‘ஆர்கானிக்’ ரோஜா எண்ணெய்: பெண்கள் எளிதாக தயாரித்து லாபம் ஈட்டலாம்

பெண்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரித்து நல்ல லாபம் ஈட்டலாம். இது பெண்களுக்கு இளமையான தோற்றத்தை தரக்கூடியதாகும்.
தற்போது உணவுப் பொருட்களை தொடங்கி எல்லாவற்றிலுமே இயற்கையான தயாரிப்புகளை மக்கள் விரும்ப தொடங்கி விட்டார்கள். இயற்கை உணவிற்கு தனி மரியாதை உள்ளது. அதேபோல் இயற்கையாக தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் குறிப்பாக மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.
நவீன முறையில் தயாரிக்கும் எண்ணையை விட மரச்செக்கு எண்ணெய் மக்கள் விரும்பி வாங்கி உணவில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு பக்க விளைவுகள் இல்லாத தன்மை இருக்கிறது என்று பொருள். அந்த வகையில் இயற்கையான முறையில் ரோஜா எண்ணெய் தயாரிப்பது பற்றி இங்கு காணலாம்.
மலர்களில் எத்தனை மலர்கள் வண்ண வண்ணமாக பூத்துக் குலுங்கினாலும் ரோஜா இதழுக்கு என்று தனி மரியாதை உள்ளது. அதனால் தான் இந்தியாவின் முதல் பிரதமர் ஆசிய ஜோதி என அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு தினமும் தனது சட்டை பையில் ஒரு ரோஜா பூவை அணிந்து கொண்டு உலக நாடுகளுக்கு சென்று வந்தார். ரோஜா காதலின் சின்னமாகவும் கருதப்படுகிறது. ரோஜா பூவுக்கு தனி வாசனை உண்டு ரோஜாவை மலர்களாக மட்டுமல்லாமல் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவும் பார்க்கலாம். ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு சர்வதேச அளவில் மார்க்கெட் உள்ளது.
ரசாயனம் சேர்க்காமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களுக்கும் வீட்டு தயாரிப்புகளுக்கும் தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெண்கள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது ஆர்கானிக் ரோஜா எண்ணெய்.
முதலில் இதை சிறிய அளவில் தயாரித்து உபயோகப்படுத்தி பார்க்க வேண்டும். பிறகு இதன் பலன்களை பற்றி கூறி நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விற்பனை செய்யலாம். இதன் மூலம் பலனடைபவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள். ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்
ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்.
ஆர்கானிக் ரோஜா பூக்கள் இரண்டு கப்
செக்கிலாட்டிய தேங்காய் எண்ணெய் முக்கால் கப்.
ஆர்கானிக் ரோஜா பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .அவற்றை தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த ரோஜா இதழ்களை மெல்லிய பருத்தி துணியில் போட்டு ஈரம் நீங்கும் வரை உலர்த்த வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும் பின்பு அத்துடன் ரோஜா விழுதை சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும்
சிறிது நேரம் கழித்து ரோஜா இதழ்களின் நிறம் மாறி எண்ணெய் பிரிந்து மேலே நிற்கும். அப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும் பாத்திரத்தை ஒரு வலை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.( சாதாரண தட்டு கொண்டு மூடினால் நீராவி துளிகள் எண்ணெயில் கலந்து விடும்) இதனை ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்கு அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு சுத்தமான பருத்தி துணியை கொண்டு எண்ணையை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம். ஒரு பங்கு ரோஜா எண்ணெயு டன் 10 பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். ரோஜா இதழ்கள் கருகி விடாமல் எண்ணெயை கவனமுடன் காய்ச்ச வேண்டும் ஆர்கானிக் ரோஜா எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு உபயோகப்படுத்தலாம் .இது சரும மற்றும் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கும். கண்களுக்கு கீழ்படரும் கருவளையத்தை நீக்கும். புருவ முடிகளை அடர்த்தியாக்கும். நகங்களுக்கு உறுதியும் பளபளப்பும் அளிக்கும். சருமத்தின் சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் தரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu