மனிதனை மனிதன் கடித்தால் மரணம் ஏற்படுமா?...... ஆரோக்யத்துக்கு பயனளிக்கும் டாக்டர் கேள்வி-பதில் : பகுதி 9

dr question and answers,about health நம் ஆரோக்யத்தில் அக்கறை காட்டினாலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழு விடை கிடைப்பதில்லை. இதுபோன்ற சந்தேகங்களுக்கு டாக்டர் அளிக்கும் விளக்கத்தினைப் படிச்சுத்தான் பாருங்களேன்...

HIGHLIGHTS

மனிதனை மனிதன் கடித்தால்  மரணம் ஏற்படுமா?......  ஆரோக்யத்துக்கு பயனளிக்கும்   டாக்டர்  கேள்வி-பதில்  : பகுதி 9
X

நம்முடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்  டாக்டர்  (கோப்பு படம்)

dr question and answers,about health

மனிதப்பிறவி என்பது மகத்தானதுங்க... உடல் ஆரோக்யம் என்பது மிக மிக முக்கியமுங்க.ஆரோக்யமான உடம்பு இல்லைன்னா நம்மால் எந்த செயல்களையும் செய்யவே முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையவே முடியும்.

ஆனால் பெரும்பாலானோர் அவர்களுடைய உடல் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதே இல்லை. நோய் முற்றிய பின் ஆஸ்பத்திரிக்கு ஓடி என்ன பிரயோஜனம்? எல்லோருக்கும் சொல்வது ஒண்ணே ஒண்ணுதாங்க. நம் உடம்பு செயல்பாடு மற்றவர்களுக்கு தெரியாது...நமக்கு மட்டுமே தெரியும் வழக்கமான செயல்பாட்டைத்தவிர ஏதாவது மாற்றம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக காசு செலவானாலும் பரவாயில்லைன்னு டாக்டரைப் போய் பார்த்துவிட வேண்டும். தலைவலி என்றால் கொஞ்ச நேரம் வரும். அதுவே இரண்டு நாள் தலைவலியாக இருந்தால் அதனை அப்படியே விட்டுவிட முடியுமா? தலையில் ஏதோபிரச்னையால்தான் தலை தொடர்ந்து வலி தருகிறது என எண்ணி சம்பந்தப்பட்ட டாக்டரைச் சென்று பார்த்துவிடவேண்டும். அதுபோல் டாக்டரிடம் சென்றாலும் நம்மால் எல்லா சந்தேகத்தினையும் கேட்க முடிவதில்லை..முடியாது. அதற்காகவே இந்த பகுதி. நோய்கள் சம்பந்தமாக கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர் பதில் அளித்துள்ளார். படிச்சு பாருங்க.....

கே:தொப்புளின் மேல் பகுதியில் புண் இல்லாமல் சீழ் வருகிறதே இது ஏன்?

ப: தொப்புளுக்கு கீழ் வயிற்றின் உட்சுவரில் நோய்த்தொற்று இருந்து குழிப்பையைத் தோற்றுவிட்டிருந்தால் ,தொப்புளின் மேல்பகுதியில்புண் இல்லாமல் சிறிய ஊசித்துவாரத்தின் வழியாகச் சீழ் வெளியேறும். இதை எளிய அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கிவிடலாம்.

கே: நம் உடம்பில் அதிக ரத்த ஓட்டம் உள்ள பகுதி எது?

ப: தோல்.

கே:கண்களின் வெண்திரையில் கறுப்பு நிறமான புள்ளிகள் ஏற்படுவதேன்?

ப:மெலனின் எனும் கறுப்பு நிறமிகள் கண்களின் விழி, வெண்படலத்தில் குவியாகப் படிவதால் கறுப்பு நிறப்புள்ளிகள் ஏற்படுகின்றன. இது பலருக்குப் பிறக்கும்போதே மச்சமாக இருக்கும். சிலருக்கு இது வைட்டமின் ஏ சத்துக்குறைபாடு. அடிசன் வியாதி,டிராக்கோமா, போன்ற நோய் நிலைகளிலும் தோன்றும்.

