தமிழகத்தில் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
X

முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை தடுக்க, பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில், உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதை மேலும் கடுமையாக்குவது குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசானை நடத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை தொடந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கீழ்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இரவில் ஊரடங்கு

தமிழகத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல், காலை 5 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகிறது. அன்றைய தினம், பொதுப்போக்குவரத்து இயங்காது, மெட்ரோ ரயில், பஸ் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கில் இரவில் நேரங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கலாம்.

அதே நேரம், ஊரடங்கில் இருந்து பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம் மையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம், பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.


கோவில்களுக்கு கட்டுப்பாடு

பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை. அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜனவரி 9 க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும் போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்து கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வெறு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

உணவங்களில் 50, சதவீதம் அனுமதி
உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிப்படுகிறது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் 100 நபர்கள் மட்டும் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிப்படும்.

கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிப்படும்.

விளையாட்டு போட்டி நடத்தலாம்

திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்தலாம். உள்விளையாட்டு அரங்குகளில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுபோட்டிகள் நடத்திக் கொள்ளலாம்.

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில், பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!