மென்பொருள், ஆயத்தஆடை ஏற்றுமதியில் தமிழகம் முன்னோடி: துணை ஜனாதிபதி பெருமிதம்

மென்பொருள், ஆயத்தஆடை ஏற்றுமதியில்   தமிழகம் முன்னோடி: துணை ஜனாதிபதி பெருமிதம்
X

ஏற்றுமதிக்கான சிறப்பு விருதுகளை, ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (EOU) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திட்டங்களின் கீழ் செயல்படும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வழங்கினார். 

அந்நியச் செலாவணியைப் பெறுவதிலும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது -துணை ஜனாதிபதி

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு பேசியதாவது:

10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகவும் பிரபலமான பழம்பெரும் தமிழ் கவிஞரான ஔவையாரை உங்கள் அனைவருக்கும் தெரியும். "கொன்றை வேந்தன்" என்ற தலைப்பில் அவர் புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர், "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று எழுதியுள்ளார். அதன் பொருள், "கடல் கடந்து சென்றாவது செல்வத்தைச் சேருங்கள்" என்பதுதான்.

முக்கியத்துவம் வாய்ந்த அந்நியச் செலாவணியைப் பெறுவதிலும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நாட்டைக் கட்டமைப்பதில் ஏற்றுமதியாளர்களாகிய நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும், வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் தங்களது பங்களிப்புகளை வழங்கியுள்ள விருதாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏற்றுமதியாளர்களின் கடினஉழைப்பு மற்றும் ஆர்வம் மூலம், நாட்டின் ஏற்றுமதி அண்மைக்காலங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி இதுவரை இல்லாத சாதனை அளவாக 418 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நடைபெற்றுள்ளது. சேவைகள் ஏற்றுமதி 250 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இரண்டும் இணைந்து 650 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தது என்பது, கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் குறிப்பிடத்தகுந்த சாதனையாகும். இந்த நிலை தொடர வேண்டும். வரும் மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்து, நாட்டுக்கு மதிப்புமிகுந்த அந்நியச் செலாவணியை அதிக அளவில் கொண்டுவரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

எந்தவொரு நாடும் வலுவான பொருளாதாரமாக இருக்க, அதற்கு அந்நிய செலாவணி வரத்து என்பது மிகவும் முக்கியமானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அந்நிய செலாவணி வரத்தானது, பெரும்பாலும் ஏற்றுமதி மூலமே நிறைவேறும். ஏற்றுமதி குறையும்போது, அந்நிய செலாவணி கையிருப்பு குறையும். இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கச் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு.

எனவே, நமது ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்கும், நமது பொருளாதாரத்தை தொடர்ந்து வளரச் செய்யவும் புதிய சந்தைகளை கண்டறிய வேண்டியது அவசியம். வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு ஏற்ற கொள்கைகள், எளிதாக தொழில் செய்வது மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு மதிப்பு அளிக்க கவனம் செலுத்துவது ஆகியவற்றின் மூலம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

2019-ம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்த "மாவட்ட ஏற்றுமதி முனையம்" என்ற கனவுத் திட்டமானது ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 775 மாவட்டங்களில் பெரும்பாலானவை, ஏற்றுமதி முனையங்களாக மாறுவதற்கான திறனைப் பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று என்னிடம் தெரிவித்தனர்.

அதேபோல, இந்திய அரசின் மற்றொரு நடவடிக்கையான "ஒரு மாவட்டம் ஒரு பொருள்" திட்டம் திகழ்கிறது. இது ஒவ்வொரு மாவட்டத்தின் உண்மையான திறனை வெளிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஊரக தொழில்முனைவோர் திறனுடன் வேலைவாய்ப்பை உருவாக்கவும் மற்றும் சுயசார்பு பாரதம் என்ற இலக்குக்கு நம்மை கொண்டுசெல்லவும் மாற்றமிகு நடவடிக்கையாக திகழும் என்று பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி தொகுப்பில் 28% அளவுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கினை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு துறைகளிலும் 5,604 பிரிவுகளுடன் நாடு முழுவதும் 268 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர். "இந்தியாவில் தயாரிப்போம்", "உள்ளூர் பொருட்களை சர்வதேச அளவுக்கு கொண்டுசெல்வது", "தொழில் செய்வதை எளிதாக்குவது" ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான முக்கிய தளமாக இவை உருவாகியிருக்கின்றன. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிறைவேற்றுவதில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பை சிறந்த அளவில் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள், இலகு மற்றும் கனரக பொறியியல், பம்ப்-கள் மற்றும் மோட்டார்கள், மின்னணு மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் மிகப்பெரும் மையமாக இது உருவெடுத்துள்ளது. ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் தொடர்ந்து வருகிறது.

வலுவான கட்டமைப்பு மற்றும் 4 சர்வதேச விமான நிலையங்கள், மூன்று மிகப்பெரும் கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் நாட்டில் மூன்றாவது பெரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

சென்னை- பெங்களூரு தொழில்வழித் தடம், சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித் தடம் ஆகியவை நிறைவடையும்போது, மாநிலத்தின் பொருளாதாரத் திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி, ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதில் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் முன்னோடியாக திகழ்கிறது என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியிலும் ரூ.1,32,803 கோடி ஏற்றுமதியுடன் 2021-22-ம் ஆண்டில் 14 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இளம் நாடாக இந்தியா இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமது பல்வேறுபட்ட மக்கள் தொகையின் திறனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும், உரிய திறனுடன் அவர்களை மேம்படுத்தவும் சிறப்பு முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதனை நாம் செய்யாவிட்டால், மக்கள் விகிதாச்சாரத்தின் பலனே மிகப்பெரும் பலவீனமாக மாறிவிடும்.

இந்த சூழலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பதை அறிந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு, அவர்களால் லட்சக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளான துறைமுகங்களில் போதிய அளவில் கன்டெய்னர்கள் இல்லாதது, துறைமுகங்களைப் பயன்படுத்துவதில் நெருக்கடி, குறைவான அளவிலான சேமிப்புக் கிடங்கு மற்றும் குளிர்சாதன சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட சவால்களை மத்திய அரசும், தமிழக அரசும் தீர்த்துவைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

வர்த்தகர்களும் வர்த்தக குறியீடுகள், காப்புரிமைகள், சான்றிதழ், தரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதி சந்தையில் தாவரங்களை அனுப்பும்போது அதற்கான சுகாதார கட்டுப்பாடுகளை பேணுவது ஆகியவற்றில் சரியான முறையில் செயல்பட வேண்டும். சவால்களிலிருந்து மீண்டுவந்து, வெளிநாடுகளுக்கான நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இங்கு விருதுபெற்ற அனைவருக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதியாண்டு சிறப்பாக அமைய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நாடு முழுமைக்கும் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சியை கொண்டுவரும் என்று நம்புவோம். என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு தமது உரையில் தெரிவித்தார்.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமச்சர் அனுப்பிரியா சிங் பாட்டில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், MEPZ (சிறப்பு பொருளாதார மண்டலம்) வளர்ச்சி ஆணையர் டாக்டர் எம்.கே.சண்முகசுந்தரம், இணை வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ்பால்மேனன் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!