மஞ்சள் பொடியில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கத்தை படிங்க...

மஞ்சள் பொடியில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கத்தை படிங்க...
X

மஞ்சள் பொடி. (மாதிரி படம்).

மஞ்சள் பொடியில் கலப்படம் உள்ளதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது உணவு முறையிலும், வைத்தியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள். மஞ்சளில் உள்ள நுண்ணுயிர்க் கொல்லி பண்பினால், கொரானா தடுப்பில் முக்கிய பங்கு வகித்ததை அனைவரும் அறிவோம். அற்புதமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சளை ஒரு நாளைக்கு 2000 மில்லி கிராம் என்ற அளவு வரை எடுத்துக் கொண்டாலும் ஒன்றும் பிரச்னை ஆகாது என மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடியில் உள்ள கலப்படம் மற்றும் அதை கண்டறிவது எப்படி என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம்:


மஞ்சள் கிழங்கு மற்றும் பொடியில் மெட்டானில் எல்லோ என்ற செயற்கை நிறமி, அனிலீன் டை என்ற செயற்கை நிறமி, நாப்தால் ஆரஞ்சு அல்லது ஆசிட் ஆரஞ்சு என்ற செயற்கை நிறமி, சூடான் ரெட்-ஜி என்ற செயற்கை நிறமி ஆகியவை கலப்பட பொருளாக சேர்க்கப்படுகிறது. மஞ்சள் பொடியில் மேலே கூறப்பட்டவை தவிர, சாக் பொடி, மரத்தூள், மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச், லெட் மஞ்சள் உப்பு ஆகிவை கலப்படம் செய்யப்படுகின்றன.

அனீலின் டையினால் சிறுநீர் பை புற்றுநோயும், மெட்டானில் எல்லோவினால் மூளை செயல்பாட்டு குறைவு, புற்றுநோய் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. லெட் உப்புக்களால் டிஎன்ஏவில் பாதிப்பு ஏற்படவும், சூடான் டையினால் ஈரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வக எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மஞ்சள் கிழங்கு அல்லது பொடியில் செயற்கை வண்ணங்கள் உள்ளதை வீட்டிலேயே ஆய்வு செய்து கண்டுபிடிக்கலாம். அதாவது, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி அல்லது ஒரு துண்டு மஞ்சள் கிழங்கினை அதில் போட்டால், செயற்கை நிறமி கலந்த மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறமானது தண்ணீரோடு கலந்து, தண்ணீர் மஞ்சளாகும். தூய்மையான மஞ்சள் அவ்வாறு நிறம் மாறாது.

மஞ்சள் பொடியில் மரத்தூள்கள் கலப்படத்தைக் கண்டறிய, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு மஞ்சள் பொடியைத் தூவி, கலக்கிவிட்டு, சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். மஞ்சள் பொடியில் மரத்தூள்கள் இருந்தால், அவை மிதக்கும் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!