மதிய வேளையில் குட்டித்துாக்கம் போடுபவரா நீங்க...? இதை படிங்க முதல்ல...

மதிய வேளையில் குட்டித்துாக்கம் போடுபவரா  நீங்க...? இதை படிங்க முதல்ல...
X

மதிய வேளைகளில், குட்டித்துாக்கம் போடுபவரா நீங்க...?

மத்தியான வேளையில் சாதம், முள்ளங்கி சாம்பார், வத்தக்குழம்பு, பூண்டு ரசம், மோர், பொரியல், கூட்டு, அப்பளம் என, ஒரு பிடி பிடித்து விட்டு அப்படியே சேரில் சாய்ந்து அமர்ந்து, கண் அயர்ந்து துாங்கும் சுகம் இருக்கே... அடடா... என்ன சுகம் என்பவரா நீங்கள்? குட்டித்துாக்கம் நல்லதா, கெட்டதா...ன்னு தெரிஞ்சுக்கணும். வாங்க, பார்ப்போம்.

அலுவலகம், வீடு எங்கே இருந்தாலும் மதிய உணவு சாப்பிட்டவுடன், நம்மில் பலருக்கு ஒரு மந்தமான நிலை ஏற்படும் அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என்று உடனே தோன்றும். சிலர், மெல்லமாக துாங்கி, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவர்.

மதிய உணவு சாப்பிட்டவுடன் அப்படி ஒரு தூக்கம், மந்தநிலை ஏன் வருகிறது, இதற்கு என்ன காரணம், இந்த தூக்கத்தை முடிந்தவரை தவிர்ப்பது நல்லதா, கெட்டதா என பலமுறை யோசித்திருப்போம். பின், அப்படியே மறந்து விடுவோம்.


மதிய நேரத்தில் பெரும்பாலானோர் அளவுக்கு அதிகமாக, வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். ஒரு முழு சாப்பாடு சாப்பிடும் போது, உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது; இதனால், இன்சுலின் அளவும் உயர்கிறது. இதுதான், தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இதனால்தான், பலருக்கும் தூக்கம் அல்லது மந்த நிலை ஏற்படுகிறது. மேலும், உடலில் தொடர்ந்து செரிமானம் நடந்துகொண்டிருக்கும்போது உடல் சோர்வு நிலையை அடைகிறது.

மதிய உணவில், கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது தூக்கம் வருகிறது. எனவே, மதிய உணவில் கார்போஹைட்ரேட்டை குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இது சுறுசுறுப்பாக உடலை வைக்கும். குறிப்பாக, சாதம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் அல்லது குறைவாக எடுத்துக் கொள்ளலாம். சிக்கன், சாலட் பழங்கள், பயிறு வகைகள் ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துக் கொண்டால் தூக்கம் வராது.


காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில், நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரவில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றாலும், பகலில் தூக்கம் வரலாம். எனவே, இரவில் கண்டிப்பாக ஆறு முதல் ஏழு மணி நேரம் தூக்கத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக சாப்பிட்ட பிறகு அவ்வப்போது சிறு சிறு இடைவெளியில் ஓரிரு நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது அல்லது குறைந்தது உங்கள் இருக்கையில் இருந்து, எழுந்து அமரவாவது வேண்டும். வீட்டில் இருக்கும் பட்சத்தில், வேறு வேலைகளை செய்யலாம்.

தூக்கம், உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை சரியாக மேற்கொண்டால் இந்த சோர்வில் இருந்து எளிதாக விடுபடலாம். ஆனால் வாய்ப்பு இருந்தால், மதியம் ஒரு குட்டித் தூக்கம் (10 முதல் 30 நிமிடங்கள்) போட்டால் நல்லது; அதன் பின்னர் சுறுசுறுப்பாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது மேலும் இந்த குட்டித்தூக்கம் பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்தும் சரி செய்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பிருந்தால் குட்டித்துாக்கம் போடுங்க... வாய்ப்பில்லாத பட்சத்தில், மேலே க;றியபடி உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

Next Story