கே: பான்பராக் போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

ப:பான்பராக் போடுபவர்களுக்கு ஆரம்பத்தில் அஜீரணம் தலைகாட்டும். பசி குறையும். உணவை சாப்பிடப் பிடிக்காது. நாளாக ஆக வயிற்றில் புண் ஏற்பட்டு வயிற்றுவலி தொல்லை கொடுக்கும். வாயின் உட்புறத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்த சிறிய திட்டுகள் தோன்றும். இந்த சம்பவத்திலாவது அந்த நபர் சுதாரித்து பான்பராக் பழக்கத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அதிபயங்கர விளைவான புற்றுநோய் துளிர்க்கும். வாய், கன்னம், நாக்கு, தொண்டை, போன்ற இடங்களில் புற்றுநோய் வேரூன்ற மரணம் நெருங்கும்.கே:பிறவி ஊமைக்கு காதுகள் கேட்குமா?

ப: காதுக்கு வரும் கபால நரம்பு பிறவியிலேயே பாதிக்கப்படாத பட்சத்தில் பிறவி ஊமைக்குக் காதுகள் கேட்கும்.

கே:அரிசி சத்துப்பொருள்தானே...பிறகு ஏன் அரிசியை அதிகமாக சாப்பிடக்கூடாது என்று சொல்கின்றனர்?

ப:அரிசி சத்துப்பொருள்தான். ஆனால் அதில் கார்போஹைட்ரேட் என்ற சத்து மட்டும்தான் பெருமளவில் உள்ளது. மற்ற சத்துகள் இல்லை. நம் உடல் வளர்ச்சி பெறுவதற்கு கார்போஹைட்ரேட் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் ,தாதுப்பொருட்கள், என்று பல சத்துகள் அவசியம். அரிசியை மட்டும் அதிகமாகச் சாப்பிட்டால் மற்ற சத்துகள் அடங்கிய உணவுப் பொருள்களைச் சாப்பிட இயலாது. ஆக மற்ற சத்துகள் நம் உடம்பில் சேர வாய்ப்புஇருக்காது. இதனால் சத்துக்குறைவு நோய்கள் ஏற்பட்டு உடம்பு பாதிக்கப்படும். இதைத் தவிர்க்கவே அரிசியை மட்டும் அதிகமாகச் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

கே:படிக்கும்போதும்,எழுதும்போதும் கண்ணீர் வருகிறது இதை எப்படிக் குணப்படுத்துவது?

ப: கண் தசைகள் களைப்படைதல், கண்ணீர்ச் சுரப்பிகளின் அடைப்பு, சத்துக்குறைவு, வைட்டமின் குறைபாடு, பார்வைக்குறைபாடு, போன்ற பல காரணங்களால் அவ்வாறு கண்ணீர் வழிவதுண்டு. கண் டாக்டரை அணுகி உரிய காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் முழு குணம் கிடைக்கும்.
கே:உடம்பில் குளுக்கோஸ் ஏற்றும்போது ஒவ்வொரு சொட்டாக உள்ளே செல்லும்படி வைப்பது ஏன்? வேகமாக செலுத்தினால் என்ன நிகழும்?

ப:நோயாளிக்கு செலுத்தப்படுகின்ற குளுக்கோஸ் அல்லது சலைனின் வேகத்தை பல விவரங்களின் அடிப்படையில் அமைத்துக்கொள்கிறார்கள். டாக்டர்கள், அதாவது நோயாளியின் நோய், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடல் திரவ நிலை, நச்சு நிலை, அயனிகளின் அளவு அவசர நிலை போன்றவற்றை அறிந்துகொண்டு அதற்கேற்ப நோயாளிக்குத் தேவைப்படுகிற வேகத்தில் அவற்றைச் செலுத்துவார்கள். மெதுவாக செலுத்த வேண்டிய நபருக்கு வேகமாகச் செலுத்தினாலும் ஆபத்து வேகமாக செலுத்த வேண்டிய நபருக்கு மெதுவாகச் செலுத்தினாலும் ஆபத்து.

