சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி காபி குடிக்கலாமா? டாக்டரின் அருமையான விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி காபி குடிக்கலாமா? டாக்டரின் அருமையான விளக்கம்
டாக்டர் பரூக் அப்துல்லா.
சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி காபி குடிக்கலாமா? என்பதற்க டாக்டர் பரூக் அப்துல்லா அருமையான விளக்கம் அளித்துள்ளார்.

நீரிழிவு எனும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் "சீனி" எனும் வெள்ளை சர்க்கரையில் இருந்து "நாட்டுச் சர்க்கரை" எனும் மஞ்சள் சர்க்கரைக்கு மாறி தற்போது சமீப காலமாக "கருப்பட்டி" எனும் கருப்புச் சர்க்கரையிடம் தஞ்சம் புகுந்திருப்பதை அறிய முடிகிறது.

நீரிழிவு நோயர்கள் தாங்கள் பருகும் தேநீர் மற்றும் காபியில் கருப்பட்டி போட்டு பருகுவது தகுமா? மருத்துவ ரீதியாக சரியா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் சிவகங்கையை சேர்ந்த அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா.

இது தொடர்பாக அவர் கூறுவது என்ன என்பதை பார்ப்போமா?

சர்க்கரை நோய் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகளை கிரகித்தலில் உடலில் ஏற்படும் கோளாறாகும். அதிலும் குறிப்பாக மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸை உடல் கிரகித்துக் கொள்ளும் தன்மையில் ஏற்படும் இடர்பாட்டை சர்க்கரை நோய் / சுகர் / நீரிழிவு என்று அழைத்து வருகிறோம்.

இந்நிலையில் நீரிழிவு நோய் இருக்கும் ஒருவர் மாவுச்சத்து நிறைந்த உணவை உண்ணும் போது அவரது ரத்தத்தில் அந்த மாவுச்சத்து க்ளூகோஸாகக் கலக்கிறது. இந்த க்ளூகோஸை இனங்கண்டு கொண்டு நமது கணையம் இன்சுலின் எனும் ஹார்மோனை சுரக்கிறது.

இன்சுலினின் முக்கியப் பணி உணவுப் பொருள் மூலம் கிடைத்த க்ளூகோஸை நமது செல்கள் அனைத்தையும் அவற்றின் ஆற்றல் தேவைக்கு உட்கொள்ள வைப்பதாகும். நீரிழிவுக் கோளாறு இருப்பவர்களுக்கு இந்த இன்சுலின் சரிவர சுரப்பதும் இல்லை. சுரக்கப்பட்ட இன்சுலின் அது செய்யவேண்டிய பணியை சரிவர செய்வதும் இல்லை.

இத்தகைய சூழலில் இனிப்பு சுவை அடங்கிய மாவுச்சத்து அடங்கிய எந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயர்கள் உட்கொண்டாலும் அவர்களது ரத்த க்ளூகோஸ் அளவுகள் சராசரி நபர்களை விட அதிகமாக உயரும்.

அந்த க்ளூகோஸை கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் சுரப்பும் இருக்காது. சுரக்கப்பட்ட இன்சுலினும் சரியாக வேலை செய்யாது. இந்நிலையில் நீரிழிவுக் கோளாறு கொண்டவர்கள் க்ளூகோஸ் திரவம் பருகினாலும் சரி சீனி எனும் வெள்ளை சர்க்கரை பருகினாலும் சரி நாட்டு சர்க்கரை போட்டு பருகினாலும் சரி கருப்பட்டி போட்டு பருகினாலும் சரி நீரிழிவு நோயரைப் பொருத்தவரை அவரது ரத்த க்ளூகோஸ் அளவுகள் உயரும் என்பதை உணர வேண்டும்.

சீனி / நாட்டு சர்க்கரை / கருப்பட்டி ஆகிய மூன்றிலும் சுக்ரோஸ் எனும் மாவுச்சத்து நிரம்பியுள்ளது சுக்ரோஸை நமது உடல் க்ளூகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸாக உடைத்து கிரகித்துக் கொள்ளும் எனவே நாம் உண்ணும் பொருளுக்கு சீனி / நாட்டு சர்க்கரை / கருப்பட்டி என்று பெயர் கொடுத்தாலும் உடலைப் பொருத்தவரை அது க்ளூகோஸாக மாற்றம் அடைவது என்பது மெய்.

க்ளைசீமிக் இண்டெக்ஸ் எனும் ரத்த க்ளூகோஸை குறைவான நேரத்தில் உயர்த்தும் திறன் அளவுகோலின் படி க்ளூகோஸ்க்கு 100 மதிப்பெண் என்றால் சீனி/ நாட்டு சர்க்கரைக்கு 60-70 மதிப்பெண் கருப்பட்டிக்கு 50-60 மதிப்பெண் இடப்பட்டுள்ளது. பொதுவாக க்ளைசீமிக் இண்டெக்ஸ்

அளவுகோல்கள் இனிப்பு சுவை கொண்ட பதார்த்தங்களுக்கு அதிலும் நீரிழிவு நோயர்களுக்கு பெரிய அளவில் உபயோகப்படுவதில்லை. எனவே ரத்த சர்க்கரை அளவுகளை கண்ட்ரோலில் வைக்க முனையும் சகோதர சகோதரிகள் அனைவரும் கால் ஸ்பூன் போடுகிறேன் அரை ஸ்பூன் போடுகிறேன் நாட்டுச் சர்க்கரை போடுகிறேன் கருப்பட்டி போடுகிறேன் சுகர் ஃப்ரீ போடுகிறேன் என்று கூறுவதை விடவும் இனிப்பில்லாமல் தேநீர் மற்றும் காபி அருந்திப் பழகி அதை தங்களின் வாழ்வியல் மாற்றமாகக் கொள்வதே சிறந்தது என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags

Next Story