அடிக்கடி பசிக்குதா? இல்லே, சரியா பசிக்கவே இல்லையா? இதை படிங்க முதல்ல...

அதிகமாக பசிக்கிறதா? அல்லது பசியே இல்லையா? டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.
அதிக பசி என்பது, சிலருக்கு இயல்பானது. ஆனால், சிலருக்கு எப்போதுமே பசிப்பது போன்ற உணர்வு இருக்கும். எதையாவது சாப்பிட்டுக் கொண்டே, அவர்கள் இருப்பார்கள். இந்நிலைக்கு, 'பாலிபேஜியா' என்று பெயர். எப்போதும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு இருந்தால், கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும். மேலும், அப்படி அடிக்கடி தோன்றுவதற்கான காரணங்களும் உண்டு.
மனஅழுத்தம்
பதட்டமாகவோ அல்லது ஆழ்ந்த கவலையில் இருக்கும்போதோ மூளை, 'கார்டிசோல்' ஹார்மோனை வெளியிடும். இதுதான், பசியை தூண்டுகிறது. பலரின் உடலும் இத்தகைய சூழலில் தன்னுடைய பதட்ட நிலையை குறைக்க சர்க்கரை அல்லது கொழுப்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிட தூண்டும்.
நீரிழப்பு
உடலில் ஏற்படும் நீரிழப்பால் அதீத தாகம் மற்றும் அதீத பசி வித்தியாசம் அறிவது கடினம். இரண்டுமே கிறக்கம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும்.
தைராய்டு
கழுத்துப்பகுதியில் ஏற்படும் தைராய்டு பிரச்சனை, அதீத பசியை ஏற்படுத்தும். உடல் உறுப்புக்கள் செயல்படும் விகிதத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை இது உருவாக்கும். பதட்ட உணர்வு, வேகமான இதயத்துடிப்பு, அதிக தாகம், தசை வலி மற்றும் அதிகமான வியர்வை ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
டயட் சோடா
'டயட்' உணவுமுறைகளை பின்பற்றும் பலர், குடிக்கும் 'டயட்' சோடா, பசியை தூண்டுகிறது. இது மூளையை வேறு உணவிலிருந்து கலோரிகளை பெறத் தூண்டுகிறது. இதனால், பசி உணர்வு ஏற்படுகிறது. இதனால் தலைவலி, உடல் பருமன், இனிப்பு சாப்பிடும் உணர்வு ஏற்படலாம்.
மருந்துகள்
சிலர் புதிதாக சிகிச்சை எடுக்கும்போது, அதற்கான மருந்து, மாத்திரைகளை உண்ணும்போது, உடல் எடை கூடுதல் மற்றும் அதிகமாக பசி ஏற்படும். 'அலர்ஜி'க்கான மருந்துகளால், இதுபோல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற வேளைகளில், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
உணவு கட்டுப்பாடு எனும் 'டயட்'
சிலர் உடல் எடை குறையவும், வேறு காரணங்களுக்காகவும் 'டயட்' துவங்கும்போது, ஒரே நாளில் முந்தைய உணவுமுறை பழக்கத்தை மாற்றி விடுகின்றனர். மேலும், 'டயட்' காரணமாக முழுமையான, சத்தான உணவுகளை தவிர்க்க கூடாது.
அதிக நார்ச்சத்து உணவுகள், புரதச்சத்து உணவுகளை சாப்பிட்டால்தான், முழுமையாக சாப்பிட்ட உணர்வு ஏற்படும். ஆரோக்கியமற்ற கார்ப்ஸ் அதிகமாக உள்ள உணவுகள், ஊட்டச்சத்து குறைந்த உணவுகளால், சாப்பிட்டு முடித்த பின், மீண்டும் பசி உணர்வை வயிறு கிளப்பி விடும்.
தூக்கமின்மை
சரியாக துாங்காமல், தூக்கம் பாதிக்கப்படுவதால், இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதிக்கிறது. இதனால் அதீத பசி ஏற்படுகிறது. எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும், முழுமையாக சாப்பிட்டதாக உணர முடியாது. மேலும், சோர்வு மற்றும் உடல் வலிமை குன்றி பலவீனமாக காணப்படும்.
ஹைப்போகிளைசீமியா
உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவதால், 'ஹைப்போகிளைசீமியா' ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட வேறு நோய் உள்ளவர்களுக்கும் இது ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள், போதையில் இருப்பது போல காட்சியளிப்பர். அவர்களால், சரியாக நடக்க முடியாது. சோர்வடைந்து காணப்படுவர்.இது, அவர்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக பசிப்பது இயல்பு. குறிப்பாக 'டைப் 1' சர்க்கரை நோயளிகளுக்கு அதிக பசியை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, மிகவும் அதிகமான பசி ஏற்படும். இது பசியை மட்டுமின்றி சோர்வு, மயக்கம், அதிக வியர்வை, தாகம், எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளை கொடுக்கும்.
எனவே, அதிகமாக பசித்தாலும், பசிக்கவே இல்லை என்றாலும் கவனமாக, அதற்கேற்ப வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu