இந்தியாவிலும் நுழைந்தது ஏஒய் 4.2 கொரோனா: தற்காத்துக் கொள்வது எப்படி?

இந்தியாவிலும் நுழைந்தது ஏஒய் 4.2 கொரோனா: தற்காத்துக் கொள்வது எப்படி?
X

கோப்பு படம் 

கொரோனா டெல்டா வைரஸில் இருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ளது ஏஒய்.4.2 (AY 4.2) வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 இறுதியில், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப் படைக்கிறது. முதல் இரண்டு அலைகளால், உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி கண்டுபிடித்து பலருக்கும் செலுத்தப்பட்டு வருவதால், கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.

கொரோனா புது அவதாரம்

எனினும், குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு வடிவத்தில் கொரோனா வைரஸ் தலைதூக்குகிறது என்பதே உண்மை. அவ்வகையில், பல நாடுகளை ஆட்டம் காணச் செய்த டெல்டா வகை வைரசில் இருந்து பிரிந்து, அண்மையில் புதிதாக கொரோனா வைரஸ் உருவெடுத்தது. அதன் பெயர், ஏஒய்.4.2 வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது முதன்முதலில், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளுக்கும், ஏஒய்.4.2 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா, சீனா, டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில், கர்நாடகாவை சேர்ந்த 23 வயது மற்றும் 43 வயது நபர்களுக்கு ஏஒய்.4.2 வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி பலன் தருமா?

டெல்டா வகை வைரஸோடு ஒப்பிடுகையில் ஏஒய்.4.2 வைரஸ் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக, மருத்துவ வல்லுனர்கள் கூறியிருப்பது, இன்னும் கவலை தரக்கூடிய அம்சமாகும். டெல்டா வைரஸ்களைவிட 15 சதவீத வேகத்துடன் பரவும்; இந்த வகை வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்பாடும் குறைவாகவே இருக்குமாம்.

இந்தியாவில் 3வது அலை?

இந்தியாவில் இரண்டாவது அலை ஓரளவு கட்டுக்குள் இருக்கும் சூழலில், இப்போது பரவி வருகிற AY 4.2 வைரஸ் மூலம் மூன்றாவது அலை தொடங்குமோ என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில், கொரோனா வைரஸின் தாக்கம் அண்மையில் தலைதூக்கி இருக்கிறது. இந்தியாவிலும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஏஒய்.4.2 முழுவதுமாக பரவக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே, தடுப்பூசி மட்டும் பாதுகாப்பை தராது; முகக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது ஒன்றே, தற்போதைக்கு கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself