நா வறட்சி, உடல் தளர்ச்சி... கோடையை சமாளிக்க இதோ எளிய வழிகள்!

நா வறட்சி, உடல் தளர்ச்சி... கோடையை சமாளிக்க இதோ எளிய வழிகள்!
X
கோடை தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறியாக, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கிறது. இனி, கோடைகால நோய்களும், விருந்தாளி போல வந்து செல்லும். இவற்றில் இருந்து தப்பிக்க, இதோ சில எளிய வழிகள்.

பொதுவாக, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, ஏப்ரல் பிற்பகுதியில் தொடங்கி, மே மாதம் முழுவதும் கடும் உஷ்ணம் இருக்கும். இதனால், பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகும். அவை, என்னென்ன? அவற்றை எப்படி கையாண்டு சமாளிக்கலாம்?

சின்னம்மை

கோடைக்கால நோய்களில் முதன்மையானது, சிக்கன்பாக்ஸ் எனப்படும் சின்னம்மை. வெளியில் பணி புரிவோர், எளிதில் இதற்கு இலக்காகின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும்.

வியர்க்குரு

பொதுவாக, கோடையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனை, இந்த வியர்க்குரு. மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். நமது உடல், கோடையில் 40 - 45 டிகிரி வெப்ப நிலையை எதிர்கொள்கிறது. இதனால், உடலைக் குளிர்விக்க வேண்டி, அதிகளவு வியர்வை இயல்பாகவே நமது உடல் சுரக்கிறது. இவ்வாறு வியர்வை சுரக்கும் போது, தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்துவிடும். இதனால் அரிப்பு, எரிச்சல் உண்டாகும். அடைத்துக்கொள்ளும். இருவேளையும் குளிப்பதுடன், காற்று படும் இடங்களில் அமர வேண்டும்.

நீர்க்கடுப்பு

கோடையில், உடலுக்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ள நிலையில், அதற்கேற்ப தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில், உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்து சிறு நீரில் வெளியேறும் உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகும். இதனால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.


வெப்ப மயக்கம்

வெயில் சுட்டெரிக்கும் போது, உடல் தளர்ச்சி அடையும்; களைப்பு உண்டாகும். அப்போது, தலைவலி, தலைச்சுற்றல் உண்டாகலாம். ஒருசிலர், திடீரென மயங்கிவிடுவார்கள். வெயிலால், தோலில் உ ள்ள ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, உடல் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால், இருதயம், மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் மயக்கம் ஏற்படுகிறது.

பாதித்தவரை, காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, பாதங்களை உயரமாகத் தூக்கிவைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். உரிம மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

வேனல் கட்டி

கோடைகாலத்தில், வியர்க்குருவில் அழுக்கு சேர்ந்து, அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்போது, அந்த இடம் சிவந்து, வீங்கிப் புண்ணாகிவிடும். இதைத்தான் வேனல் கட்டி என்கிறோம். இதற்கு, நோயெதிர்ப்பு மருந்துகள், வெளியே பூசும் மருந்துகளை உபயோகிக்கலாம். கொளுத்தும் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீரே மருந்து!

கோடையில் அடிக்கடி நா வறட்சி, உடல் தளர்ச்சி அடைகிறது; களைப்பு உண்டகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தாகம் இருக்காது; எனினும், கோடைக் காலத்தில் தினமும், 3- 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

டீ, காபி பிரியர் என்றால், கோடையில் அவற்றை நீங்கள் ஒதுக்கி வையுங்கள். அதேபோல், கேஸ் நிறைந்த குளிர் பானங்களை தொடாதீர்கள். மாறாக, இயற்கை தரும் அருமருந்தான இளநீரை சாப்பிடுங்கள். எலுமிச்சை ஜூஸ், மோர், பானகம், பதநீரும் பருகலாம்.

பழங்கள், இயற்கையின் வரங்கள்!


இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை, வெப்பத்தை குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன. நீர்ச்சத்து நிரம்பிய, எளிதாக மலிவாக கிடைக்கும் தர்ப்பூசணியை உட்கொள்ளலாம். கோடையில் உடல் சூட்டை தவிர்க்க, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொள்ளலாம்.

கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று பார்த்தால், டீ, காபி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தொட வேண்டாம். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளையும் கோடையில் குறைத்துக்கொள்ளுங்கள்.

சிலருக்கு கோடையில் அடிக்கடி வயிற்றுவலி, அடி வயிறு வலி இருக்கும். தொப்புளை சுற்றி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவதுடன், அதிகம் தண்ணீர் பருக வேண்டும். பிரிட்ஜ் தண்ணீரை அதிக குளிர்ச்சியுடன் பருகக்கூடாது; குளிர்ந்த நீர் தேவையெனில், மண் பானை தண்ணீரை குடிக்கலாம். இதில் வெட்டி வேர் போன்றவை போட்டு வைத்தால், உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி