கொரோனா பேரலை: தத்தளிக்கும் மாணவர்களின் கல்வி

கொரோனா பேரலை: தத்தளிக்கும் மாணவர்களின் கல்வி
X

பள்ளி வகுப்பறை  (கோப்பு படம்)

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

மனிதனுக்கு அடிப்படை அறிவை ஊக்குவிப்பது கல்விச் செல்வம். அந்த கல்விச் செல்வம் கொரோனா பேரலையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியரின் சரித்திர கனவு கொரோனாரவின் மூச்சுக்காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றிய சிறு தொகுப்பை இங்கே காண்போம்.

கொரோனாவின் தொடக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்று 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் பரவத் தொடங்கியது. அப்போது இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்று நோய் என்றும், இந்த நோய் தாக்கத்தை தேசிய பேரிடர் என்றும் மத்திய அரசு அறிவித்தது. மேலும் நோயின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்தது.

இதையடுத்து 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அன்று முதல் அனைத்து கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் என்று அனைத்தும் முடங்கியது.130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கல்விச் செல்வம்

மக்கள் பாதிப்பைவிட வருங்கால சந்ததியர் வாழ்க்கையின் அடித்தளமான கல்விச் செல்வத்தை படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என்று முந்தைய அரசு அறிவித்தது. இதனை மாணவர்கள் ஜாலியாக எடுத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் எதிர்காலம் இதனால் கேள்விக்குறியாகும் என்பதை அவர்கள் உணரவில்லை. பொதுத் தேர்வு மதிப்பெண் என்பது மாணவர்களின் அனைத்து உயர்ந்த நிலைக்கும் தேவையான ஒன்றாகும். அரசு வேலையாக இருந்தாலும், தனியார் வேலையாக இருந்தாலும் முன் வைக்கும் ஒரே கேள்வி பொதுத் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் சதவீதம் தான்.

மாணவர்களின் மனநிலை?

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் எப்படி அந்த பாடத்தை தெளிவாக படிக்க முடியும். குழப்ப நிலை தான் நீடிக்கும். ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இது நெருக்கடியாக அமையும். ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் எந்த மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு பிடித்தமான குரூப்பை தேர்வு செய்வார்கள்.

கணக்கு, அறிவியல் பாடத்தை முதன்மையாக தேர்வு செய்ய விரும்புவார்கள். சிலர் அறிவியல் பாடத்தையும், சிலர் கணினியையும், சிலர் தொழிற்கல்வியையும் தேர்வு செய்ய நினைப்பார்கள். அவர்கள் படிக்க விரும்பும் குரூப் கிடைக்குமா? வேறு பள்ளிகளில் மேல்நிலை படிப்பை தொடர நினைக்கும் மாணவர்கள் எதன் அடிப்படையில் தனக்கு பிடித்த குரூப்பை தேர்வு செய்ய முடியும். இதிலும் குழப்பநிலைதான் நீடிக்கிறது.


ஆன்லைன் வகுப்பு

கொரோனா தாக்கத்தின் நடுவே ஆன்லைன் கல்வி, கல்வி தொலைக்காட்சி என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதில் எத்தனைபேர் அக்கறை காட்டுகிறார்கள் என்பது தெரியுமா? ஆன்லைனில் பாடம் நடத்தும் எத்தனை பள்ளிகளுக்கு தெரியும். படிக்கும் பல மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு செல்போன் கிடையாது என்பது. இதுபோன்ற காரணங்களால் பயந்துபோன பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் இந்த ஆண்டு வரை எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரிவர பள்ளிக்கு சென்றது கிடையாது.

சில பெரிய பெரிய பள்ளிக்கூடங்கள் தான் ஆன்லைனில் சிறு வகுப்பு முதல் பெரிய வகுப்பு வரை பாடம் நடத்துகிறது. சிறிய பள்ளிகள் எதுவும் மாணவர்களை கண்டுகொண்டதாக தெரியவில்லை. கட்டணம் கேட்டு தொல்லை கொடுப்பதோடு சரி. மாணவர்கள் வாழ்க்கையை பற்றி இந்த பள்ளக்ளுக்கு என்ன அக்கரை இருக்கிறது.


அடிப்படை அறிவை இழக்கும் அபாயம்

பள்ளிப் படிப்பை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் தொடராமல் பள்ளி பருவத்தினர், கைகளில் செல்போனை வைத்துக் கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தூங்கிக் கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியை பற்றியே மறந்துவிடுகிறார்கள். நவீன கால ஆதி மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓராண்டுக்கு மேல் பள்ளி படிப்பை தொடக்கூட செய்யாத இத்தகைய மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு சென்றதும் உடனே படித்துவிட முடியுமா? முதன் முதலில் மாணவர்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது ஏற்படும் நிலைதான் இப்போதும் ஏற்படும்.


முக்கியத்துவம் கொடுப்போம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கிய தூண்கள் தான் நம் வருங்கால சந்ததியினர். அவர்களுக்கு கல்வி என்பது மிகமிக அத்தியாவசியமானது. உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு அவர்களை தயார்படுத்துவது கல்வி மட்டும்தான்.

இதுபோன்ற நெருக்கடியான கால கட்டத்திலும் பொருளாதாரத்தை எப்படி சமன் செய்வது என்று யோசிக்கும் அதே வேளையில், மாணவர்களின் கல்விக்கண்ணை திறக்க என்ன வழிகள் உள்ளது என்பதை தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நல்லதொரு தரமான முடிவை எடுக்க வேண்டும்.

பெற்றோர் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆன்லைன், பள்ளிக்கூடம் வருகை என்பதையும் கடந்து மாணவர்களை பாடம் படிக்க வைக்கும் நிலைக்கு கொண்டு செல்ல என்ன வழிகள் உள்ளது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறை மாணவர்களின் கல்வி நிலை குறித்து சிந்திக்கும் என்று நாமும் நம்புகிறோம்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil