தர்பூசணி பழம் வாங்கப்போறீங்களா? அப்படியென்றால் இதை தவறாமல் கவனியுங்கள்..

தர்பூசணி பழம் வாங்கப்போறீங்களா? அப்படியென்றால் இதை தவறாமல் கவனியுங்கள்..
X

தர்பூசணி பழம். (மாதிரி படம்).

தர்பூசணி பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

பழங்களில் நீர்ச்சத்து அதிகம் வாய்ந்த தர்பூசணி குறித்தும் தர்பூசணி பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

நூறு கிராம் தர்பூசணியில் 30 Kcal எரிசக்தியும், நீர்ச்சத்து 91.45 கி, மொத்த கொழுப்பு 0.15 கி, மொத்த கார்போஹைட்ரேட் 7.5 கி, அதில், நார்ச்சத்து 0.4 கி, புரதம் 0.61 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் தர்பூசணியில் கால்சியம் 7 மிகி (தினசரி தேவையில் 1%), மெக்னீசியம் 10 மிகி (தினசரி தேவையில் 3%), மாங்கனீஸ் 0.04 மிகி (தினசரி தேவையில் 2%) மற்றும் பொட்டாசியம் 112 மிகி (தினசரி தேவையில் 2%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் தர்பூசணியில் வைட்டமின் - ஏ 28 மைகி (தினசரி தேவையில் 4%), வைட்டமின் - சி 8.1 மிகி (தினசரி தேவையில் 10%), வைட்டமின்-பி6 0.045மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் வைட்டமின்-பி5 0.221 மிகி (தினசரி தேவையில் 4%) என்றளவில் உள்ளது. நமது உடலின் நீர்ச்சத்தினைப் பராமிரிக்க தர்பூசணி உதவுகின்றது.

தர்பூசணியில் உள்ள சிட்ருலின் உடற்பயிற்சி திறனை அதிகரிக்க உதவுகின்றது. தர்பூசணியில் உள்ள Lycopene (4532 மைகி/100 கி) பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பினைக் குறைக்கின்றது. தர்பூசணியில் உள்ள Lycopene ரத்தத்தில் கொழுப்பைக் குறைத்தும், ரத்த அழுத்தத்தை குறைத்தும், இதயத்தின் செயல்பாட்டினை சீர்படுத்துகின்றது.

தர்பூசணியில் உள்ள Lycopene மற்றும் வைட்டமின்-சி-ன் மூலம் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி குணமும் இதற்கு உண்டு. தர்பூசணியில் உள்ள Lycopene, வயது ஆவாதால் ஏற்படக்கூடிய தசை சீரிழிவினால் உருவாகும் பார்வையிழப்பைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து மற்றும் சிறிதளவு நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகின்றது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

தர்பூசணியில், FODMAP (Fermentable Oligosaccharides, Disaccharides, Monosaccharides and Polysaccharides) என்ற குறுகிய தொடர் மாவுச்சத்து சற்று அதிக அளவில் உள்ளது. எனவே, தர்பூசணியை அளவிற்கதிகமாக எடுத்துக்கொண்டால், எந்தவித உடல் நலக்கோளாறு இல்லாத நபர்களுக்கே வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஏப்பம், எதுக்கழித்தல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும்.

மேலே சொன்ன குறுகிய தொடர் மாவுச்சத்து மூலக்கூறுகளினால், ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 600 கிராம் என்ற அளவில் தர்பூசணி எடுத்துக்கொண்டால், இரத்தத்தின் சக்கரை அளவினை அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. தர்பூசணியில் உள்ள Lycopene என்பது ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட் மட்டுமல்ல, அது ஒரு நிறமியும் ஆகும். இதுதான், தர்பூசணியின் நிறத்திற்கும் காரணம். இப்பழத்தினை அதிகமாக எடுத்துக்கொண்டால், நமது தோலின் நிறம் மாற வாய்ப்புள்ளது.

தர்பூசணியை ஒரு நாளைக்கு ‘300 கிராம்’ அளவிற்குள் எடுத்துக்கொண்டால், தர்பூசணியினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளில் இருந்து நாம் தப்பிக்கலாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இந்தப் பழமும் ஒரு உதாரணம். தர்பூசணி பழத்தின் வால் பகுதியைக் கவனித்தால், அது உலர்ந்து, கருப்பு அல்லது பழுப்பாக இருந்தால், அது இயற்கையாக பழுத்ததாகும்.

தர்பூசணியில் செயற்கை வண்ணத்தினை (Erythrosine-B/Red-B) ஊசி மூலம் செலுத்தப்படுவதாக சில வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அப்படி நிறமி செலுத்திய பழம் எனில், 2-3 நாட்களில் கெட்டுப்போக ஆரம்பித்துவிடும். தர்பூசணியில் செயற்கை நிறமியை உட்செலுத்துவது எளிதான செயல் அல்ல. மேலும், ஒவ்வொரு பழத்திற்கும் ஊசி மூலம் நிறமியை செலுத்த வேண்டும்.

ஒருவேளை தர்பூசணியில் செயற்கை நிறமி செலுத்தப்பட்டிருந்தால், அதை எப்படி கண்டறிவது என பார்ப்போம். அதாவது, ஊசி செலுத்தப்பட்ட பகுதியில் கசிவு இருக்கும். பழத்தினை வெட்டி பார்த்தால், உட்சதைக்கும் தோலிற்கும் இடையே உள்ள வெண் சதையின் நிறம் சற்று மாறியிருக்கும். தர்பூசணியின் உட்சதையை சிறிய துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டால், தண்ணீரின் நிறம் மாறும். தர்பூசணியை வாங்கிவந்து, 2 நாட்கள் வைத்திருந்து கவனித்தால், பழம் கெட்டுப்போக ஆரம்பித்திருப்பதுடன், வாடையுடன் கூடிய திரவக் கசிவும் ஏற்படும்.

தர்பூசணியில் உள்ள FODMAP என்ற குறுகிய தொடர் மாவுச்சத்துக்களால், அதனை சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். செயற்கை நிறமி எப்போதும் உடனடி நோயைத் தராது. அரிதாக, உடனடி அல்சர் தொந்திரவு ஏற்படலாம். அடுத்ததாக, தர்பூசணி பழங்கள் செயற்கை நிறமி ஊசி மூலம் செலுத்தி விற்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு, உறுதியான ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் பதிவாகவில்லை.

இதுவரை தர்பூசணியில் செயற்கை நிறமி செலுத்திய சம்பவங்கள், வழக்காகவோ அல்லது பகுப்பாய்வறிக்கையாகவோ பதிவாகவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, தர்பூசணி பழத்தை வெட்டாமல், முழுப் பழமாக, கசிவு ஏதுமில்லாமல், கீறல் அல்லது துளைத் தடம் ஏதுமில்லாமல் பார்த்து வாங்கி, வீட்டில் பழத்தினை வெட்டி சாப்பிட்டு, இந்த கோடையில் சரியான நீர்ச்சத்துடன் உடலைப் பேணி, சிறுநீரக பாதிப்பின்றி வாழ்வோம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!