தேயிலையில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

தேயிலையில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?
X

தேயிலை (மாதிரி படம்).

தேயிலையில் கலப்படம் இருந்தால் அவற்றை கண்டுபிடிப்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு காபி சாப்பிடலாமா? ஒரு டீ குடிக்கலாமா? என ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது சகஜமாக கேட்டுக் கொள்ளும் நலம் விசாரிப்பாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், டீ என அழைக்கப்படும் தேநீரின் முக்கிய மூலப்பொருளான தேயிலையில் கலப்படம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

தேயிலையில் கங்க்ரா தேயிலை, கருப்பு தேயிலை, பச்சை தேயிலை என மூன்று வகைகள் உள்ளன. இதில், கருப்பு மற்றும் பச்சைத் தேநீர் எதுவாகினும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூந்று கப்களுக்கு மிகாமல், உணவு நேரங்களுக்கு இடையே குடித்து வருதல் நலம். தேநீரை 60 டிகிரி செல்சியஸிற்குட்பட்ட இளஞ்சூட்டில் பருக வேண்டும். அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் தொடர்ந்து குடித்து வந்தால், உணவுக் குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது

தேயிலையில் கலப்படம்:

தேயிலையில் தேயிலைக் கழிவுகள் (Tea Waste), செயற்கை வண்ணங்களான பிஸ்மார்க் ப்ரௌன், பொட்டாசியம் ப்ளூ, இன்டிகோ, ப்ளம்பகோ (இது காரீயத்தினை அடிப்படையாகக் கொண்ட நிறமி. கருப்புத் தேயிலையில் கலக்கப்படும்.), . மஞ்சள் (சில சமயங்களில்), இரும்புத் துகள்கள் (அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக), சிக்கரி ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன.

இதுதவிர, தேயிலையை மறுபொட்டலமிடும் இடங்களில் செயற்கை வண்ணங்கள், பயன்படுத்திய தேயிலை, இதர தாவர இலைகள், இரும்புத் துகள்கள், சோப்ஸ்டோன் பொடி, ஜிப்ஸம், மண் (குறிப்பாக செங்கல் பொடி), தாமிரத் துகள்கள் (பச்சைத் தேயிலையில்), காசிக்கட்டி (Catechu), நிலக்கரி துகள்கள், தோல் கழிவுகள் ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன.

கண்டுபிடிப்பது எப்படி?:

தேயிலை வாரிய ஆணைப்படி, தேயிலைக் கழிவுகளை, ‘டிப் டீ” தயாரிக்கவும், காஃபின் தயாரிக்கவும் மற்றும் உரத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேயிலையில் செயற்கை வண்ணங்கள் உள்ளதா? என்பதை நாம் வீட்டிலேயே ஆய்வு செய்து கண்டுபிடிக்கலாம்.

அதாவது, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் தேயிலையை அதில் போட்டால், செயற்கை நிறமி கலந்த தேயிலையிலிருக்கும் நிறமானது, தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து, கீழ்நோக்கி இறங்குவது நன்றாகத் தெரியும். செயற்கை வண்ணம் கலக்காத தூய்மையான தேயிலையில் அவ்வாறு வண்ணம் இறங்காது.

வடிப்பான் காகிதத்தில் சிறிது தேயிலையை குவித்து வைக்கவும். அதன் பின்னர், தண்ணீரைச் சொட்டு சொட்டாக சேர்க்கவும். செயற்கை வண்ணம் கலந்த தேயிலை, வடிப்பான் காகிதத்தின் நிறத்தை மாற்றிவிடும். கண்ணாடி தட்டில் சுண்ணாம்பினைப் பரப்பி, சிறிது தேயிலையை தூவினால், சிவப்பு அல்லது ஆரஞ்சு அல்லது இதர நிறங்கள் சுண்ணாம்பில் பரவினால், அது நிலக்கரி துகள்கள் கலந்த தேயிலையாகும்.

ஒரு வடிப்பான் காகிதத்தில் சிறிது தேயிலையைப் பரப்பவும். அதன் பின்னர், அதில் சிறிது தண்ணீர் தெளிக்கவும். அதன் பின்னர், அந்த வடிப்பான் காகிதத்தை தண்ணீரில் கழுவவும். தூய தேயிலை எந்தவொரு நிறத்தையும் வடிப்பான் காகிதத்தில் கொடுக்காது. ஆனால், நிலக்கரி துகள்கள் கலந்த தேயிலை வடிப்பான் காகிதத்தின் நிறத்தை மாற்றிவிடும்.

கண்ணாடி தட்டில் சிறிது தேயிலையைக் குவித்து வைத்து, அதன் அருகே காந்தத்தைக் கொண்டு சென்றால், இரும்புத் துகள்கள் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்து நமது ரத்தத்தை அடைய வேண்டும் மற்றும் பக்கவிளைவு ஏதும் வரக்கூடாது எனில், தினம் இரண்டு வேளை மட்டும், இளஞ்சூட்டில், உணவு நேரங்களுக்கு இடையே இந்த தேநீரைப் பருகி, உடல் நலத்தைப் பேணுவோம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil