அடேங்கப்பா! பெருங்காயத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
பெருங்காயம். (மாதிரி படம்).
காலிப் பெருங்காய டப்பா.. அதுல வாசனை நல்லாதான் இருக்குதப்பா.. என ஒரு திரைப்பட பாடல் உண்டு. நம் அன்றாட சமையலில் இடம்பெறும் மிக முக்கியப் பொருளில் ஒன்று பெருங்காயம் ஆகும். அந்த பெருங்காயத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவக் குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் கூறியதாவது:
பெருங்காயம் என்பது ஃபெருளா என்ற வகையைச் சார்ந்த தாவரத்தின் பிசின் ஆகும். (நம்ம முருங்கை மர பிசின் போல..!) (இது ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிகம் விளைகின்றது.) அந்த பெருளா தாவரத்தின் வேர் மற்றும் வேர்கிழங்குகளில் இருந்து இது பெறப்படுகின்றது.
அறுவடையின் போது வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் பெருங்காயமானது, சுற்றுச்சூழலில் மஞ்சளாக மாறி, அடுத்து பழுப்பாக மாறும். இதன் கடுமையான வாசனை, மற்ற மசாலாப் பொருட்களைப் பாதிக்கும் என்பதால், இதனை, காற்றுப்புகா உணவுத் தரக் கொள்கலனில் இறுக்கமாக மூடி, அறை வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில், பெருங்காயம் காலியானாலும், அதன் டப்பாவில் வாசனை கொஞ்ச நாளைக்கு இருக்கும். அவ்வளவு கடும் வாசனை நிறைந்தது. பெருங்காயத்துடன் பைன் மரம் உள்ளிட்ட வேறு எந்த தாவரத்தின் பிசினையும் சேர்க்கக்கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது.
பெருங்காயத்தில் 12 சதவீதத்திற்கும் குறையாமல் “Alcoholic Extract” இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பெருங்காயத்தில் ஒரு சதவீதத்திற்கும் மிகாமல் “ஸ்டார்ச்” இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. நூறு கிராம் பெருங்காயத்தில், 67 சதவீதம் கார்போஹைட்ரேட், 4 சதவீதம் புரதம், ஒரு சதவீத் கொழுப்பு, 7 சதவீதம் மினரல்ஸ் மற்றும் 4 சதவீதம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
செரிமானத்திற்கு உதவியாகவும், மலச்சிக்கல், ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் பெருகவும் பெருங்காயம் உதவுகின்றது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu