவது நல்லது. அதே சமயத்தில் வீட்டிலேயே இந்த மூன்று யோகாவை தினசரி செய்து குறட்டை தொல்லையில்லாமல் நிம்மதியாக துாங்கலாம்.
தனுசாசனம்
கீழே தரை நோக்கி படுத்து கொண்டு நமது உடலையே வில் போல வளைத்து மேல்நோக்கியபடி கை மற்றும் கால்களை ஒன்றிணைக்க வேண்டும். இதுதான் தனுசாசனம் . முடிந்தளவு ஆரம்ப கட்டத்தில் பிறரின் உதவியோடு கூட இந்த யோகாசனத்தை செய்து பார்க்கலாம்.
இதை செய்வதால் சுவாச பாதை இலகுவாகி, சுவாச பிரச்சனைகள் தீர்ந்து விடும். இது மட்டுமின்றி மலச்சிக்கல், மாதவிடாய் நேர பிரச்சனைகள், முதுகுவலி, சோர்வு, கவலை உள்ளிட்ட மற்ற பல உடல் ஆரோக்கிய நலன்களுக்கும் பயன்படுகிறது. அதே போல் தொப்பை குறைய, பிறப்புறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் செல்லவும் இது உதவுகிறது.
புஜங்காசனம்
பாம்பு போல தலை மற்றும் தோள்ப்பட்டையை தூக்கி சிறிது நேரம் கையை தரையில் ஊன்றி மீதமுள்ள உடலை தரையில் படும்படி வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
இதனால்தான் இதற்கு புஜங்காசனம் என்று பெயர் வந்தது. இது ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகளில் இருந்து தற்காத்து கொள்ளவும், சீரான சுவாசத்தை வழங்கவும் பயன்படுகிறது.
மேலும், கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை போக்குகிறது. தோள்ப்பட்டை மற்றும் மார்பு பகுதியை விரிவு செய்து பலமாக்குகிறது.சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை போக்குகிறது. ஒட்டுமொத்த உடலையும் இலகுவாக்குகிறது.
பிராணயாமம்
பிராணாயாமம் என்பதே மூச்சு சார்ந்த யோகா பயிற்சிதான். நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, உடலை இலகுவாக்கி கொண்டு கட்டை விரல்களை கொண்டு காதுகளை மூடி கொண்டு, ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் கொண்டு புருவத்தின் மேலே வைத்து கொள்ள வேண்டும்.
மோதிர விரலால் கண்களை மூடி, சுண்டு விரல் கொண்டு உதட்டிற்கு மேல் வைத்து பொறுமையாக மூச்சை வெளியே விட வேண்டும். மூச்சு வெளியேறும்போது ஒரு வித சத்தத்தோடு வெளியேறும். இதன் மூலம் தொண்டை ஆரோக்கியமாகிறது.
மேலும், உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க, இதய நலன் உள்ளிட்டவற்றிற்கு உதவும் நைட்ரிக் அமில உற்பத்தியில் இந்த பிராணயாமம் உதவுவதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu