‘புதிய கொரோனா ஜேஎன். 1 பற்றி அச்சப்பட தேவை இல்லை’ டாக்டர் ஃபரூக் அப்துல்லா

‘புதிய கொரோனா ஜேஎன். 1 பற்றி அச்சப்பட தேவை இல்லை’ டாக்டர் ஃபரூக் அப்துல்லா
X

டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

‘புதிய கொரோனா ஜேஎன். 1 பற்றி அச்சப்பட தேவை இல்லை’ என டாக்டர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் கொரோனா பற்றிய தீங்குகளும் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது புதிய வகை கொாரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமடைந்த வடிவமான JN.1 கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா பற்றி சிவகங்கை பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்றைப் உண்டாக்கும் வைரஸைப் பொருத்தவரை ஏனைய வைரஸ்கள் போலவே மனிதர்களிடையே பரவும் போது பல்கிப் பெருகும் கூடவே தன்னகத்தே கொண்டுள்ள அங்கங்களில் உருமாற்றமடையும் அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் நிறுத்த இயலாது.

ஆரம்பத்தில் 2019 ல் புதிய வைரஸாக வந்த கொரோனா பிறகு பீட்டா மற்றும் டெல்ட்டா வேரியண்ட்டாக உருமாறி மிகப்பெரும் சுகாதார அச்சுறுத்தலைக் கொணர்ந்ததை இங்கு மறக்கிலோம். எனினும் அதற்குப் பிறகான காலங்களில் குறிப்பாக 2022 மற்றும் 2023 வருடங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தன்னகத்தே உருமாற்றங்கள் அடைந்து மனிதர்களுக்கு அதிக தீமை தராத அதே சமயம் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டது.

ஓமைக்ரான்XBBBA.2.86 ( பைரோலா) போன்ற உருமாற்றங்கள் அனைத்தும் அத்தகையனவே ஆகும். நமது பொது சுகாதாரத்தை அச்சுறுத்தாமல் அதே சமயம் வேகமாக மக்களிடையே பரவி பெரும்பான்மை மக்களுக்கு சளி. இருமல். காய்ச்சல் போன்ற சீசனல் ஜூரத்தை ஏற்படுத்துமாறு இருந்தது.

இப்போதும் பைரோலா உருமாற்றத்தில் இருந்து ஒரே ஒரு இடத்தில் உருமாற்றம் நிகழ்ந்து இந்த புதிய வேரியண்ட்டான JN.1 உருவாகி இருக்கிறது. இந்த உருமாற்றம் முதன் முதலில் அமெரிக்க நாட்டில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அக்டோபர் மாத இறுதியில் மொத்த தொற்றுகளில் வெறும் 0.1% தொற்றுகளை மட்டுமே இந்த உருமாற்றம் ஏற்படுத்தியிருந்தது எனினும் அடுத்த ஒரு மாதத்தில் டிசம்பர் 8, 2023 கணக்கின் படி அமெரிக்காவில் கண்டறியப்படும் கொரோனா தொற்றுகளில் 15-29% இந்த வேரியண்ட் தான் வியாபித்திருக்கிறது.

அடுத்த சில மாதங்களுக்கு உலகம் முழுவதும் இந்த வேரியண்ட் பரவி தொற்றுகளை பெருவாரியாக ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த JN.1 வேரியண்ட் ஏனைய முந்தைய கொரோனா வைரஸ் வேரியண்ட்களான ஓமைக்ரான் மற்றும் பைரோலா போலவே தான் நடந்து கொள்கிறது. இது வீரியமிக்கது. தீவிர தொற்றுகளை ஏற்படுத்தும் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இன்னும் ஏற்படவில்லை

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் தீவிர தொற்று கண்டு சேருபவர்களின் எண்ணிக்கையோ மரணமடைபவர்களின் எண்ணிக்கையோ கூடவில்லை. 2022இன் பிற்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட அப்டேட்ட கோவிட் தடுப்பூசிகள் இந்த வேரியண்ட்டுக்கு எதிராகவும் வேலை செய்யும்.

இப்போது பின்பற்றப்பட்டு வரும் ஆய்வக பரிசோதனைகளின் மூலம் இந்த வேரியண்ட் ஏற்படுத்தும் தொற்றுகளை கண்டறிய முடியும். எனவே பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று அந்த ஆய்வறிக்கை நிறைவு செய்கிறது. இந்த வேரியண்ட்டின் அறிகுறிகளாக சீசனல் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளான ஜூரம், மூக்கு ஒழுகுதல்,தொண்டை வலி, தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவை இருக்கக்கூடும். சிங்கப்பூரிலும் கடந்த இரு வாரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தாலும் மரண விகிதமோ மருத்துவமனை அட்மிசன்களோ கூடவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த புதிய வேரியண்ட் மூலம் முதல் மற்றும் இரண்டாம் அலைகளைப் போல சுகாதார சீர்கேட்டை அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்றே கணிக்கிறேன். எனினும் வயது முதிர்ந்தோர், எதிர்ப்பு சக்தி குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் பல்வேறு இணை நோய்களுடன் வாழ்பவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதே நல்லது. காரணம் எந்த சாதாரண தொற்று கூட மேற்கூறிய மக்களுக்கு சற்று தீவிரமாக வெளிப்படக்கூடும். பனிக்காலம் வர இருப்பதால் சுவாசப்பாதை மூலம் இது போன்ற வைரஸ் தொற்றுகள் பரவாமல் தடுக்க நாம் செய்ய வேண்டியது

1. கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவ வேண்டும்.

2. வெளி இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

3. அத்தியாவசியத் தேவையின்றி பயணங்களை முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நலம்.

4. சளி. இருமல் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.

5. காய்ச்சல் குணமாகும் வரை தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் பிறருக்குத் தொற்றுப் பரவல் நிகழாமல் தடுக்கலாம் JN.1 புதிய வேரியண்ட் குறித்து அச்சம் தேவையில்லை என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்