கே:கொசு நம் உடலின் எப்பாகத்தில் கடித்தாலும் மலேரியாக போன்ற நோய்கள் வருமா? அல்லது கால்களில் மட்டும் கடித்தால் வருமா?

ப: உடம்பில் எப்பாகத்தில் கொசு கடித்தாலும் மலேரியா வரலாம். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவெனில் கடிக்கும் கொசுவின் உமிழ்நீரில் மலேரியா கிருமிகள் இருக்க வேண்டும்.

கே:என்குரல் இனிமையாக இருப்பதற்கு எந்தெந்த காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்? வேறு யோசனைகள் இருந்தாலும் சொல்லுங்க...

ப: வைட்டமின் பி2 நிறைந்த பால், முட்டை இறைச்சி, ஈரல், பாலாடை போன்றவற்றையும் வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சுப்பழச்சாறு ,எலுமிச்சைப் பழச்சாறு, கொய்யா, ஆப்பிள், தக்காளி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், நெல்லிக்கனி, போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிட்டு தினமும் குரல் பயிற்சி எடுக்கவேண்டும். தொண்டையில் அடிக்கடி சளி பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இருமல் வருவதைத் தடுக்க வேண்டும். புகைபிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. வெற்றிலை போடக்கூடாது. மூக்கு அடைப்பு ஏற்படக்கூடாது.
கே: பல் அடிக்கடி கூசுவது போல் உணரப்படுவது ஏன்?

ப: சொத்தைப்பல், தேய்ந்த பற்கள், இவை இரண்டிலும் பல் கூசுவது உண்டு. சில சமயங்களில் கடினவகைப் பல் துலக்கியால் அழுத்தித் தேய்க்கும் போதும், சாம்பல், செங்கல்பொடி, போன்றவற்றில் பல் தேய்க்கும்போதம் பல் கூச்சம் உண்டாகும்.

கே:என்னுடைய உடம்பில் பல பாகங்களில் கருத்த முடியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதை நிரந்தரமாக தடுக்க ஹார்மோன் ஊசி போடலாமா?

ப: உங்களுடைய பிரச்னைக்கு ஹார்மோன் ஊசி பயன்தராது . தோல்டாக்டர் ஒருவரை நேரில் பார்த்து ஆலோசனை பெற்றால் நல்லது. அல்லது அழகு நிலையங்களுக்குச் சென்று எலெக்ட்ரோலைசிஸ் முறைப்படி வேண்டாத முடிகளை அகற்றி தற்காலிகமாகத் தீர்வு காணலாம்.கே:வெந்நீ்ரில் குளிப்பது நல்லதா?

ப:நல்லதுதான். இப்போது வருகிற பெரும்பாலான தொற்று நோய்களுக்கும் தோல் வியாதிகளுக்கும் சுகாதாரமற்ற தண்ணீர்தான் முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. வெந்நீரில் குளிப்பதன் மூலம் ஓரளவிற்கு நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இயலும்.

கே: நான் நன்றாகப் படிப்பதற்காக இரவில் வெகுநேரம் கண் விழிக்க விரும்புகிறேன். இதற்கு ஒரு வழி சொல்லுங்க..

ப:வேண்டாம். உங்களுக்குக் குறைந்தது தினமும் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் வரை ஓய்வு தேவை. அப்போதுதான் மூளை அணுக்கள் இரவில் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு பகலில் உற்சாகமாக வேலை செய்யும். தினமும்இரவில் இப்படி ஓய்வு எடுத்துப் படித்தால்தான் படிக்கின்ற பாடங்கள் மனதில் பதியும். மாறாக இரவில் அதிக நேரம் கண் விழித்தால் மூளை அயர்ந்துவிடும். மறுநாள் படிக்கும் பாடங்கள் மனதில் தங்காது மறந்துவிடும். ஆகவே இரவில் வெகுநேரம் கண்விழிக்க முயற்சிக்க வேண்டாம்.கே:அதிக வேலை செய்தால் மயக்கம் ஏற்படுவதேன்?

ப:அதிகவேலை செய்யும்போது வியர்வை மூலம் தாதுக்கள் வெளியேறிவிடுகின்றன. புரதசத்தும், மாவுச்த்தும், தேவைக்கு அதிகமாகச் செலவாகிவிடுகின்றன. இதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய போதுமான அளவு சத்துகள் கிடைக்காமையால் மயக்கம் உண்டாகிறது.

கே:நான் படிக்கும்போது என் கண்களில் இருந்து நீர் வருகிறது? இது ஏன்? எப்படித்தடுப்பது?

ப: கண்ககளிலிருந்து நீர் வருவது பார்வைக் கோளாறுக்கு அறிகுறி. அதிலும் படிக்கும்போது மட்டும் கண்களில் நீர் வருகிறதென்றால் பார்வைக் கோளாறு உறுதி செய்யப்பட்ட மாதிரிதான். ஆகையால் உடனடியாக ஒரு கண்டாக்டரை பாருங்கள். தகுந்த கண்ணாடி அணிந்துகொண்டால் கண்களில்நீர் வருவது நின்றுவிடும். பார்வைக்கோளாறும் சரியாகிவிடும்.

கே:மனிதனை மனிதன் கடித்தால் மரணம் ஏற்படுமா? எப்படி?

ப: வெகு அபூர்வமாக நடக்கக்கூடிய அசம்பாவிதம்இது. கடிப்பவரின் உமிழ்நீரில்வெறிநாய்க்கடி நோய்க்கிருமிகள் இருந்து கடிபட்டவர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையென்றால் மரணம் ஏற்படலாம்.
கே:யானைவெடி, அணுகுண்டு வெடி போன்ற அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பது கெடுதலா?

ப: ஆம். கெடுதல்தான். அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிக்கும்போது காதுக்குள்ளே உள்ள செவிப்பறை கிழிந்து காது இரைச்சல் ஏற்படும். செவி நரம்பு அதிர்ந்து காது கேளாமைக்கு அஸ்திவாரம் போடும். வெஷ்டிபுலர் அமைப்பு பாதிக்கப்பட்டு தலைச்சுற்றல் ஏற்படலாம். ஆகையால் இம்மாதிரியான வெடிகளை வெடிக்கக்கூடாது.

கே:தலைக்குள்ளே பலவிதமான இரைச்சல் எந்நேரமும் கேட்பதேன்? இதற்கு நிவாரணம் என்ன?

ப:உட்செவிக் கோளாறு மற்றும் உளவியல் கோளாறுகளால் தலைக்குள் இரைச்சல் கேட்கலாம். உரிய டாக்டரை அணுகித் தேவையான மருத்துவம் பெற்று நிவாரணம் பெறவேண்டும்.

கே:பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளது. இதைச் சரிசெய்ய இயலுமா? இயலும் என்றால் எப்படி?

ப:பற்களுக்கு இடையில் சிறிதளவு இடைவெளி இருந்தால் கம்பிக்கட்டு மூலம் பற்களை நெருக்கி இடைவெளியினைக் குறைத்துவிடலாம். இடைவெளி அதிகமாக இருந்தால் செயற்கைப் பல் ஒன்றை அந்த இடைவெளியில் பொருத்திக்கொள்ளலாம்.கே:மூக்கில் நீர் வடிவது ஏன்?

ப:ஒவ்வாமை, மூக்கின் சிலேட்டுமப் படல அழற்சி, வைரஸ் பாதிப்பு ஆகியவற்றால் மூக்கழற்சி ஏற்பட்டு, மூக்கில் நீர் வடிகிறது. சிலேட்டுமப் படலம் மெல்லியதாகி, நொய்மை அடைவதாலோ அல்லது மிகை வளர்ச்சி அடைந்து அதிகமாகச் சுரப்பதாலோ இந்நிலை உண்டாகிறது. இதன் காரணத்தைக் கண்டு பிடித்து எதிர் ஒவ்வாமை மருந்துகளை அளித்துக்குணப்படுத்தலாம்.

(இன்னும் வளரும்....)

நன்றி: டாக்டர்.மாணிக்கவேல்

Updated On: 2 April 2023 1:46 PM GMT

Related News