Profit on Buying Gold- தங்கம் வாங்குவதில் இத்தனை விஷயங்கள் இருக்கா? - இப்படி வாங்குனா நமக்கு லாபம் அதிகமா?

Profit on Buying Gold- லாபம் தரும் வகையில், தங்கத்தை வாங்குவது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
Profit on Buying Gold- இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை காலங்களில் தங்கத்தை வாங்குவது, பரிசளிப்பது என்பது வழக்கமாக இருக்கிறது. ஆண்டுதோறும் வரும் தாந்தேராஸ் தினத்தன்று தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களை வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவில் தாந்தேராஸ் தினம் வடஇந்தியாவில்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது என்றாலும், பண்டிகை காலங்களில் தங்கம் போன்றவற்றை வாங்குவது தென்னிந்தியாவிலும் வழக்கமாக இருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டில் தீபாவளியை ஒட்டி தங்கத்தை வாங்குவது 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ஆனால், தங்கத்தை எந்த விதமாக வாங்குவது என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. வாங்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து தங்கத்தைப் பல்வேறு வடிவங்களில் வாங்க முடியும்.
1. தங்கத்தை ஆபரணமாக வாங்குவது,
2. தங்கக் காசுகளாகவோ, கட்டிகளாகவோ வாங்குவது,
3. SGB எனப்படும் அரசு உத்தரவாதமளிக்கும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது,
4. ஜிபே, பேடிஎம் போன்ற செயலிகளின் மூலம் வாங்குவது,
5. ETF எனப்படும் தங்கத்தோடு இணைக்கப்பட்ட 'எக்சேஞ்ச் ட்ரேட் ஃபண்ட்களை' வாங்குவது.
எந்த நோக்கத்திற்காக தங்கம் வாங்கப்படுகிறதோ, அதனை மனதில் வைத்து மேலே சொல்லப்பட்ட வாய்ப்புகளில் ஒன்றின் மூலம் தங்கத்தை வாங்கலாம்.
ஆபரணமாக வாங்குவது
இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்தில் பெரும்பகுதி ஆபரணங்களாக அணிந்துகொள்வது என்ற நோக்கத்தில் வாங்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக வாங்குபவர்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் செய்கூலி, சேதாரம் போன்றவை சற்றுக் குறைவாக இருக்கும் இடங்களைத் தேர்வுசெய்து, 916 முத்திரை பதிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஆபரணமாக வாங்கும்போது 3 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதேபோல, செய்கூலி, சேதாரம் என்ற பெயரில் 10 - 15 சதவீதம் வரை கூடுதல் பணத்தை நகைகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆபரணமாக வாங்குவதில் உள்ள சாதகமான அம்சம், இவற்றை அணிந்து மகிழ முடியும் என்பதோடு, அவசரச் செலவுகளுக்கு இந்த நகைகளை அடகுவைத்து பணத்தைப் பெற முடியும். ஆனால், முதலீட்டு நோக்கில் பார்த்தால் குறுகிய காலத்தில் இது லாபகரமாக இருக்காது. வாங்கும்போதே 13- 15 சதவீதம் வரை அதிக விலைக்கு வாங்குவதால், அதனைவிட விலை அதிகரிக்கும்போதுதான் லாபகரமாக இருக்கும். தவிர, நகைகளைப் பாதுகாத்து வைப்பதும் ஒரு சிக்கலான விஷயம்.
தங்கக் காசுகளாகவோ, கட்டிகளாகவோ வாங்குவது
இந்த வடிவத்தில் தங்கத்தை வாங்குவது வெறும் முதலீட்டு வாய்ப்புதான். கடைகளில் இதனை வாங்கும்போது இதற்கும் 3 சதவீதம் ஜிஎஸ்டி உண்டு. ஆனால், நகைகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைந்த அளவில் செய்கூலி - சேதாரம் விதிக்கப்படுகிறது. அவசர பணத் தேவைக்கு இவற்றையும் அடகு வைக்க முடியும். மிகக் குறைந்த அளவில் இவற்றை வாங்கிச் சேமிக்க முடியும் என்பது மற்றொரு சாதகமான அம்சம்.
SGB எனப்படும் தங்கப் பத்திரங்கள்
இந்தத் தங்கப் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையை வைத்து இந்தப் பத்திரங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.
இந்தப் பத்திரங்களை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், அஞ்சலகங்கள், ஏஜென்ட்கள் மூலம் வாங்கலாம். ஆன்லைன் மூலம் வாங்கினால் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இது தவிர தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது அதை ஒட்டி இந்தப் பத்திரங்களின் விலையும் அதிகரிக்கும்.
மற்ற முதலீடுகளில் மூலதனத்தின் மீது கிடைக்கும் ஆதாயத்திற்கு வரி விதிக்கப்படும். ஆனால், தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த வரி கிடையாது.
இந்த பத்திரங்களில் 8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். விரும்பினால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை விற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். டி-மேட் வடிவத்தில் வாங்கியவர்கள் பங்குச் சந்தைகளில் இவற்றை வாங்கவோ விற்கவோ முடியும்.
இந்தப் பத்திரங்களை தங்கத்தை அடகு வைப்பதுபோலவே வங்கிகளில் அடகுவைக்கவும் முடியும். ஒரு நிதியாண்டில் தனிநபரோ, கூட்டுக் குடும்பமோ 4 கிலோ வரை இதில் தங்கத்தை வாங்கலாம். அறக்கட்டளைகள் 20 கிலோ வரை தங்கத்தை வாங்கலாம்.
ஜி பே, பேடிஎம், ஃபோன் பே போன்ற செயலிகளில் வாங்குவது
டிஜிட்டல் பணப் பரிமாற்றச் செயலிகளான ஜி பே, பேடிஎம் போன்ற செயலிகளின் மூலமும் தங்கத்தை வாங்க முடியும். வேறு சில நிறுவனங்களும் இதேபோன்ற டிஜிட்டல் தங்க விற்பனையில் ஈடுபடுகின்றன. இவற்றின் மூலம் தூய தங்கத்தை மட்டுமே வாங்க முடியும்.
ஒவ்வொரு செயலியும் இந்தத் தங்கத்தை வாங்க ஒரு தங்க விற்பனை நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் ஆக்மோன்ட் கோல்ட் லிமிட்டட், எம்எம்டிசி - பிஏஎம்பி இந்தியா லிமிட்டட், டிஜிட்டல் கோல்ட் இந்தியா லிமிட்டட் ஆகியவை இந்தச் செயலிகளுக்காக தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்வதோடு, அவற்றை சேமித்தும் வைக்கின்றன.
ஒருவர் தினமும் 1 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை தங்கத்தை வாங்க முடியும். விரும்பும்போது நம்முடைய கணக்கில் உள்ள தங்கத்தை விற்க முடியும். அல்லது தங்கக் கட்டிகளாக வாங்கிக்கொள்ள முடியும்.
ETF எனப்படும் தங்கத்தோடு இணைக்கப்பட்ட 'எக்சேஞ்ச் ட்ரேட் ஃபண்ட்களை' வாங்குவது
தங்கத்தை டிஜிட்டல் வடிவில் வாங்க இது இன்னொரு வழி. இதிலும் மிகக் குறைந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியும். இந்தியாவில் பல நிறுவனங்கள் இதுபோன்ற தங்க ETFகளை விற்கின்றன. இதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த ETFகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் வாங்கவும் விற்கவும் முடியும். தங்கத்தின் விலை உயரும்போதெல்லாம் இவற்றின் விலையும் உயரும். குறிப்பிட்ட காலத்திற்கு இவற்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. வாங்கும்போது இதற்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை.
பாதகமான அம்சம் என்று பார்த்தால், இவற்றை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஒரு சிறிய தொகையை நிதி நிர்வாகத்திற்காக வசூலிக்கும். தவிர, வாங்கும்போதும் விற்கும்போது ஒரு சிறிய தொகையை இடைத்தரகர் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
எந்த வகையில் தங்கம் வாங்குவது லாபம்?
மேலே உள்ளவற்றில் எந்த வாய்ப்பை சாதாரணமாக தங்கம் வாங்குபவர் தேர்வுசெய்ய வேண்டும்?
"பணம் நிறைய வைத்திருப்பவர்கள் எந்த வாய்ப்பையும் தேர்வுசெய்யலாம். ஆனால், ஒரு நடுத்தர வர்க்கத்தினராக இருந்தால் தங்க நகையே வாங்க வேண்டும். ஏனென்றால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதோடு, அவசரத் தேவைக்கு உடனடியாக எங்கு வேண்டுமானாலும் அடகு வைக்க முடியும்.
ஆனால், ஆபரணத் தங்கத்தை வாங்கும்போது வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருப்பதால் தங்கக் காசுகளாக வாங்கி வைக்கலாம். இதன் மூலம் அவசரத் தேவைகளைச் சமாளிக்க முடியும்" என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
அரசின் தங்கப் பத்திரங்களையும் அடகு வைக்கலாம் என்றாலும் அவற்றை வங்கிகளிலும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களிலும் மட்டும்தான் அடகு வைக்க முடியும். அவற்றை அடகுக்கு ஏற்பதும் மறுப்பதும் அவற்றின் உரிமை. தவிர, இவை உடனே நடக்காது. சில நாட்கள் ஆகலாம். ஆனால், ஆபரணமோ, தங்கக் காசோ உடனடியாக அடகு வைக்க முடியும் என்கிறார் அவர்.
முதலீட்டு நோக்கத்திற்காக வாங்குவது என்றால் தங்க ஈடிஎஃப்களே சிறந்தவை என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். அவை தங்கத்தின் விலையோடு நேரடியாகத் தொடர்புடையவை என்பதோடு, மிகக் குறைந்த அளவுக்கு வாங்கவும் விற்கவும் முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
"டிஜிட்டல் செயலிகளில் வாங்கும்போது அந்த நிறுவனங்களின் பின்னணியைக் கவனிக்க வேண்டும். பல செயலிகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
குறிப்பு; செய்தியில் இடம்பெற்ற அனைத்தும் கோப்பு படங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu