கட்டிய வீடுகளை விற்கமுடியவில்லை, சிக்கலில்தவிக்கும் ரியல் எஸ்டேட்நிறுவனங்கள் :ஆய்வில் தகவல்

கோப்பு படம்
பொருளாதார மந்த நிலை, பணப்புழக்கம் குறைவு, வேலைஇல்லா திண்டாட்டம், உறுதியற்ற வேலை, கடன்பெற வங்கிகள் விதிக்கும் கெடுபிடி நிபந்தனைகள், வியாபார மந்தம், கொரானாவல் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து வர்த்தகம் மீள முடியாத நிலைமை போன்ற காரணங்களால் இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் கடும் பாதிப்பில் உள்ளது.
நிலத்தின் மதிப்பு உயர்வு, கட்டுமான பொருட்களின் விலையின் கடும் உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வு ஆகியவற்றால் கட்டுமான நிறுவனங்கள் வீடுகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளனர், பத்திரப்பதிவு செலவு, ஜிஎஸ்டி உள்ளிட்டவையும் சோ்ந்து கொள்வதால் வீடுகளின் விலை எகிறி விடுகிறது. வீடுகளுக்கான இந்த விலைஉயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் வீடு வாங்கும் திட்டத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு காட்சிப் பொருள் போல வைத்துள்ளன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு சரிவில் இருந்து மீளமுடியாமல் ரியல் எஸ்டேட் தொழில் தவித்து வருகிறது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான வீடுகளை கட்டிமுடிக்காமல் பாதியிலேயே கட்டுமான நிறுவனங்கள் கைவிட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சொத்து வரி உயா்வு, பத்திரப் பதிவுக்கட்டணம் உயா்வு, ஜி.எஸ்.டி., பணப்புழக்கம் குறைவு போன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட் தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் நட வடிக்கை, வங்கிகளின் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடியாமல் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனா்.
இந்த நிலையில் வீடு விற்பனை பற்றி அகமதாபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் ஒரு ஆய்வு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 7.85 லட்சம் கட்டிய புது வீடுகள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கி உள்ளன என்ற தகவல் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ராப்டைகர் என்ற பிரபல வீட்டு தரகு நிறுவனம் எடுத்த ஆய்வின் முடிவில் செப்டம்பர் 30, 2022 வரை சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 7,85,260 கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் உள்ளன என்று தெரிய வந்துள்ளது. கடந்த காலாண்டில் (ஏப்ரல் - ஜூலை) 7,63,650 கட்டிய வீடுகள் விற்கப்படாமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மாதங்களில், கொல்கத்தாவில் குறைந்த அளவு விற்கப்படாத கட்டிய வீடுகள் உள்ளதாகவும், டெல்லியில் கடந்த 62 மாதங்களாக விற்கப்படாத வீடுகள் அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் 32,180 கட்டிய வீடுகள் கடந்த 27 மாதங்களாக விற்காமல் உள்ளன என்று ஆய்வு கூறுகிறது. அகமதாபாத்தில் 65,160 கட்டிய வீடுகளும், பெங்களூருவில் 77,260 கட்டிய வீடுகளும், டெல்லியில் 1,00,770 கட்டிய வீடுகளும், ஹைதராபாத்தில் 99,090 கட்டிய வீடுகளும், கொல்கத்தாவில் 22,530 கட்டிய வீடுகளும், புனேவில் 1,15,310 கட்டிய வீடுகளும் விற்கப்படமால் அப்படியே இருக்கின்றன. இந்த வீடுகள் முழுமையாக விற்க இன்னும் 32 மாதங்கள் ஆகும் என் று என்று கணிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்கள், வீட்டு மனை விற்பனையிலும் இதே மந்த நிலைதான் தமிழகத்தில் பல நகரங்களில் நிலவுகிறது.வீட்டு மனைகள் விற்பனை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், பத்திரப்பதிவு தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகளும் நிலம், வீட்டு மனை விற்பனையில் தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வீட்டுமனை, வீடுகளின் விலை குறையவில்லை. அதனால் அவற்றை வாங்க மக்கள் தயங்கும் நிலைமை உள்ளது. இந்த நிலை மாற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu