வியக்க வைக்கும் வெந்தயத்தின் பலன்கள்.. உணவு பாதுகாப்பு துறை அலுவலரின் ஆலோசனையை படியுங்கள்...
வெந்தயம் (மாதிரி படம்).
கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தினமும் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது உடலின் வெப்பநிலையை சீர்படுத்தவல்லதாக திகழும் வெந்தியம் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள், பலன்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:
வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் அதன் நீரை பருகி வந்தால், நமது உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணவாகவும், மருந்தாகவும் வெந்தயம் பயன்பட்டதிற்கு ஆய்வுக் குறிப்புகள் உள்ளன. வெந்தயம் ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கிய மூலிகைப் பொருளும் கூட.
வெந்தயம் மற்றும் அதன் பொடி ஆகிய இரண்டு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. வெந்தயம் என்பது ‘Trigonella Foenum Graecum' என்ற தாவரத்தின் முதிர்ந்த மற்றும் காய்ந்த விதைகள் ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. வெந்தயத்தில் எவ்விதமான அயற்சுவையோ, கெட்டுப்போன சுவையோ அல்லது விரும்பத்தகாத மணமோ இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.
வெந்தயத்தில் பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. வெந்தயத்திலும் மற்றும் அதன் பொடியிலும் எந்த செயற்கை நிறமியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.
வெந்தயத்திலும் மற்றும் அதன் பொடியிலும் ஈரப்பதம் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. வெந்தயத்தில் பூச்சிகள் தாக்கப்பட்ட வெந்தயம் 1%-ற்கு மேல் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. வெந்தயத்தில் வெளிப்புறப் பொருட்கள் 2%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. வெந்தயத்தில் இதர உணவு விதைகள் 2%-ற்கு மேற்பட்டு இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.
நூறு கிராம் வெந்தயத்தில் 323 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 6.4 கி, மொத்த கார்போஹைட்ரேட் 58 கி, அதில், நார்ச்சத்து 25 கி, புரதம் 23 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் வெந்தயத்தில் கால்சியம் 176 மிகி (தினசரி தேவையில் 18%), இரும்புச்சத்து 34 மிகி (தினசரி தேவையில் 262%), மெக்னீசியம் 191 மிகி (தினசரி தேவையில் 54%), மாங்கனீஸ் 1.3 மிகி (தினசரி தேவையில் 59%), பாஸ்பரஸ் 296 மிகி (தினசரி தேவையில் 42%), பொட்டாசியம் 770 மிகி (தினசரி தேவையில் 16%), ஸிங்க் 2.5 மிகி (தினசரி தேவையில் 26%) என்ற அளவில் உள்ளது.
நூறு கிராம் வெந்தயத்தில் வைட்டமின் - பி1 0.3 மிகி (தினசரி தேவையில் 28%), வைட்டமின்-பி2 0.36 மிகி (தினசரி தேவையில் 31%), வைட்டமின்-பி6 0.6 மிகி (தினசரி தேவையில் 46%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 57 மைகி (தினசரி தேவையில் 14%) என்றளவில் உள்ளது. வெந்தயத்தினை உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி வைத்தால், மூன்றாண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம். திறந்தவெளியில் வைத்திருந்தால், மிகக் குறுகிய காலமே அதனைப் பயன்படுத்த இயலும்.
வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். வெந்தயம் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகின்றது. வெந்தயம் கலந்த நீரை குடிப்பதால் நமது வாழ்நாள் அதிகமாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் நமது உடல் எடையை சீராக வைத்து, மேலாண்மை செய்வதற்கும் பயன்படுகிறது. வெந்தயம், ஏப்பம் போன்ற செரிமான மண்டலம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்கிறது.
வெந்தயம் கலந்த நீரை குடிப்பதால், முடி நன்றாக வளர்வதுடன், முடியின் அடர்த்தி அதிகமாகிறது. மேலும் பொடுகு போன்ற பிரச்சினைகளை தடுக்கின்றது. வெந்தயம் கலந்த தண்ணீர், நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. வெந்தயம் நமது செரிமான மண்டலத்தின் அசைவுகளை (Bowel Movements) மேம்படுத்த உதவுகின்றது.
வெந்தயம் பசியின்மை, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்று வலி, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறது. வெந்தயம் மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வெந்தயம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu