வட்டி விகிதம் உயர்வு ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு: யார் யாருக்கு பாதிப்பு?

வட்டி விகிதம் உயர்வு ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு:   யார் யாருக்கு பாதிப்பு?
X

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ்

பணவீக்கத்தை குறைக்க திடீரென ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால் வீட்டுக்கடன் மாதத்தவணை அதிகரிக்கும் நிலை

ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 0.40% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரெப்போ வட்டி 4.40% ஆக உயர்ந்துள்ளது.

பணவீக்கம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் அவசரமாக கூடியது. அதில் ரெப்போ வட்டியை 0.40% உயர்த்தி 4.40% ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் வெளியிட்டுள்ளார். பணவீக்கத்தின் அழுத்தம் மேலும் மோசமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி என்றால் என்ன?

ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன், ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வட்டியும் உயரும்.

ரெப்போ விகித உயர்வு என்றால் என்ன?

ரிசர்வ் வங்கியின் முக்கிய கொள்கை விகிதம் அல்லது வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதமான ரெப்போ விகித உயர்வால், வங்கிகளுக்கான நிதிச் செலவு அதிகரிக்கும். இது வரும் நாட்களில் கடன் மற்றும் டெபாசிட் விகிதங்களை உயர்த்த வங்கிகளையும் NBFC களையும் தூண்டும். அதேநேரம், ரெப்போ விகித உயர்வால் நுகர்வு மற்றும் தேவை பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி கடைசியாக ஆகஸ்ட் 2018 இல் ரெப்போ விகிதத்தை 25 பிபிஎஸ் அதிகரித்து 6.50 சதவீதமாக உயர்த்தியது.

CRR உயர்வின் தாக்கம் என்ன?

CRR என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருத்திருக்க வேண்டிய டெபாசிட்தாரர்களின் பணத்தின் சதவீதமாகும். CRR இல் 50 bps உயர்வு வங்கி அமைப்பிலிருந்து ரூ.87,000 கோடியை உறிஞ்சிவிடும். வங்கிகளின் கடன் அளவுகள் அதற்கேற்ப குறையும்.

பணவீக்கம்

கடந்த சில மாதங்களாக உலகம் முழுக்க பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் எளிய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக பணவீக்கம் உயரும்போது வட்டி விகிதம் உயர்த்தப்படும்.

உலகம் முழுவதும் வட்டி உயர்வு

பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என அமெரிக்க ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு கூட்டம் இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி வட்டி விகிதம் பற்றி முடிவு செய்யும். இந்நிலையில் ரிசர்வ் வங்கி கொள்கை குழுவின் கடந்த இரண்டு கூட்டங்களிலும் வட்டி உயர்த்தப்படாமலேயே இருந்தது. ஆனால், நிச்சயம் வட்டி உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தினர். ஏனெனில் 2020 மே மாதத்துக்கு பின் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மாற்றவே இல்லை.

இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை (மே 4) அன்று, பணவீக்கத்தைக் குறைக்கவும், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும் முக்கிய கொள்கை விகிதமான ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4.50 சதவிகிதம் உயர்த்தியதை அடுத்து, வங்கி அமைப்பில் வட்டி விகிதங்கள் உயரும்.

பாதிப்பு என்னவாக இருக்கும்?

வீடு, வாகனம் மற்றும் பிற தனிநபர் மற்றும் கார்ப்பரேட் கடன்களுக்கான சமமான மாதாந்திர தவணைகள் (EMIs) அதிகரிக்க வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரெப்போ வட்டி விகித உயர்வால் டெபாசிட் விகிதங்களும் உயரும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!