உங்களுக்கு 40 வயது ஆயிடுச்சா.... நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடுபவரா? முதல்ல இதைப் படியுங்கோ.....

மனிதர்களாக பிறந்துவிட்டோம்., உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம் தேவை. ஆனால் ஒருசிலர் உயிர் வாழ்வதற்காக சாப்பிடாமல் சாப்பிடுவதற்காகவே வாழ்வது போல் எந்த நேரமும் நொறுக்கிக் கொண்டே இருப்பார்கள். அதுபோல் உள்ளவர்கள் அவசியம் இதனை படியுங்க... ஆரோக்யத்தைப் பாதுகாத்துக்கங்க.
யாகாவராயினும் நாகாக்க. என்றார் வள்ளுவர். அவர் சொன்னது நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டுமல்ல. வெளியிலிருந்து உள்ளே கொண்டு போகும் உணவு வகைகளையும் சேர்த்துதான் சொல்லியிருப்பார் என நினைக்கிறோம். இல்லையென்றாலும் நாம் அப்படி எடுத்துக்கொள்வது நமக்கு ஒரு விதத்தில் நல்லதுதான்.
இளம் வயதில் எனக்கு கல்லைத் தின்றாலும் ஜீரணமாகிவிடும் என்று கண்டதையும் அடித்து நொறுக்குகிறோம். ஆனால் வயதாகிவிட்டால் பாலைக்குடித்தாலும் ஜீரணம் ஆவதில்லை என்று வருந்துகிறோம். 40 வயதுக்கு மேல் இதுபோன்ற உடல் பிரச்னைகள் எல்லாம் ஆரம்பித்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடின்மையே பலவித நோய்களுக்கு நம்மை ஆ ளாக்கிவிடுகிறது.
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே என்று திருமூலர் சொல்வது போல் சாப்பாடு என்பது நமக்கு உடல் வளர்க்க உயிரை நீட்டிக்க என்பதெல்லாம் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை. ஆஹா என்ன ருசி, என்று அடித்து நொறுக்கி விடுகிறோம். வாய்க்கு ருசியாக கிடைக்கிறது என்பதற்காக கண்டதையெல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல் பசிக்காக புசிக்கவேண்டுமே தவிர ருசிக்காக புசிக்க கூடாது.
வாழ்வதற்காகவே உண்ணுபவர் ஒரு சிலர்தான் உள்ளனர்.ஆனால் உண்பதற்காகவே வாழ்பவர்கள் அதிகம் ஆகி வருகின்றனர். உடல் உழைப்பு இல்லாமல் உண்டுகொண்டேயிருப்பதால் உடல் பருமன் விழுந்து உடல் ஆரோக்யத்தினையும் கெடுத்து கொள்கின்றனர். கடைசியில் அவர்களால் குனிய கூட முடியாத வகையில் தொந்தி பெருத்து உடல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
சரிங்க...இவ்வளவு சாப்பிடுகிறார்களே? கொஞ்சதுாரமாவவாது நடக்கிறார்களா? என கேட்டால் அப்படின்னா? என்ன எப்போதும் வண்டிதான். அப்புறம் எப்படிங்க உடம்பு குறையும். உடம்பிலுள்ள கலோரிகளை குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி,.சைக்கிளிங், மற்றும் நடைபயிற்சிதான் சிறந்த பயிற்சிகள்.
சாப்பாடு என்பது எப்போது சாப்பிட்டாலும் அதில் அளவு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்தான் . தெரிந்துகொண்டே ஏன் இந்த தவறை பலர் செய்கிறார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. ஆரோக்யத்தை பேணவேண்டும் என்றால் வாயைக் கட்ட வேண்டும். வாயைக்கட்டி விட்டாலே போதும் உங்கள் ஆரோக்யம் உங்கள் கையில்தான்.
எப்போது சாப்பிட்டாலும் வயிறுமுட்ட சாப்பிடவே கூடாது, கல்யாண பந்தியில் உட்கார்ந்துகொண்டு எல்லாம் நன்றாக உள்ளது என மூக்கு முட்ட சாப்பிட்டால் இரண்டு நாளைக்கு படாத பாடு படவேண்டியிருக்கும். ஆனால் ஒரு சிலர் எதனையும் நினைப்பதில்லை. எப்போதுமே வயிற்றில் இடம் வைத்திருங்கள். அது உங்களுக்கு நலலது.
உங்கள் உடம்பு பெருக்காமல் இருக்க வேண்டும் என்றால் தேவையானதை மட்டும் சாப்பிடுங்க. தேவையற்ற நேரத்தில் நொறுக்கு தீனிகளை தின்பதால் உடல் பருத்து பெருத்த பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ஓசியில் கிடைக்கிறது என வயிற்றில் தள்ளாதீர்கள். அவதிதான். முறையாய் சாப்பிடுங்க. மருந்தே உணவு என்பது உணவே மருந்தாகிறது.
4௦ வயதுக்கு மேல் உள்ளவர்களே நீங்கள்தான் எல்லாவிஷயத்திலேயேயும் உஷாராக இருக்க வேண்டும். 4௦ வயதுக்கு மேல்தான் ஒவ்வொரு நோயாக உங்கள் உடலில் நுழைய நேரம் பார்க்கிறது. எனவே முதலில் வாயை கட்டுங்கள்.நொறுக்கு தீனிகளை குறையுங்க.6மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்துவிடுங்கள். நடைபயிற்சி பழகுங்கள் தினந்தோறும். உடற்பயிற்சியும் அவசியம் தேவை. முடிந்தவரை ஆயிலில் பொறித்த உணவுகளை குறைவாகவே எடுத்து கொள்ளுங்கள். வாரம் ஒரு நாள் மட்டும் அசைவம். மற்ற நாளில் சைவ உணவுதான். சிறுதானிய உணவுகளுக்கு முதலிடம் கொடுங்க. எப்போதும் வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்கும்படி பார்த்துக்குங்க. ஓவர் புல் வேண்டாம் அது பல நாட்கள் படுத்தி எடுத்து விடும்.
விருந்துகளுக்கு சென்றாலும் உபசரிப்பை பார்த்து அசந்து போயிராதீங்க. உங்க உடம்புக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிட பழகுங்க. முடிந்த வரை உணவுகளை வேஸ்ட் செய்வதில் கவனமாயிருங்க. வேஸ்ட் செய்ய வேண்டாம். தேவையில்லாததை வாங்கி அதை உண்ணாமல் விடுவது வேஸ்ட்தானே.
உஷாராயிருங்க... நொறுங்க தின்றால் நுாறு ஆயுள். எனவே எதை சாப்பிடாலும் நன்கு மென்று விழுங்கிய பின் மீண்டும் பல்லில் அரைத்து சாப்பிடுங்க... அப்படியே முழுங்காதீங்க. அளவு தெரியாம போயிரும். உஷாருங்க...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu