மாம்பழம் வாங்கப் போறீங்களா? தவறாமல் இதை கவனியுங்கள்

மாம்பழம் வாங்கப் போறீங்களா? தவறாமல் இதை கவனியுங்கள்
X

மாம்பழம். (மாதிரி படம்).

நாம் மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

மாம்பழங்களை புதிய பழங்கள் சுத்திகரிக்கப்படாத பழங்கள் மற்றும் மேற்பரப்பு சுத்திகரிக்கப்பட்ட பழங்கள் ஆகிய இரண்டு வகைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகைப்படுத்தியுள்ளது. புதிய பழங்களுக்கான தரங்களை இன்னும் முழுவீச்சில் நிர்ணயிக்கவில்லை. ஆனால், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுத்திகரிக்கப்படாத பழங்களில் எவ்வித உணவுச் சேர்மங்களும் சேர்க்கக்கூடாது என்று தர நிர்ணய ஆணையம் வரையறுத்துள்ளது.பாதுகாப்பு பூச்சாகவும், பழங்களின் புத்துணர்ச்சியையும், தரத்தை பாதுகாக்கவும், சுத்திகரிக்கப்பட்ட பழங்களின் மேற்பரப்பில் பின்வரும் உணவுச் சேர்மங்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறுத்துள்ளது.


தேனீக்களின் மெழுகு, கேன்டெலில்லா வேக்ஸ், கார்னுபா வேக்ஸ், கிளைசரால் எஸ்டர் ஆஃப் வுட் ரோஸின், மைக்ரோகிரைஸ்டலின் வேக்ஸ், வெளுக்கப்பட்ட ஷெல்லாக், அயர்ன் ஆக்ஸைடு, சல்ஃபைட்ஸ் ஆகியவற்றை உணவுச் சேர்மங்களாக பயன்படுத்தலாம்.

மாம்பழம் உள்ளிட்ட எந்தப் பழங்களையும் ‘கார்பைடு வாயு (கார்பைடு கல்)’ கொண்டு பழுக்க வைக்கக்கூடாது என்றும், எத்திலீன் வாயுவினை, 100 ppm என்ற அளவிற்குள் பயன்படுத்தி, பழங்களைப் பழுக்க வைக்கலாம் என்றும்வரையறுத்துள்ளது.

‘எத்திஃபான்’ என்ற எத்திலீனின் பொடியை, பழங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பெட்டியில் வைத்து, பழங்களை செயற்கையாக பழுக்கவைக்கப் பயன்படுத்த தர நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது. இந்த எத்திலீன் தான், வழிகாட்டுதலுக்குப் புறம்பாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

இயல்பாக பழங்கள் பழுக்க ‘எத்திலீன்’ என்ற தாவர ஹார்மோன் தான் தேவை. ஆனால், குறுகிய காலத்திற்குள்ளாக பழுக்க வைத்து, லாபம் பார்க்க ஆசைப்பட்ட வியாபாரிகள் பின்பற்றியதுதான், கார்பைடு கல். இதிலிருந்து வெளியேறும் ‘அசிட்டிலீன்’ என்ற வாயு, எத்திலீன் போல் செயல்பட்டு, மாம்பழத்தைப் பழுக்க வைக்கும். இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்களைச் சாப்பிட்டால் தலைசுற்றல், வாந்தி, எரிச்சல் மற்றும் பலவீனம் ஏற்படலாம்.


மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைக்க விரும்பும் வியாபாரிகள், எத்திலீன் கியாஸ் சேம்பர் மூலமாக தான் பழுக்க வைக்க வேண்டும் என்று தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எத்திலீன் வாயு சேம்பர் இல்லாத இடங்களில், எத்திலீன் ஸ்பிரே பயன்படுத்தலாம்.

ஆனால், மாம்பழம் வைக்கப்படும் அறையில் முதலில் எத்திலீன் ஸ்பிரே செய்து, அதன் பின்னர் மாம்பழத்தை சுவற்றிலிருந்து 1/2 அடி தள்ளியும், அறையின் கொள்ளளவில் 75% வரை வைத்துவிட்டு, அறையை மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரம் கழித்து, அந்தக் அறையினைத் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேற்கூறிய இரண்டு வசதிகளும் இல்லாத வியாபாரிகள், ‘எத்திஃபான்” சொல்லக்கூடிய ஒரு ஷேசட்டில் வரக்கூடிய செயற்கை பழுக்க வைப்பானை (எத்திலீன் பொடி) 5-10 விநாடிகள் தண்ணீரில் ஊறவைத்து, சிறு துளைகள் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, 10 கிலோ மாம்பழம் உள்ள பெட்டியில் வைத்து, அப்பெட்டியை காற்றுப்புகாமல் மூடி வைக்க வேண்டும். அதனை, 24 மணி நேரம் கழித்து அதை திறந்து விடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேற்கூறிய முறைகளைத் தவிர, எத்திலீனை நேரடியாக மாம்பழங்களில் மீது தெளிப்பது, எத்திலீன் கலந்த தண்ணீரை மாம்பழங்களுடன் சேர்த்து, இருப்பு வைப்பது ஆகிய முறைகள், தர நிர்ணய ஆணைய வழிகாட்டுதல்களுக்குப் புறம்பானதாகும். எத்திலீன் படிமத்துடன் மாம்பழங்களைச் சாப்பிட்டால், தலைவலி, குழப்பம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

நுகர்வோர்கள் மாம்பழத்தை நன்கு அறிந்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும் என்று உணவு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. முடிந்தால் மாம்பழத்தினை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறவைத்தால், தோல் மேல் இருக்கக்கூடிய எத்திலீன் படிமம் நீங்கிவிடும்.

நுகர்வோர்கள் இயன்றவரை மாம்பழத்தின் மீது கருப்புத் திட்டுக்கள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும் என்று உணவு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாம்பழத்தை மிருதுவாக அழுத்தினால், சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். நன்கு அழுந்தினால், அவற்றை வாங்க வேண்டாம்.

ஒரே மாதிரியாகவும் சீராகவும் மஞ்சள் நிறத்தில் அல்லாமல், சிறிது பச்சை நிறமும் இருக்குமாறு மாம்பழத்தைப் பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்த இரண்டு தினங்களுக்குள், அறை வெப்பநிலையில் வைத்திருந்து, அதனைப் பயன்படுத்துதல் நலம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!