சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.. இதுவரை அறிந்திராத தகவல்கள் இதோ…

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.. இதுவரை அறிந்திராத தகவல்கள் இதோ…
X

சீரகம். (மாதிரி படம்).

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சீரகத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் உள்ளிட்டவை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் இதோ:

பூக்கள் வகையைச் சார்ந்த சீரகமானது, கருஞ்சீரகம், சீரகம் மற்றும் அவற்றின் பொடிகள் ஆகிய நான்கு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. முழு சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தில் அதற்குரிய சிறப்பு வாசனையுடன் இருக்க வேண்டும். பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.


முழு சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தில் எந்த செயற்கை நிறமியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. முழு சீரகம் மற்றும் கருஞ்சீரகம் மற்றும் அதன் பொடியில் ஈரப்பதம் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது.

பூச்சிகள் தாக்கப்பட்ட முழு சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தில் ஒரு சதவீதத்திற்கு மேல் இருத்தல் கூடாது, பாதிப்படைந்த சீரகம் 5 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது. முழு கருஞ்சீரகத்தில் இதர உணவு விதைகள் 2 சதவீதத்திற்கு மேல் இருத்தல் கூடாது. ஆனால், சாதாரண சீரகத்தில் இதர உணவு விதைகள் இருக்கவே கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

சீரகப்பொடியில் ‘ஆவியாகாத ஈதர்’ 15 சதவீதத்திற்கு குறையாமலும், கருஞ்சீரகப் பொடியில் ‘ஆவியாகாத ஈதர்’ 12 சதவீதத்திற்கு குறையாமலும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

சீரகத்தில் உள்ள சத்துக்கள்:


நூறு கிராம் சீரகத்தில் 375 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 22 கி, அதில் மோனோ-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 14 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 3 கி என்ற அளவில் உள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் 44 கி, அதில், நார்ச்சத்து 10 கி, புரதம் 17 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

சீரகத்தில் கால்சியம் 931 மிகி (தினசரி தேவையில் 93%), இரும்புச்சத்து 66 மிகி (தினசரி தேவையில் 510%), மெக்னீசியம் 930 மிகி (தினசரி தேவையில் 262%), மாங்கனீஸ் 3.3 மிகி (தினசரி தேவையில் 159%), பாஸ்பரஸ் 499 மிகி (தினசரி தேவையில் 71%), பொட்டாசியம் 1788 மிகி (தினசரி தேவையில் 38%), ஸிங்க் 4.8 மிகி (தினசரி தேவையில் 51%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் சீரகத்தில் வைட்டமின் - பி1 0.6 மிகி (தினசரி தேவையில் 55%), வைட்டமின்-பி2 0.3 மிகி (தினசரி தேவையில் 27%), வைட்டமின்-பி3. 4.5 மிகி (தினசரி தேவையில் 31%), வைட்டமின்-பி6 0.4 மிகி (தினசரி தேவையில் 33%) மற்றும் வைட்டமின்-இ 3.3 மிகி (தினசரி தேவையில் 22%) என்றளவில் உள்ளது.

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்:

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிக்கல்ஸ்” என்ற காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் சீரகத்தில் உள்ள ‘ஃப்ளாவினாய்ட்ஸ்-க்கு’ உண்டு. சீரகத்தில் உள்ள பைனின், டெர்பைன், குமினால்டிகைடு, ஒலியோரெசின் மற்றும் தைமால் போன்ற காரணிகள் தான் சீரகத்தின் நோய் எதிர்ப்புத் தன்மைக்குக் காரணம்.


சீரகத்தில் உள்ள தைமால் என்ற காரணிதான் (மற்ற சில தாவரங்களிலும் இக்காரணி உண்டு), ஆன்ட்டி-ஹெல்மின்த் என்ற வயிற்றுப்புழு சம்பந்தப்பட்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. கருஞ்சீரகம் ‘அல்சர்’ என்று பொதுவாக சொல்லக்கூடிய வயிற்றுப் புண் வராமல் தடுக்கின்றது.

சீரகம் கலந்த ஆயுர்வேத மருந்து மூலம் மனிதர்களிடத்தில் மேற்கொண்ட ஆய்வில், சீரகம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், சீரகம் நீரிழிவு நோய் சார்ந்த இதர வளர்சிதை மாற்ற நோய்களைத் (Metabolic Disorders) தணிப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

சீரகத்திற்கு ‘ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி’ குணமும் உள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பினைக் குறைக்கும் ஆற்றல் சீரகத்திற்கு இருப்பதால், இது ஒரு சிறந்த இதய பாதுகாவலன். கருஞ்சீரகம் நுரையீரல் பாதிப்பைத் தடுக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

கருஞ்சீரகம் வயிற்றுப்புற்று நோயைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீரகம் உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகும். சீரகம் ஒரு சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியும் கூட! ‘இரிட்டபிள் பௌல் ஸின்ட்ரொம்’ (Irritable Bowel Syndrome) என்று சொல்லக்கூடிய வயிறு சார்ந்த நோயின் அறிகுறிகளை சீரகம் சற்று தணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும், நினைவாற்றலை அதிகரிப்பதாகவும் சோதனைச்சாலை எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil