ஏராளமான பலன்களை கொண்ட கிராம்பு: பராமரிப்பது எப்படி என தெரியுமா?

ஏராளமான பலன்களை கொண்ட கிராம்பு: பராமரிப்பது எப்படி என தெரியுமா?
X

கிராம்பு. (மாதிரி படம்).

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் உள்ள சத்துக்கள் அதன் பலன்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

அசைவ உணவு தயார் செய்யும்போது கண்டிப்பாக இடம்பெறும் உணவு சேர்க்கை பொருளில் முக்கியமானது கிராம்பு. அந்த கிராம்பு என்றால் என்ன? அதன் பலன்கள் எவை? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

கிராம்பு என்பது, Eugenia Caryophyllus (C.Sprengel) Bullock and Harrision என்ற தாவரத்தின் பூக்காத பூ மொட்டுக்களாகும். கிராம்பு மற்றும் அதன் பொடி ஆகிய இரண்டிற்கும் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. கிராம்பு சிவப்பு அல்லது கருப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். கிராம்புப் பொடி ஊதா கலந்த பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மேலும், எவ்விதமான அயற்சுவையோ, கெட்டுப்போன சுவையோ அல்லது விரும்பத்தகாத மணமோ இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

கிராம்பில் பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. கிராம்பிலும் மற்றும் அதன் பொடியிலும் எந்த செயற்கை நிறமியும், சம்பந்தமில்லாத காய்கறியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

கிராம்பில் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கு மேற்பட்டும், அதன் பொடியில் 10 சதவீதத்திற்கு மேற்பட்டும் இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. கிராம்பில் வெளிப்புறப் பொருட்கள் சதவீதத்திற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. ஆனால், அதன் பொடியில் வெளிப்புறப் பொருட்களுக்கு அனுமதியில்லை. கிராம்பில் பூச்சிகள் தாக்கப்பட்டவை 2 சதவீதத்திற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

கிராம்பில் ‘தாய் கிராம்பு’ 2 சதவீதத்திற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. (தாய் கிராம்பு என்பது, பழுப்பு நிறத்திலும், ஒரு முட்டை வடிவத்திலும் உள்ள பழத்தின் உச்சியில் நான்கு புற இதழ்களால் உள்வளைவாக அமைந்த கிராம்பு.). கிராம்பில் ‘வெற்றுக் கிராம்பு’ 2%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. (வெற்றுக் கிராம்பு என்பது, முழுமையாக உலர்த்தப்படாததினால், ஏற்படக்கூடிய நொதித்தலின் விளைவாக உருவாகும் கிராம்பு.). கிராம்பில் ‘Volatile Oil’ 17%-ற்கும் குறைவாக இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

நூறு கிராம் கிராம்பில் 323 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 20.1 கி, இதில் சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 5.4 கி, மோனோ-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 1.5 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 7.1 கி, மொத்த கார்போஹைட்ரேட் 61.2 கி, அதில், நார்ச்சத்து 34.2 கி, புரதம் 6 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் கிராம்பில் கால்சியம் 646 மிகி (தினசரி தேவையில் 65%), இரும்புச்சத்து 8.7 மிகி (தினசரி தேவையில் 48%), மெக்னீசியம் 264 மிகி (தினசரி தேவையில் 66%), மாங்கனீஸ் 30 மிகி (தினசரி தேவையில் 1502%), பாஸ்பரஸ் 105 மிகி (தினசரி தேவையில் 11%), பொட்டாசியம் 1102 மிகி (தினசரி தேவையில் 31%), ஸிங்க் 1.1 மிகி (தினசரி தேவையில் 7%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் கிராம்பில் வைட்டமின் - ஏ 530 ஐயு (தினசரி தேவையில் 11%), வைட்டமின் - சி 80.8 மிகி (தினசரி தேவையில் 135%), வைட்டமின் - கே 142 மைகி (தினசரி தேவையில் 177%), வைட்டமின்-இ 8.5 மிகி (தினசரி தேவையில் 43%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 93 மைகி (தினசரி தேவையில் 23%) என்றளவில் உள்ளது.

கிராம்பினை உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, ஈரப்பதமற்ற, உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தால், தாராளமாக 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைத்தால், கிராம்பு மூன்று மாதங்களிலேயே நிறம் குறைய ஆரம்பிக்கும். ஒருவேளை, உரிய சூழ்நிலையில் இருப்பு வைத்தும், கிராம்பின் வாசனை குறைந்து போய்விட்டால், இளஞ்சூட்டில் இரண்டு நிமிடங்கள் வறுத்தால், அதன் வாசனை மீண்டுவிடும் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!