10 பேருக்கு உயிர் கொடுக்கும் உடல் உறுப்பு தானம்: டாக்டர் செந்தில்குமார்
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி.
உடல் உறுப்பு தானம் மூலம் 10 பேருக்கு உயிர் கொடுக்கமுடியும் என்கிறார் திருச்சியை சேர்ந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி.
இன்று ஆகஸ்ட் 13 உலக உடல் உறுப்புகள் தானம் நாள் ஆகும். வாழும் வரை உடல் உறுப்பு தானம். வாழ்ந்து முடிந்த பின்னர் உடல் தானம் என்கிறது மருத்துவ பழமொழி.
உடல் உறுப்பு தானம் என்பது இன்று உலக அளவில் மிகப்பெரிய தானமாக பேசப்பட்டு வருகிறது. 134 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மிக நன்றாகவே உள்ளது. அதுவும் நமது தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் செய்வதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இந்திய சுகாதார துறையின் விருதுகளை பல முறை பெற்று உள்ளது.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நமது மக்களிடம் அதிக அளவில் இருந்தாலும், உடல் உறுப்பு தானத்தை எவ்வாறு செய்வது, யாரெல்லாம், எப்போது உடல் உறுப்பு தானம் செய்யலாம், அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய புரிதல் இன்னும் பலரிடம் கேள்வி நிலையில் தான் உள்ளது.
அதற்கு தெளிவான விளக்கம் அளிக்கிறார் திருச்சியை சேர்ந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி. டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி திருச்சி இதயம் பேசுகிறது என்ற பெயரில் ஒரு யூடியூப் செயலியை தொடங்கி அதில் சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். அவரது சமூக வலைத்தள பதிவுகளை ஆயிரக்கணக்காணவர்கள் பார்த்து பயன் அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் உலக உடல் உறுப்பு தானத்தையொட்டி அவரது சமூக வலைத்தள பதிவில் இருந்து சில பகுதிகளை நாம் இப்போது பார்க்கலாமா?
உடல் உறுப்பு தானம் என்பது மரணக்கோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு நோயாளிக்கு உயிர் அளிக்கும் உன்னத தூய செயல் தான் உடல் உறுப்பு தானம். இறைவன் நமக்கு உயிர் கொடுத்து இருக்கிறான் என்றால் அந்த உயிரின் மூலம் அவனது அருளால் நாம் 10 பேருக்கு உயிர் கொடுக்க முடியும் என்பது தான் உடல் உறுப்பு தானத்தின் மகத்துவம் ஆகும். ஆம். ஒருவர் அளிக்கும் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 10பேரின் உயிரை காப்பாற்ற முடியும்.
உடல் உறுப்பு தானத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். லைப் டோனர்ஸ், நேச்சுரல்டெத் டோனர்ஸ், பிரைன் டெத் னோடர்ஸ் என மூன்று வகையான உடல் உறுப்பு தானங்கள் உள்ளன.
உயிருடன் இருக்கும்போது உடன் பிறந்த சகோதரர் அல்லது சகோதரிக்கு இருதயம், சிறுநீரகம், லிவர் போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம்.
இயற்கை மரணத்தின்போது கண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்தற்கு தான் நேச்சுரல் டெத் டோனர்ஸ் என பெயர்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் அதாவது கண்கள், இருதயம், கிட்னி, லிவர் எலும்புகள், தோல் உள்பட 10உறுப்புகளை எடுத்து தேவைப்படும் நோயாளிக்கு பொருத்தலாம். இதன் காரணமாக இறந்த பின்னர் மண்ணில் வீணாக அழியபோகும் உடல் உறுப்புகள் அடுத்தவர்களின் உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
உடல் உறுப்பு தானம் செய்ய நினைப்பவர்கள் மறக்காமல் செய்யவேண்டியது ஒன்று தான். அதாவது அவர்கள் உயிருடன் இருக்கும்போதே தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www. tnos.org என்ற இணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்பு தானத்திற்கான அட்டையை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த அட்டையை தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்து ஒப்படைத்து இருக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நிலையில் குடும்பத்தினர் தான் அதனை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி தெரிவித்து உள்ளார்.
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி திருச்சியில் கடந்த 2017ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி நடத்திய விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. மேலும் டாக்டர் ெசந்தில்குமார் நல்லுசாமி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதோடு நின்று விடாமல் தானே உடல் உறுப்பு தானத்திற்கான டோனர் கார்டும் வைத்து உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu