300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்

300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்
X
உலகில், அடுத்த இரு மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட, கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், உலகளவில் ஒமிக்ரான் தினசரி பாதிப்பு மூன்றரை கோடியாக இருக்கும், அடுத்த இரு மாதங்களில் 300 கோடி பேருக்கு இதன் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று, அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், ஒமிக்ரான் உச்சமடையும். அந்த நேரத்தில், தினமும் மூன்றரை கோடி பேருக்கு தினசரி பாதிப்பு இருக்கும். வருகின்ற ஏப்ரல் மாதத்தில், இது டெல்டா வைரஸ் பரவலை விட வேகமாக, 300 கோடி பேரை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும். டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களை ஒமிக்ரான் தாக்கி, மருத்துவமனைய்ல் சேர்க்கும் வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் இருந்து வெளியான மற்றொரு ஆய்வின் முடிவும் இதை ஒத்தே உள்ளது. டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்று, அது கூறியுள்ளது.

Tags

Next Story