இதை படிங்க முதல்ல... - அப்புறம், தினமும் உங்க வீட்ல ‘இந்த’ ரசம்தான்

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும், உணவுப் பொருட்களில் மிக முக்கியமாக சேர்க்கப்படுகிறது பூண்டு. அதுமட்டுமின்றி நோய் தீர்க்கும் மருத்துவப் பொருட்களிலும், பூண்டுவுக்கு முக்கிய இடம் தரப்படுகிறது.

HIGHLIGHTS

இதை படிங்க முதல்ல... - அப்புறம், தினமும் உங்க வீட்ல ‘இந்த’ ரசம்தான்
X

சமையலறையில் இருக்கிற ‘பூண்டு’ வில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

நமது அன்றாட உணவில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் பூண்டு சேர்க்கப்படுகிறது. அமெரிக்கா முதல் அடித்தட்டு கிராமம் வரை பூண்டினை பயன்படுத்தாதவர்களே இல்லை. இன்றும் வாயுத்தொல்லைக்கும், அஜீரணத்துக்கும் பூண்டினை வேக வைத்து உண்ணும் பழக்கம் நம்மில் பல பேரிடம் உண்டு. அந்த அளவுக்கு பூண்டு பல மருத்துவ நன்மைகளை வழங்குவதை அறிந்ததால் தான், உலக அளவில் அதன் பயன்பாடு பல பில்லியன் அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூண்டு பயன்பாட்டில் இருந்ததாக, வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உதாரணமாக எகிப்தில் உள்ள மிகமிக பழமை வாய்ந்த பிரமிடுகள் (கி.மு. 4500) உருவாக்கத்தின் போது, அப்போதைய மன்னர் தனது தொழிலாளர்கள் அனைவரும் வலிமையையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டுமென்று தினசரி பூண்டினை எடுத்துக்கொள்ள ஆணையிட்டதாக கூறுகின்றன. பூண்டு, சுமேரியர்கள் மற்றும் பண்டைய எகிப்தியர்களுக்கு முக்கிய மருந்துப்பொருளாக இருந்து வந்துள்ளதும் அறியக்கிடக்கின்றது.

கிரேக்கத்தில் நிகழ்ந்த ஆரம்ப கால ஒலிம்பிக்கின் போது, வீரர்களுக்கு உடல் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு பூண்டு உணவளிக்கப்பட்டது என்பதற்கு சான்றுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் 'ஹிப்போகிரேட்ஸ்' குடல் சார்ந்த நோய்களுக்கும், தொற்று நோய்நிலையிலும் பூண்டினை பரிந்துரைத்ததாக தெரிகிறது. இவ்வாறு, பூண்டு மிகச்சிறந்த எண்ணற்ற மருத்துவ குணமுள்ள கடைசரக்கு என்பதற்கான வரலாற்று சான்றுகள் வியப்பளிப்பதாக உள்ளன.


நெடிய மணமும், காரத்தன்மையும் உள்ள பூண்டு ஒவ்வொன்றிலும் 6 முதல் 35 வரை திரிகள் இருக்கும். பூண்டின் நெடிக்கு முக்கிய காரணம் அதில் உள்ள கந்தகம் (சல்பர்) சார்ந்த இயற்கை வேதிப்பொருட்கள் என்கிறது நவீன அறிவியல். அதனால் தான் பூண்டு சேர்த்த உணவினை எடுத்துக்கொள்ள வாயில் ஒரு வித மணத்தை உணர முடியும்.

பாகிஸ்தானில், பூண்டு சாறு பாரம்பரியமாக வயிறு சார்ந்த உபாதைகளுக்கும், இருமல் சிகிச்சைக்காகவும், காய்ச்சலைக் குறைக்கவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேபாளம், கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காய்ச்சல், நீரிழிவு, வாத நோய், குடல் புழுக்கள், பெருங்குடல் வாய்வு, வயிற்றுப்போக்கு, கல்லீரல் கோளாறுகள், முக வாதம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பூண்டு பயன்படுத்தப்படுகின்றது.

ஆப்பிரிக்காவில் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் பூண்டின் மருத்துவ பயன்கள் அளப்பரியது. இதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணம் அலிசின், அலிஸ்டாடின்- I மற்றும் அலிஸ்டாடின் - II ஆகிய வேதிப்பொருட்கள் என்று அறிவியல் உலகம் பட்டியலிட்டு கூறுகின்றது.


பூண்டில் மருத்துவ குணமுள்ள வேதிப்பொருட்களை தவிர இரும்பு சத்து, பாஸ்பரஸ், அயோடின், கந்தகம், குளோரின் ஆகிய கனிம சத்துக்களும், அத்தியாவசிய வைட்டமின்களான வைட்டமின் பி-1, பி-2, ஈ, ஏ, நியாசின் மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை தரும் வைட்டமின் சி-யும் உள்ளது. அதனால் தான் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் உருவாகும் அநேக இயற்கை மருந்துகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் நோய்களுக்கு காரணமாகும் கபத்தையும், வாதத்தையும் குறைத்து பித்தத்தை கூட்டும் பூண்டு சொல்லப்பட்டுள்ளது.

'கபவாதம்' தான் இன்றைய பல வாழ்வியல் மாற்ற நோய்நிலைகளுக்கு முக்கிய காரணம். சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன், புற்று நோய் வரை இவை அனைத்துமே கபவாதம் பாதிப்படைந்து, அதன் விளைவாக உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அவ்வாறு இருக்கையில், மேற்கூறிய நோய்களை தடுக்கும் தன்மையுடையதாக உள்ளது பூண்டின் தனிச்சிறப்பு. 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் வரிகள். அதன்படி துரித உணவு முறைகளால், குடலில் மிகுதியாகும் வாயுவே இன்றைய நவீன வாழ்வியலில் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் காரணமாகின்றது.


அந்த வகையில் பல்வேறு இன்னல்களை உண்டாக்கி, சட்டென உயிரிழப்பை ஏற்படுத்தும் மாரடைப்பு போன்ற இருதய நோய்களை 'ருத்ர வாயு அல்லது இருத் ரோகம்' என்று வாயு சார்ந்த நோயாகவே சித்த மருத்துவம் பாவிக்கிறது. அத்தகைய வாயு சார்ந்த நோய் நிலைகளில் இருந்து காத்துக்கொள்ள, உணவில் சேர்க்கும் பூண்டு உதவும். பூண்டு மாரடைப்பை உண்டாக்கும் நோய்க்காரணிகளை தடுப்பதை சித்த மருத்துவம் கூறுவது மட்டுமின்றி, பல அறிவியல் ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.


தினசரி பூண்டு சாறுடன், இஞ்சி சாறும், மாதுளை பழச்சாறும், எலுமிச்சை சாறும் சிறிது தேனும் சேர்த்து எடுத்துக்கொள்வது இருதயத்திற்கு நன்மை பயக்கும். இது இருதய நோயாளிகளுக்கு அமிர்தம் போன்றது. காரணம் ரத்தக்குழாய்களில் 'திராம்பஸ்' எனும் ரத்தக்கட்டுகளை உருவாக்காமல் தடுக்கும் தன்மை இயற்கையாகவே இதற்குண்டு. நாம் உணவில் சேர்க்கும் பூண்டு ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடையதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. முக்கியமாக சிஸ்டோலிக் ரத்த அழுத்ததை குறைக்க கூடியதாக உள்ளது. மேலும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் தடையை தடுப்பதன் மூலமும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக உள்ளது. இந்த ரத்த அழுத்தமே பக்க வாதம், மாரடைப்பு போன்ற பல நோய்களுக்கு விதையாகிறது.


இதன் சிறப்பு என்னவெனில், உணவில் பூண்டினை சேர்த்துக்கொள்ளும் போது இயல்பான நிலையில் உள்ள ரத்த அழுத்தத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தாது என்பது தான். சர்க்கரை நோயாளிகள் பூண்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மேலும் சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்ற வளர்ச்சிதை மாற்ற நோய்களுக்கு காரணமாகும் இன்சுலின் தடையை நீக்கும் தன்மையும் இதற்குண்டு. மேலும் பூண்டின் வாசத்திற்கு காரணமான நறுமண எண்ணை உடலில் கொழுப்பின் உற்பத்தியை தடுப்பதாகவும் உள்ளது.

ஆக, நவீன வாழ்வியல் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள பூண்டினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

சித்த மருத்துவத்தில் 'பூண்டு தேன்' என்ற மருந்து சிறப்பு மிக்கது. பூண்டின் சாற்றுடன் தேன் சேர்த்து தயார் செய்யப்படும் இந்த மருந்து உள்நாக்கில் உண்டாகும் கிருமித்தொற்றுக்கு நல்ல பலனைத் தரும். 'டான்சிலைடிஸ்' எனும் உள்நாக்கு அழற்சி மற்றும் வீக்கத்திற்கு, பூண்டு தேன் மருந்தினை தடவி வர, அழற்சியை உண்டாக்கிய பாக்டீரியா கிருமிகளை கொன்று வீக்கத்தை குறைக்கும். இயற்கை நமக்களித்த ஆன்டி பயாட்டிக் பட்டியலில் பூண்டிற்கு முக்கிய இடம் உண்டு.


தேங்காய் எண்ணையுடன் பூண்டு இரண்டு அல்லது மூன்று திரி சேர்த்து காய்ச்சி உடல் வலி, மூட்டு வலி, கை கால் வலி, குடைச்சல் இவைகளுக்கு ஒத்தடம் தர வலி குறையும். இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூச்சு இரைப்புக்கு ஒத்தடமாகவும் இதனை பயன்படுத்தலாம்.

காது வலிக்கு நல்லெண்ணையுடன் பூண்டு சேர்த்து காய்ச்சி காதில் விடும் பழக்கம் இன்றும் பல கிராமங்களில் பாட்டி வைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மூட்டுக்களில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து உண்டாகும் கீல்வாயு, முதுகு தண்டுவட எலும்புகளில் உள்ள டிஸ்க் எனும் சவ்வுப்பகுதி தேய்வதால் உண்டாகும் வாத நோய்கள் இவை அனைத்திற்கும் முதன்மைக் காரணம் கபவாதமே என்கிறது சித்த மருத்துவம். ஆக அத்தகைய நோய் நிலைகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அதில் இருந்து மீளவும் தினசரி பூண்டினை மூன்று அல்லது நான்கு திரிகள் பாலில் வேக வைத்து எடுத்துக்கொள்ள கபவாதத்தை நீக்கி நன்மை பயக்கும்.

சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு இதுவே உதாரணம். பூண்டினை கொண்டு உருவாகும் சித்த மருந்தான 'பூண்டு லேகியம்' எடுத்துக்கொள்வதும் நற்பலன் தரும். பெண்களின் பிரசவத்திற்கு பின்னர், தாய்ப்பாலை பெருக்குவதற்கு மிகச்சிறந்த சித்த மருத்துவ மூலிகை பூண்டு தான். தினசரி 5 முதல் 10 பல் பூண்டினை பாலில் வேக வைத்து, பாலுடன் சேர்த்து பூண்டையும் எடுத்துக்கொள்ள தாய்ப்பால் சுரப்பை பெருக்கும். இது இன்றளவும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்றைய வாழ்வியல் கொடிய அரக்க நோயான புற்றுநோயை தடுப்பதிலும் பூண்டின் பயன்கள் அளவில் அடங்காதவை. புற்றுநோய்க் காரணிகள் செயல்படுவதை தடுத்து, நோயினை தடுக்க வல்லது. புற்றுநோய் சார்ந்த கட்டிகளை கரைக்கும் தன்மையும் இதற்குண்டு. இன்று அசைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு பசையும் மணத்திற்கு மட்டுமின்றி அதன் மருத்துவ குணத்திற்கும் தான். இன்னும் சொல்லப்போனால் அசைவ உணவால் அஜீரணம் உண்டாகாமல் தடுக்கவும், கொழுப்பு உடலில் அதிகரிக்காமல் தடுக்கும் மருத்துவ யுக்தியாகவும் பூண்டினை கையாண்டு உள்ளது சிறப்பு. இது தமிழர்களின் உணவே மருந்தாகும் சமையல் கலைக்கு உதாரணம்.

இவ்வாறாக பூண்டின் மருத்துவ நன்மைகள் வானளாவி உள்ளதை வெளிநாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க பூண்டினை எளிமையாக பார்க்காமல், அறிவியல் தன்மைகளை எண்ணி, பயன்படுத்த தொடங்கினால் இருதயத்தின் ஆரோக்கியம் நாம் உண்ணும் தட்டில் இருந்து தொடங்கும். இது ஆயுட்காலத்தை கூட்டும்.

Updated On: 16 March 2023 11:51 AM GMT

Related News